Pages

Saturday, December 26, 2009

அமெரிக்க விமானத்தை நடுவானில் தகர்க்க முயற்சி; வெடி மருந்துகளுடன் தீவிரவாதி கைது


அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு அல்கொய்தா தீவிரவாதிகள் 4 விமானங்களை கடத்திச்சென்று இரட்டை கோபுரம் மற்றும் அமெரிக்க ராணுவ தலைமை அலுவலகத்தை தகர்த்தனர். அதை தொடர்ந்து மற்றொரு தீவிரவாதி விமானத்தில் ஷூவில் வெடிமருந்தை மறைத்து கொண்டு சென்று நடுவானில் தீப்பற்ற வைக்க முயற்சித்தான்.

இதனால் அமெரிக்காவில் விமானங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் கொண்டு வரப்பட்டன. இதையும் மீறி இப்போது அமெரிக்க விமானம் ஒன்றை நடுவானில் வெடி மருந்து வைத்து தகர்க்க முயற்சி நடந்துள்ளது.

நைஜீரியா நாட்டில் உள்ள லாகோஸ் நகரில் இருந்து நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் நகருக்கு ஒரு விமானம் வந்தது. அதில் அமெரிக்கா செல்லும் பயணிகளும் வந்தனர். அவர்கள் அமெரிக்காவில் உள்ள டெட்ராய்ட் நகருக்கு அமெரிக்காவுக்கு சொந்தமான நார்த் வெஸ்ட் ஏர்லைன் விமானத்தில் ஏற்றி விடப்பட்டனர். அதில் 278 பயணிகள் இருந்தனர்.

விமானம் டெட்ராய்ட் நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது 3-வது வரிசையில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் திடீரென குனிந்து தனது காலில் இருந்த ஏதோ ஒரு பொருளை எடுத்து தீப்பற்ற வைத்தார்.

உடனே அருகில் இருந்த பயணிகள் அலறினார்கள். மற்ற பயணிகள் பாய்ந்து சென்று அவரை மடக்கி தீ பரவவிடாமல் தடுத்தனர். விமான ஊழியர்களும் தீயணைப்பு கருவியுடன் ஓடிவந்து தீயை உடனடியாக அணைத்தனர்.

பயணிகளும், ஊழியர்களும் அவரை மடக்கிப் பிடித்து கட்டிப்போட்டனர். பின்னர் டெட்ராய்ட் நகரில் விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது. அங்கு தயாராக இருந்த அமெரிக்க போலீசார் அவரை கைது செய்தனர்

போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த பயணி அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு உடையவன் என்று தெரிய வந்தது. விமானத்தை தகர்க்கும் நோக்கத்துடனே தீப்பற்ற வைத்து இருக்கிறான்.

அவனது பெயர் அப்துல் முதலாத் (வயது 23). நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவன். லண்டன் கல்லூரி மாணவர் என்று தெரிந்தது. வெடிமருந்தை ஒரு திரவத்தில் கலந்து அதை காலில் மறைத்து டேப் போட்டு ஓட்டி எடுத்து வந்துள்ளான். விமானம் அமெரிக்காவுக்குள் பறந்து கொண்டிருந்தபோது காலில் கட்டி வைத்திருந்த மருந்தில் தீப்பற்ற வைத்துள்ளான்.

அதை அருகில் இருந்த பயணிகள் பார்த்து விட்டனர். இதனால் உடனடியாக மடக்கிப்பிடித்து விட்டனர்.

வெடி மருந்து திரவத்தில் கலந்து இருந்ததால் அது சரியாக தீப்பற்றவில்லை. மேலும் வெடிமருந்து அளவு மிகவும் குறைவாக இருந்தது. எனவேதான் தீப்பற்ற வைத்தபோது லேசாக புகைந்துள்ளது. எதிர்பார்த்தப்படி அது வெடிக்கவில்லை. பெரிய அளவில் தீப்பற்றவும் இல்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக விமானம் தப்பியது. 278 பயணிகளும் உயிர் தப்பினார்.

தீ பிடித்ததில் தீவிரவாதி அப்துல் முதலாத் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பயணிகள் 2 பேருக்கும் சிறிய அளவில் தீக்காயம் ஏற்பட்டது. அப்துல் முதலாத்தை அமெரிக்க போலீசார் தனி இடத்துக்கு கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிபர் ஒபாமா உடனடியாக பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டார். எனவே அனைத்து விமானங்களுக்கும், விமான நிலையங்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது.

பலத்த பாதுகாப்பையும் மீறி தீவிரவாதி எப்படி வெடிமருந்தை விமானத்துக்குள் கொண்டு வந்தான் என்று தெரியவில்லை. நைஜீரியா விமான நிலையத்தில் பாதுகாப்பில் குளறுபடி இருந்துள்ளது. அதுபற்றியும் விசாரணை நடக்கிறது.

இந்த வெடி பொருளை ஒமன் நாட்டில் இருந்து பெற்றதாக அப்துல் முதலாத் கூறி இருக்கிறான். எனவே இதில் பெரும் சதி வலை இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

டெட்ராய்ட் நகரில் விமானம் தரை இறங்கியதும், அதை தனியான இடத்துக்கு கொண்டு சென்றனர். விமானத்தில் இருந்த பயணிகள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. தீவிர விசாரணைக்கு பிறகே வெளியே அனுப்பப்பட்டனர். அதில் ஒரு பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர் அப்துல் முதலாத் கூட்டாளியாக இருக்கலாம் என கருதி காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

சம்பவம் குறித்து அப்துல் முதலாத் அருகே அமர்ந்து பயணம் செய்த பெண் பயணி ரெய்ச்சல் கூறியதாவது:-

விமானம் டெட்ராய்ட் நகரை நெருங்கியதால் நாங்கள் எல்லாம் இறங்குவதற்கு தயாரானோம். அப்போது என் அருகே பலூன் வெடிப்பது போன்று ஒரு சத்தம் கேட்டது. தீப்பிளம்பும் தெரிந்தது. அப்போதுதான் அந்த பயணி தீப்பற்ற வைத்தது தெரிந்தது. நாங்கள் விபரீதம் நடக்க போகிறது என பயத்தில் அலறினோம். அப்போது ஒரு பயணி தனது கையில் இருந்த துணியை தீயில் போட்டு அடித்து அணைத்தார். நாங்களும் உதவி செய்து தீயை அணைத்தோம். மற்றவர்கள் அவனை மடக்கி பிடித்து கொண்டனர்.

நாங்கள் உயிர் பிழைப்போம் என்று நினைத்து பார்க்கவே இல்லை. அதிர்ஷ்டவசமாக தப்பிவிட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment