
சட்டசபையில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 100ஐ தொட்டு, செஞ்சுரி அடிக்க நினைத்திருந்த தி.மு.க.,வுக்கு, பென்னாகரம் எம்.எல்.ஏ.,வின் மறைவு, தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது.சட்டசபை பொதுத் தேர்தலில் தி.மு.க.,வுக்கு 96 இடங்கள் கிடைத்தன. சட்டசபையில் 100 எம்.எல்.ஏ.,க்கள் பலத்தை எப்படியாவது பெற தி.மு.க., விரும்பியது.
மதுரை மேற்கு தொகுதியை அ.தி.மு.க., விடம் இருந்தும், திருமங்கலம் தொகுதியை ம.தி.மு.க.,விடம் இருந்தும் இடைத்தேர்தல் மூலம் பறித்ததால், சட்டசபையில் தி.மு.க.,வின் பலம் 98 ஆக உயர்ந்தது. எனினும், சபாநாயகரை சேர்க்காமல், அக்கட்சியின் பலம் 97 ஆக தான் இருந்தது.இந்நிலையில், ராஜகண்ணப்பன் தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு அ.தி.மு.க.,வுக்குச் சென்றதால், தி.மு.க., பலம் 96 ஆக குறைந்தது.
கம்பம், இளையான்குடி, தொண்டாமுத்தூர், ஸ்ரீவைகுண்டம் மற்றும் பர்கூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தது. இதில், பர்கூர் அ.தி.மு.க., வசமும், கம்பம் மற்றும் தொண்டாமுத்தூர் ம.தி.மு.க., வசமும் இருந்தவை. எனவே, பர்கூர், கம்பம், இளையான்குடி மற்றும் தொண்டாமுத்தூரில் வென்றால், தி.மு.க., "செஞ்சுரி' அடித்து விடலாம் என கணக்கிடப்பட்டது.
ஆனால், தொண்டாமுத்தூர் தொகுதியை பெறுவதில் காங்கிரஸ் உறுதியாக இருந்ததால், அந்த எண்ணம் ஈடேறவில்லை. இடைத்தேர்தலில் போட்டியிட்ட மூன்று தொகுதிகளிலும் தி.மு.க., வென்றது. இதனால், கட்சியின் பலம் 99 ஆனது. இந்நிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தி.மு.க.,வில் சேர்ந்தார்.இதனால், திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தலில் வென்று, 100 என்ற எண்ணிக்கையை தொட்டு விடலாம் என தி.மு.க., எதிர்பார்த்திருந்தது.
இந்த சமயத்தில், வந்தவாசி தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெயராமன் இறந்தார். இதனால், தி.மு.க., வின் பலம் 98 ஆக குறைந்து விட்டது. தற்போது, திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடப்பதாலும், இரண்டு தொகுதிகளிலுமே தி.மு.க., போட்டியிடுவதாலும், எப்படியும் சட்டசபையில் 100 என்ற எண்ணிக்கையை தொட்டு விட தி.மு.க., திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில், யாரும் எதிர்பாரா விதமாக, பென்னாகரம் எம்.எல்.ஏ., பெரியண்ணன் மரணமடைந்தார். இதனால், தற்போது நடக்கும் இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளில் வென்றாலும், தி.மு.க., "செஞ்சுரி' அடிக்க முடியாது. ஆனால், சட்டசபையில் சபாநாயகரையும் சேர்த்து கணக்கிட்டால், தி.மு.க.,வின் பலம் 100 என்றாகிவிடும்.
எப்படி இருந்தாலும், பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலை வென்று, சபாநாயகரைத் தவிர்த்து 100 உறுப்பினர்கள் என்ற இலக்கை தொட்டு, "செஞ்சுரி' அடிக்கவே தி.மு.க.,வினர் விரும்புகின்றனர்.
No comments:
Post a Comment