Pages

Tuesday, December 29, 2009

மலேசியாவில் சித்ரவதை தாங்காமல் தப்பினோம்


அதிக சம்பளத்துக்கு ஆசைப்பட்டு வேலூர், கடலூர் மாவட்டத்தில் இருந்து மலேசியாவுக்கு வேலைக்கு சென்ற வாலிபர்கள் 29 பேர் கொத்தடிமையாக நடத்தப்பட்டனர். சம்பளமே வழங்கா மல் அடித்து உதைத்து சித்ரவதை செய்ததால் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.வேலூர் மாவட்டம் புல்லூர் கிராமத்தை சேர்ந்த வடிவேல், ஒடுகத்தூரை சேர்ந்த பழனி, சதீஷ் ஆகிய 3 பேர், மலேசியாவில் கொத்தடிமைகளாக இருந்து தமிழகத்துக்கு தப்பி வந்துள்ளனர். இதுபற்றி வடிவேல் கூறியது:வேலூர் மாவட்டம் பள்ளத்தூரை சேர்ந்த கருணாகரன் என்பவர் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆள் அனுப்புவதாகவும், அங்கு மாதம் ரூ.50,000 வரை சம்பளம் கிடைக்கும் என்றும் கூறினார். இதை நம்பி நானும், ரஞ்சித்குமார், சுரேஷ் உட்பட 15 பேருடன் கடந்த 2007ல் மலேசியாவுக்கு சென்றோம்.

எங்களை பாசிகுல்லா என்ற இடத்துக்கு, கம்பெனி உரிமையாளர் ஜில் மணியம் என்பவர் அழைத்து சென்றார். அங்கு கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜசேகரன் உட்பட 14 பேரும் அழைத்து வரப்பட்டனர். அங்குள்ள ராட்சத கப்பலில் புகை சூழ்ந்த 150 அடி உயர ஆயில் டேங்க் மீது ஏறி சுத்தம் செய்ய கூறினர். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆரம்பத்தில் 3 மாதம் மட்டும் குறைவாக சம்பளம் கொடுத்தனர். பின்னர் சம்பளம் தருவதையே நிறுத்தி விட்டனர். சம்பளம் கேட்டால், ‘கொத்தடிமைகளாகத்தான் உங்களை இங்கு கொண்டு வந்திருக்கிறோம். தருவதை சாப்பிட்டுவிட்டு, ஒழுங்காக வேலையைப் பாருங்கள்’’ என்று கூறி நள்ளிரவில் வந்து அடித்து உதைத்தனர். இதனால் பழனி, சதீஷ் ஆகியோருடன் அங்கிருந்து தப்பி இந்திய தூதரகத்துக்கு சென்றோம்.

அங்கு ‘எங்களது பாஸ்போர்ட் திருடு போய்விட்டது. எங்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புங்கள்’ என்று கண்ணீர் மல்க கூறினோம். இதையடுத்து, எங்களுக்கு இந்திய தூதரகம் அவுட்பாஸ் வழங்கியது. அதன்மூலம் இந்தியா வந்தோம். மற்றவர்களின் நிலைமை மோசமாக உள்ளது. அவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு வடிவேல் கூறினார்.
இதற்கிடையே, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மலேசியாவுக்கு 14 பேரை அனுப்பிய ஏஜென்ட் கருணாகரனை, புகாரின் பேரில் போலீசார் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை காவலில் எடுத்து, தீவிரமாக விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment