கோவையில், மாத்திரைக்குள் "ஸ்டாப்ளர் பின்' இருந்தது தொடர்பான வழக்கில், மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்கள், 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, கோர்ட் உத்தரவிட்டது.கோவை, கவுண்டம்பாளையம், ஜெய்நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவிக்கு கடந்த ஆண்டில் உடல்நலம் பாதிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் ரோடு, காந்தி நகரிலுள்ள துளசி பார்மசியில் மாத்திரைகளை வாங்கினார். 30 மாத்திரை கொண்ட "ஸ்ட்ரிப்'பை 31.40 ரூபாய்க்கு வாங்கினார்.ஒரு மாத்திரைக்குள் பாதியளவு மறைந்த நிலையில் "ஸ்டாப்ளர் பின்' இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். மாத்திரையை, விற்பனை செய்த கடையில் காண்பித்தார். கடையில் இருந்தவர்கள், "இது எங்களுடைய தவறு அல்ல; மருந்து கம்பெனியை தான் கேட்க வேண்டும்' என கூறிவிட்டனர்.
வேறு மாத்திரையும் தர மறுத்துவிட்டனர்.அதிருப்தி அடைந்த கிருஷ்ணமூர்த்தி, மும்பையிலுள்ள "பிரான்கோ இந்தியா பார்மா' கம்பெனியின் நிர்வாக இயக்குனரிடம் விளக்கம் கேட்டு பதிவுத்தபால் அனுப்பினார்.தபாலை பெற்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வந்த பிரதிநிதி, கிருஷ்ணமூர்த்தியை சந்தித்தார்.
சம்பந்தப்பட்ட மாத்திரையை தங்களிடம் ஒப்படைத்தால், அதனால் ஏற்படும் ஆபத்து குறித்து ஆராயப்படும், எனக் கூறினார். மாத்திரையை தர மறுத்த கிருஷ்ணமூர்த்தி, அதை போட்டோ எடுத்து, மருந்து தயாரிப்பு நிறுவன பிரதிநிதியிடம் கொடுத்தனுப்பினார்.
மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனையில் சேவைக்குறைபாடு மேற்கொண்ட பிரான்கோ பார்மா நிறுவனம் மற்றும் மாத்திரையை விற்பனை செய்த கவுண்டம்பாளையம் துளசி பார்மசி உரிமையாளர் ஆகியோர் மீது, மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு கோரினார்.
நீதிபதி ஸ்ரீராமுலு, உறுப்பினர் ரத்தினம் ஆகியோர் வழக்கை விசாரித்து, மாத்திரைக்கு கொடுத்த விலை 31.40 ரூபாய், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு இழப்பீடாக 25 ஆயிரம் ரூபாய் மற்றும் வழக்குச் செலவுத்தொகையாக 1,000 ரூபாயை இரண்டு மாதத்தில், கிருஷ்ணமூர்த்திக்கு வழங்க, மருந்து தயாரிப்பு நிறுவனம் மற்றும் விற்பனையாளருக்கு உத்தரவிட்டனர்.
Thursday, December 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment