Sunday, December 27, 2009
ரூ.47,000 கோடி குவித்துள்ளது
நிதி நெருக்கடிக்கு இடையிலும் இந்த ஆண்டில் ஹாலிவுட் திரையுலகம் டிக்கெட் விற்பனையில் ரூ.47,000 கோடி குவித்துள்ளது. டைட்டானிக் இயக்குனரின் அவதார் திரைப்பட வசூல் ஒரே வாரத்தில் ரூ.1,100 கோடியை தாண்டியுள்ளது.ஹாலிவுட் திரைப்படத் துறையின் முக்கிய மார்க்கெட் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள். மொத்த டிக்கெட் வசூலில் இந்த நாடுகள் 75 சதவீத பங்கு வகிக்கின்றன. இந்நிலையில், கடந்த ஓராண்டாக அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட மேற்கத்திய நாடுகள் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றன. எனினும், இந்த நிதி நெருக்கடியால் ஹாலிவுட் திரைப்படங்களின் டிக்கெட் வசூல் பாதித்ததாக தெரியவில்லை. இந்த ஆண்டில் இதுவரை ஹாலிவுட் திரைப்படங்கள் ரூ.47,000 கோடி வசூலை அள்ளிக் கொடுத்துள்ளன. இந்த ஆண்டில் இதுவரை 139 கோடி பேர் தியேட்டர்களில் ஹாலிவுட் படங்களை பார்த்துள்ளனர். இது கடந்த ஆண்டில் தியேட்டர்களுக்கு வந்த ரசிகர்கள் எண்ணிக்கையை விட 3 சதவீதம் அதிகம். 2002ம் ஆண்டு எண்ணிக்கையை விட 12 சதவீத உயர்வு இது. 2007ம் ஆண்டைவிட 2008ம் ஆண்டில் தியேட்டரில் படம் பார்த்தவர்கள் 4.5 சதவீதம் குறைந்தனர்.ஹாலிவுட் படங்களைக் காண ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைப்பதில் தயாரிப்பாளர்கள் புதிய தொழில்நுட்பங்களை கையாளத் தொடங்கியுள்ளனர். மெகா பட்ஜெட் பிரம்மாண்ட படங்கள், முப்பரிமாண படங்களை (3டி) தயாரிக்கின்றனர். இவற்றை டிவிடி, சிடிக்களில் பார்த்தால் திருப்தி ஏற்படாது என்பதால் தியேட்டரில் ரசிகர்கள் அலைமோதுகின்றனர். டைட்டானிக் வெற்றிப் படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூனின் டைரக்ஷனில் சமீபத்தில் வெளியான படம் அவதார் இதற்கு சிறந்த உதாரணம். கடந்த வாரம் வெளியான இந்தப் படம் 3டி தொழில்நுட்பத்தில் வந்துள்ளது. ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் ரூ.1,100 கோடி வசூலைக் குவித்துள்ளது. அத்துடன், அமெரிக்காவில் மட்டும் ரூ.360 கோடி வசூலித்து முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment