ஆந்திராவில் கவர்னராக இருந்த என்.டி.திவாரி மீது செக்ஸ் குற்றச்சாட்டு கூறப்பட்டது. 3 பெண்களுடன் அவர் இருக்கும் காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதால் காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
என்.டி.திவாரியை அதிரடியாக பதவி நீக்கம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. அதற்கு முன்னதாக அவரை பதவியில் இருந்து விலகுமாறு மத்திய உள்துறை நோட்டீசு அனுப்பியது. இதையடுத்து தன் உடல்நிலை காரணமாக கவர்னர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்கு திவாரி கடிதம் அனுப்பினார். அவரது ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்.
பதவி விலகிய பிறகும் தொடர்ந்து ஐதராபாத்தில் தங்கி இருக்க என்.டி.திவாரி விரும்பவில்லை. நேற்றே அவர் ஆந்திராவில் இருந்து ஓசையின்றி வெளியேறினார். தன் உடமைகள் அனைத்தையும் லாரி ஒன்றில் யாருக்கும் தெரியாமல் அவர் முதலில் அனுப்பினார். பிறகு அவர் கவர்னர் மாளிகையில் இருந்து தனியாக வெளியேறினார்.
அவர் விமான நிலையத்துக்கு புறப்படும் முன்பு ஆந்திர முதல்- மந்திரி ரோசய்யா, தலைமை செயலாளர் ராம்சந்த் ரெட்டி இருவர் மட்டும் சந்தித்து பேசினார்கள். அவர்களிடம் திவாரி விடைபெற்றார்.
பொதுவாக ஒரு மாநிலத்தில் இருந்து கவர்னர் பதவி நிறைவு செய்து புறப்படும்போது அவருக்கு சிறப்பான வழியனுப்பு விழா நடத்தப்படும். அரசு உயர் அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள், கட்சித் தலைவர்கள் அனைவரும் அந்த விழாவில் கலந்து கொள்வார்கள்.
ஆனால் நேற்று என்.டி. திவாரி புறப்பட்டு சென்றபோது இந்த மரபு எதுவும் கடைபிடிக்கப்படவில்லை. செக்ஸ் குற்றச்சாட்டு காரணமாக அவர் ஓசையின்றி கண்கலங்க புறப்பட்டு சென்றது பரிதாபமாக இருந்தது.
இந்த நிலையில் ஆந்திர கவர்னராக கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ள சத்தீஸ்கர் கவர்னர் இ.எஸ்.லட்சுமி நரசிம்மன் நேற்றிரவு ஐதராபாத் வந்தார். பேகம்பட் விமான நிலையத்தில் அவரை முதல்- மந்திரி ரோசய்யா மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
இன்று காலை 9.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில் ஆந்திர கவர்னராக லட்சுமி நரசிம்மன் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆந்திர ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.ரமேஷ் தவே பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஆந்திர கவர்னராக பொறுப்பேற்றுள்ள லட்சுமி நரசிம்மன் முன்பு ஆந்திராவில் உயர் போலீஸ் அதிகாரியாகவும், ஆந்திர உளவுத்துறை தலைவராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Monday, December 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment