Pages

Tuesday, December 29, 2009

சென்னையில் 33வது புத்தக கண்காட்சி இன்று துவக்கம்

சென்னையில் 33வது புத்தக கண்காட்சி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் இன்று (டிச. 30ம் தேதி) மாலை துவங்குகிறது.

புத்தக கண்காட்சியை தமிழக முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். சென்னையில் ஆண்டு தோறும் டிசம்பர் இறுதி முதல் ஜனவரி முதல் வாரம் வரை 10 நாட்களுக்கு புத்தக கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இதில் பல்வேறு பதிப்பகத்தாரின் புத்தகங்கள் இடம் பெறும். புத்தக கண்காட்சியில் வாங்கப்படும் புத்தகங்களுக்கு 10 சதவீத தள்ளுபடி உண்டு. இந்தாண்டு கண்காட்சி டிச. 30 முதல் ஜன. 10ம் தேதி வரை நடக்கிறது. வாரநாட்களில் பிற்பகல் 2.00 மணிமுதல் இரவு 8.30 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11.00 மணி முதல் இரவு 8.30 மணிவரையிலும் கண்காட்சி நடைபெறுகிறது.

கண்காட்சியில் பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச அனுமதி உண்டு. கண்காட்சியை ஒட்டி, நாள்தோறும் பட்டி மன்றம், உரை அரங்கம், கவிதை திருவிழா நடக்கின்றன. அத்துடன் மாணவ, மாணவியருக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. புத்தக கண்காட்சிக்கான ஏற்பாடுகளை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தினர் செய்துள்ளனர்.

துவக்க விழாவில் முதல்வர் பெயரால் ஆறு எழுத்தாளர்களுக்கு பொற்கிழி வழங்கப்படுகிறது. அத்துடன் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் ஐந்து பேருக்கு விருதுககள் வழங்கப்படுகின்றன. விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு, ஜவுளி வர்த்தகர் நல்லிகுப்புசாமி, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர் சேதுசொக்கலிங்கம், சங்க செயலர் ராம.லட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

No comments:

Post a Comment