பராசக்தி வெளிவந்த பின், "யார் இந்த சிவாஜி கணேசன்?" என்ற கேள்வி நான்கு திசைகளிலும் எதிரொலித்தது. அவருடைய வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ள, ரசிகர்கள் ஆவல் கொண்டனர். இதனால், அவர் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை பல்வேறு பதிப்பகங்கள் வெளியிட்டன. பத்திரிகைகள் அவரை பேட்டி கண்டு, படங்களுடன் பக்கம் பக்கமாக வெளியிட்டன.
சிவாஜி கணேசனின் பூர்வீகம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள வேட்டைத்திடல் என்ற கிராமம். இது மிகவும் செழிப்பானது. அவருடைய தந்தை சின்னையா மன்றாயரின் குடும்பம் அங்குதான் வசித்தது. தாயார் பெயர் ராஜாமணி அம்மாள். அவருடைய தகப்பனார் பெயர் சின்னச்சாமி காளிங்கராயர், அவர் ரெயில்வேயில் அதிகாரியாக பதவி வகித்தவர். திருச்சி, மதுரை பகுதியில் ரெயில்பாதை போடப்பட்டபோது, அதற்கு அவர் பொறுப்பாக இருந்தார்.
சின்னச்சாமி காளிங்கராயருëகு 11_வதாக பிறந்த குழந்தை ராஜாமணி அம்மாள்! மகள் மீது காளிங்கராயருக்கு மிகுந்த பாசம். எனவே ``ராஜாமணி எப்போதும் நம்முடன் இருக்க வேண்டும். ஒரு நல்ல மாப்பிள்ளைக்கு கல்யாணம் செய்து கொடுத்து, பெண்ணையும் மாப்பிள்ளையையும் வீட்டோடு வைத்துக்கொள்ள வேண்டும்" என்று எண்ணினார்.
சிவாஜியின் தந்தை சின்னையா மன்றாயர் அதிகம் படிக்காதவர். ஆயினும் ஒரு மிராசுதார். எனவே, அவருக்கு ராஜாமணியை திருமணம் செய்து கொடுத்து, வீட்டோடு மாப்பிள்ளையாக வைத்துக்கொண்டார். எனினும் சில காலத்துக்குப்பின் சின்னையா மன்றாயர் ரெயில்வேயில் வேலைக்கு சேர்ந்தார். நாகப்பட்டினத்தில் இருந்த ரெயில்வே ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்தார். மனைவியுடன் அங்கு குடியேறினார்.
சின்னச்சாமி காளிங்கராயர் வீடு விழுப்புரத்தில் இருந்தது. பிரசவத்துக்காக அங்கு ராஜாமணி அம்மாள் சென்றார். அங்குதான் 1928 அக்டோபர் 1_ந் தேதி சிவாஜிகணேசன் பிறந்தார். சிவாஜியின் தந்தை சின்னையா மன்றாயர், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டவர்.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலர், தீவரவாத எண்ணம் கொண்டவர்கள். ``அகிம்சை மூலம் வெள்ளையர்களைப் பணிய வைக்க முடியாது. துப்பாக்கி ஏந்தினால்தான், நாட்டைவிட்டு ஓடுவான்" என்ற நேதாஜியின் கொள்கையை கடைபிடிப்பவர்கள்.
அப்போதெல்லாம், ஒரு காரியத்தை நடத்துவது யார் என்று திருவுளச்சீட்டு போட்டுப்பார்ப்பார்கள். "ஆஷ் துரையை சுட்டுக்கொல்வது யார்?" என்று தீவிரவாத இளைஞர்கள் சீட்டு போட்டு பார்த்தபோது, வாஞ்சிநாதன் பெயர் வந்தது. அதனால், அவர், மணியாச்சி ஜங்ஷனில் ஆஷ்துரையை சுட்டுக்கொன்று விட்டு தன்னைத்தானே சுட்டுக்கொண்டு, தற்கொலை செய்து கொண்டார்.
இதேபோல, வெள்ளைக்கார சிப்பாய்கள் செல்லும் ரெயிலுக்கு யார் வெடி வைப்பது என்று, சின்னையா மன்றாயரும் அவர் நண்பர்களும் திருவுளச் சீட்டு போட்டுப்பார்த்தார்கள். அதில் சின்னையாவின் பெயர் வந்தது. அதனால் ரெயிலுக்கு அவர் வெடி வைத்தார். போலீசார் இதைப்பார்த்துவிட்டார்கள். அவரை துரத்திச் சென்றார்கள்.
சின்னையா தப்பி ஓடும்போது, அவரை நோக்கி போலீசார் சுட்டனர். சின்னையா கீழே விழுந்தார். போலீசார் அவரை சூழ்ந்து கொண்டு தடியால் தாக்கினர். சின்னையா தலையில் பலத்த காயம் அடைந்தார். அவரை கைது செய்து, வேலூருக்கு கொண்டுபோய், ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். போலீஸ் காவலுடன் சிகிச்சை பெற்றார். அவர் குணம் அடைந்த போதிலும், காது சரியாகக் கேட்கமுடியாமல் போய்விட்டது. சின்னையா மன்றாயர் கைது செய்யப்பட்ட அதே நாளில்தான் சிவாஜி பிறந்தார்!
ரெயிலுக்கு வெடி வைத்ததாக சின்னையா மன்றாயர் மீது வழக்கு தொடரப்பட்டது. அதில் அவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
"மருமகன் ஜெயிலுக்கு போய்விட்டாரே" என்று சிவாஜியின் தாத்தா மனம் நொந்தார். நாளுக்கு நாள், உடல் நலிந்தது. சிலகாலத்துக்குப்பின் அவர் மரணம் அடைந்தார். சிவாஜிக்கு திருஞான சம்பந்த மூர்த்தி, கனக சபாநாதன், தங்கவேலன் என்று மூன்று அண்ணன்கள். சிவாஜிக்கு சூட்டப்பட்ட பெயர் கணேசமூர்த்தி.
சிவாஜியின் தாத்தா இறந்துபோன பிறகு, ராஜாமணியம்மாள் குடும்பத்துடன் திருச்சியில் குடியேறினார். திருச்சி அருகே, பொன்மலைக்குப் பக்கத்தில் உள்ள சங்கிலியாண்டபுரத்தில் ராஜாமணி அம்மாள் குடும்பத்துக்கு ஒரு வீடு இருந்தது. அங்கு வசிக்கலானார்.
சிவாஜிகணேசன் வளர்ந்தது, நாடக நடிகரானது, சினிமா உலகில் புகுந்தது எல்லாமே இந்த வீட்டில் வசித்த போதுதான். எஸ்.எஸ்.வாசனின் தாயாரும், எம்.ஜி.ஆரின் தாயாரும் தங்கள் குடும்பத்தை காப்பாற்ற எப்படி கஷ்டப்பட்டார்களோ, அதுபோல் ராஜாமணி அம்மாளும் மிகவும் கஷ்டப்பட்டார்.
`தந்தையோ இறந்து போய்விட்டார். கணவர் சிறை சென்று விட்டார். பிழைக்க என்ன செய்வது? குழந்தைகளை எப்படி படிக்க வைப்பது' என்று யோசித்த ராஜாமணி அம்மாள், பால் வியாபாரம் செய்ய முடிவு செய்தார். கறவை மாடு வாங்கி, பால் விற்கத் தொடங்கினார். நாளடைவில், ராஜாமணி அம்மாள் என்ற பெயர் மறைந்துபோய், ``பால்காரம்மா" என்ற பெயர் நிலைத்து விட்டது!
வீட்டுக்கு அருகே கிறிஸ்தவ பள்ளிக்கூடம் ஒன்று இருந்தது. அங்கு சிவாஜியை சேர்த்துவிட்டார், ராஜாமணி அம்மாள். அப்போது சிவாஜிக்கு 4 வயது. சிறையில் இருந்த சின்னையா மன்றாயர், நல்ல மெக்கானிக் என்பதால் சிறையில் மின்சாரம் சம்பந்தப்பட்ட வேலைகளை செய்வது, தண்ணீர் டாங்க்கை பழுது பார்ப்பது போன்றவற்றை செய்து, சிறை அதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்கினார்.
எனவே நன்னடத்தைக்காக, 7 வருட தண்டனை 4 ஆண்டு தண்டனையாகக் குறைக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்டார். விடுதலையாகி வீடு திரும்பினார், சின்னையா மன்றாயர். அப்போது சிவாஜிக்கு 4 வயது. ``இவர்தான் உன் அப்பா" என்று, தன் கணவரைக் காண்பித்தார், ராஜாமணி அம்மாள்.
கண்களில் கண்ணீர் வழிய, தந்தையைக் கட்டித் தழுவிக் கொண்டார், சிவாஜி.
Sunday, December 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment