செம்மொழி மாநாட்டிற்கு பிறகு எழுத்தாளர் பணியை தொடரவிருப்பதாக புத்தக கண்காட்சி துவக்க விழாவில், முதல்வர் கருணாநிதி பேசினார்.
சென்னை ஷெனாய் நகரில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில், பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே உள்ள ஆங்கிலோ இந்தியன் பள்ளியில், 33வது புத்தக கண்காட்சி நேற்று துவங்கியது. கண்காட்சியை, தமிழக முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்து, தனது பெயரால் பொற்கிழி விருதுகளையும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் விருதுகளையும் வழங்கி, சிறப்புரையாற்றினார்.விழாவிற்கு, நல்லி குப்புசாமி செட்டி தலைமை வகித்தார். அமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்துரை வழங்கினார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர் சேது சொக்கலிங்கம் வரவேற்றார். சங்கச் செயலர் ராம.லட்சுமணன் நன்றி கூறினார்.நிகழ்ச்சியில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் க.ப. அறவாணன், கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் ஜெயகாந்தன் மற்றும் அமைச்சர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்றனர்.
விழாவில், முதல்வர் கருணாநிதி "புத்தகம் எழுதுவது, படிப்பது, தயாரிப்பது என பல்வேறு வகையில் புத்தகத்துடன் தொடர்புடையவர்கள் இணைந்து இந்த விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில், நான் முதலமைச்சராக பங்கேற்பதில் மகிழ்ச்சியடையவில்லை.அறுபது, எழுபது ஆண்டுகளாக எழுதுகிறவன் என்ற முறையில் பங்கேற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் முதல்வர் பதவியில் இருக்கும் போது, செய்த பணியைப் பாராட்டும் போது, எனக்கு அந்த ஒரு கணம் மட்டுமே மகிழ்ச்சி இருக்கும். ஆனால், எனது எழுத்தை, எனது புத்தகத்தைப் பாராட்டினால், அது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியைத் தரும். அதனால், எனது ஆட்சியை புகழ்வதை விட எனது எழுத்து புகழப்படும் போது, நான் பெரிதும் மகிழ்கிறேன்.
இவ்விழாவில், பங்கேற்க இந்த பதவி பயன்படுவது எனக்கு மகிழ்வை அளிக்கிறது. என்னை நீங்கள் இந்த விழாவிற்கு அழைக்காவிட்டாலும் நான் வந்திருப்பேன்.மற்ற எழுத்தாளர்களோடு முன் வரிசையில் அமர்ந்து விழா நடப்பதையும், விருது பெறும் எழுத்தாளர்களையும் கண்டு மகிழ்ந்திருப்பேன். நான் எழுதினேன், எழுதுகிறேன், எழுதிக் கொண்டே இருப்பேன். அதனால் தான், நான் ஒரு விழாவில், செம்மொழி மாநாட்டிற்கு பிறகு, நான் உங்களில் ஒருவனாகி வேறு ஒரு பாதையில் பயணிப்பேன் என்று சொன்னேன்.அந்த வகையில் நான் ஜெயகாந்தன், அறவாணன், வைரமுத்து, சேதுசொக்கலிங்கம் ஆகியோருடன் அமர்ந்து எனது எழுத்துப் பணியை தொடர்வேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.
என்னைப்பற்றி எழுத இடமில்லையா?
விழாவில் முதல்வர் கருணாநிதி ஒரு நூலைப் பற்றி பேசியதாவது:விருது பெற நூல்களை தேர்ந்தெடுக்கும்போது, மிகுந்த கவனம் வேண்டும். என்னிடம் எந்த நூல்களை கொடுத்தாலும், அதை ஓரிரு நாளில் படித்து விடுவேன். என்னை, குன்றக்குடி அடிகளார் சந்தித்த போது, என்னிடம் "சென்னை வரலாறு' என்ற ஒரு நூலை அளித்தார். அறுநூறு பக்கம் கொண்ட அந்த நூலில், போர்த்துகீசியர் வரலாறு முதல் எழுதப்பட்டிருக்கிறது. அந்த நூலிற்கு, கடந்த ஆண்டுகளில் நடந்த இதே விழாவில், விருது வழங்கப்பட்டிருக்கிறது. அந்த நூலை, நான் படித்து பார்த்த போது, ஒரு இடத்தில் கூட தி.மு.க., ஆட்சியைப் பற்றியோ, அண்ணாவைப் பற்றியோ என்னைப் பற்றியோ இல்லை.
கடந்த 96ம் ஆண்டு, அதுவரை மதராஸ் என்று அழைக்கப்பட்டு வந்த தலைநகரை, சென்னை என்று மாற்றியது கூட இடம் பெறவில்லை. ஆனால், கோயம்பேடு மார்க்கெட் திறக்கப்பட்டதை பெருமைபட எழுதியிருக்கின்றனர்.தமிழகத்தை, ஒரு மாதம் மட்டுமே ஆண்ட ஜானகியைப் பற்றிக் கூட அதில் எழுதியுள்ளனர். ஆனால், என்னைப் பற்றி எழுதவில்லை. இதற்கு இடம் இல்லை என்ற காரணம் சொல்ல முடியாது.என்னைப் பற்றி எழுத முடியாத அளவிற்கு நான் என்ன தவறு செய்து விட்டேன். எனவே, இனி விருதுக்கு நூல்களை தேர்ந்தெடுக்கும்போது மிக கவனமாக இருக்க வேண்டும்"இவ்வாறு முதல்வர் பேசினார்.
Wednesday, December 30, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment