ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவில் வைகுண்ட ஏகாதசி மஹோத்ஸவத்தில், ராப்பத்து திருவாய்மொழி முதல் திருநாளான இன்று அதிகாலை, பரமபத வாசல் (சொர்க்க வாசல்) திறக்கப்பட்டது.
"பூலோக வைகுண்டம்' என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவிலில், கடந்த 17ம் தேதி திருநெடுந் தாண்டகம் நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி மஹோத்ஸவம் துவங்கியது. 18ம் தேதி பகல்பத்து முதல்நாள் நிகழ்ச்சி நடந்தது. பகல்பத்து திருநாட்களில் ஸ்ரீநம்பெருமாள் நாள்தோறும் ஓர் அலங்காரத்தில் காட்சியளித்தார். பகல்பத்து திருமொழி திருநாளின் பத்தாம் நாளான நேற்று, ஸ்ரீநம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் சேவை சாதித்தார்.
நிகழ்ச்சியில், காலை 6 மணிக்கு ஸ்ரீநம்பெருமாள் நாச்சியார் திருக்கோலத்துடன் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி, பகல்பத்து மண்டபம் சேர்ந்து, அரையர் சேவை, அலங்காரம் அமுது செய்யத் திரை, வெள்ளிச்சம்பா அமுது செய்யத் திரை, உபயக்காரர் மரியாதை, பொதுஜன சேவை, புறப்பாட்டுத் திரை ஆகியவை முடிந்து, மாலை 5.30 மணிக்கு அர்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பாடாகி ஆரியபட்டாள் வாசல் சேர்ந்தார். திருக்கொட்டார பிரகாரம் வழியாக வலம் வந்து, இரவு 7 மணிக்கு கருட மண்டபம் சேர்ந்தார். ஆழ்வாராதிகள் மரியாதையாகி, இரவு 8.30 மணிக்கு கருட மண்டபத்திலிருந்து புறப்பாடாகி, இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சேர்ந்தார். நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.அதைத்தொடர்ந்து, ராப்பத்து திருவாய்மொழி முதல் திருநாளான இன்று அதிகாலை, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் திறப்பு கோலாகலமாக நடந்தது.
அதிகாலை 3.45 மணியளவில் ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து விருச்சிக லக்னத்தில் புறப்பட்டார். காலை 4.45 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நடந்தது. சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, சுவாமி தரிசனம் செய்ய, வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் குவிந்தனர்.
Sunday, December 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment