Pages

Thursday, December 31, 2009

மறக்க முடியுமா 43


சிவாஜி கணேசன், 7-வது வயதிலேயே நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடிகரானார். பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே, சிவாஜிக்கு நடிப்பதிலும், பாடுவதிலும் ஆர்வம் இருந்தது.

ஒருமுறை, ``வீரபாண்டிய கட்டபொம்மன்" நாடகத்தைப் பார்க்க தந்தையுடன் சென்றார். அக்காலத்தில், சின்ன வேடங்களுக்கு ஆட்கள் தேவைப்பட்டால், நாடகத்துக்கு வரும் சிறுவர்களில் சிலரை அழைத்துப் போய், மேடையில் ஏற்றி விடுவார்கள்.

``கட்டபொம்மன்" நாடகத்தில், வெள்ளைக்கார சிப்பாய் வேடத்தில் நடிக்க சிலர் தேவைப்பட்டதால், சிவாஜியை நாடகக்காரர்கள் அழைத்துச் சென்றுவிட்டார்கள். வெள்ளைக்கார சிப்பாய்கள் அணிவகுத்து வரும் காட்சியில், அந்த சிப்பாய்களில் ஒருவராக சிவாஜியும் நடந்து வந்தார்.

நாடகம் முடிந்து வீட்டுக்குச் சென்றதும், சிவாஜிக்கு அவர் அப்பாவிடம் உதை கிடைத்தது! ஏனென்றால் தேசியவாதியான சின்னையா மன்றாயருக்கு வெள்ளைக்காரர்கள் என்றாலே பிடிக்காது. சிவாஜி, வெள்ளைக்கார சிப்பாய் வேடம் போட்டதால், அவருக்கு அளவு கடந்த கோபம்! ``டேய், கூத்தாடிப் பயலே! உனக்கு என்ன தைரியம் இருந்தால், என் எதிரியின் படையில் சேர்ந்து கூத்தாடுவாய்!" என்று கூறியபடி அடித்தார்.

இதனால் சிவாஜிக்கு காய்ச்சல் வந்துவிட்டது. படுக்கையில் போய் விழுந்தார். ``நாமும் நடிகனாக வேண்டும். கட்டபொம்மனாக நடிக்க வேண்டும்" என்ற எண்ணம், மனதில் ஆழமாகப் பதிந்தது.

இந்த நேரத்தில், யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளையின் ``மதுரை ஸ்ரீபாலகான சபா" என்ற நாடகக்கம்பெனி திருச்சியில் முகாமிட்டு நாடகங்கள் நடத்தி வந்தது. (யதார்த்தம் பொன்னுசாமிபிள்ளை, என்.எஸ்.கிருஷ்ணன் நடித்த பெரும்பாலான படங்களில் அவருடன் நடித்தவர். பிற்காலத்தில் சிவாஜி நடித்த ``தூக்கு தூக்கி"யில், வாத்தியாராக நடித்தவர்.)

இந்த நாடகக் குழுவில் சேர்ந்து விடவேண்டும் என்று சிவாஜி விரும்பினார். நாடகக் குழுவினர், திருச்சியில் நாடகங்கள் நடத்தி முடித்துவிட்டு, வெளியூருக்கு செல்ல ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர். நாடகக் கம்பெனிக்கு சிவாஜி சென்றார். ``எனக்கு பாடத்தெரியும். ஆடத்தெரியும். நான் அப்பா_ அம்மா இல்லாத அனாதை. நாடகத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்.

அப்போது சிவாஜி நன்றாகப் பாடும் அளவுக்கு பயிற்சி பெற்றிருந்தார். அவரை ஒரு பாட்டு பாடச் சொன்னார்கள். ``பழனிவேல் இது தஞ்சம்" என்ற பாடலை சிவாஜி பாடினார். நாடகக் கம்பெனிக்காரர்களுக்குப் பிடித்துவிட்டது. உடனே கம்பெனியில் சேர்த்துக் கொண்டார்கள். அப்போது, அந்தக் கம்பெனியில் காக்கா ராதாகிருஷ்ணனும் நடிகராக இருந்தார். அவர், சிவாஜியின் பக்கத்து வீட்டுக்காரர்.

சிவாஜியைப் பார்த்த அவருக்கு ஒரே ஆச்சரியம். ``இங்கே எப்படியடா வந்தாய், கணேசா!" என்று கேட்டார். ``நான் வீட்டுக்கு தெரியாமல் இந்த கம்பெனியில் வந்து சேர்ந்துவிட்டேன். வெளியே யாரிடமும் சொல்லிவிடாதே" என்று சிவாஜி கேட்டுக்கொண்டார்.

நாடகக் கம்பெனி, திருச்சியில் இருந்து திண்டுக்கல்லுக்கு சென்று முகாமிட்டது. அந்த நாடகக் கம்பெனியில், புது நடிகர்களுக்கு பயிற்சி அளிக்கும் வாத்தியாராக சின்ன பொன்னுசாமி படையாச்சி என்பவர் இருந்தார். இவர்தான், சிவாஜி கணேசனுக்கு நடிப்புப் பயிற்சி அளித்தார்.

``சின்ன பொன்னுசாமிதான் என் நாடக குரு" என்று சிவாஜி குறிப்பிட்டுள்ளார். சிவாஜி நடித்த முதல் நாடகம் ``ராமாயணம்" அதில் அவர் போட்ட வேடம் சீதை. ``யாரென இந்தப் புருஷனை அறிகிலேன்" என்ற பாட்டைப்பாடி, அதற்கு ஏற்ற மாதிரி ஆட்டம் ஆடி நடித்தார்.

முதல் நாளே சிறப்பாக நடித்தார், சிவாஜி. வேஷத்தை கலைத்து உள்ளே சென்றபோது, வாத்தியார் பொன்னுசாமி அவர் முதுகில் தட்டிக்கொடுத்து, ``மிகவும் நன்றாக நடித்தாய்" என்று பாராட்டினார்.

நாட்கள் ஆக ஆக, புதுப்புது வேடங்களை ஏற்று நடித்தார், சிவாஜி. சீதை வேஷம் போட்ட அவர், பிறகு பரதன் வேடம் போட்டார். சூர்ப்பனகை அழகியாக மாறி ராமனை மயக்கும் கட்டத்தில், அந்த அழகு சூர்ப்பனகையாக நடித்தார். ராவணனின் மகன் இந்திரஜித் வேடமும் அவருக்கு கிடைத்தது.

இப்படி, சிறுவனாக நாடகங்களில் நடித்தபோதே, மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் ஆற்றலைப் பெற்றார். பல்வேறு நாடக வசனங்கள் அவருக்கு மனப்பாடம். எனவே, திடீரென்று எந்த வேடத்தையும் கொடுத்து நடிக்கச் சொன்னாலும், அவர் ஏற்று நடித்தார்.

அந்தக் காலத்தில், நாடகத்தில் நடிக்கும் சிறுவர்கள் வெளியே எங்கேயும் போக முடியாது. கம்பெனியின் வீட்டிலேயே அடைந்து கிடக்க வேண்டும். ``சிறை" வைக்கப்பட்டது மாதிரிதான்.

``ஊருக்கு வா" என்று பெற்றோர் கடிதம் எழுதினால், அதை பையன்களிடம் கொடுக்கமாட்டார்கள். கடிதங்களைப்பிரித்து படித்துப்பார்த்துவிட்டு, கொடுக்கக்கூடியதாக இருந்தால் மட்டும் கொடுப்பார்கள். ஒரு முறை காக்கா ராதாகிருஷ்ணன் கெஞ்சிக் கூத்தாடி, எப்படியோ அனுமதி பெற்று ஊருக்கு போய்விட்டு வந்தார். ``என்ன ராதாகிருஷ்ணா! என் வீட்டுக்குப் போனாயா? எல்லோரும் சவுக்கியமா?" என்று சிவாஜி விசாரித்தார்.

``எல்லோரும் நன்றாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் உனக்கு ஒரு துயரச்செய்தி கணேசா!" என்று கூறினார், ராதாகிருஷ்ணன். ``என்ன?" என்று பதற்றத்துடன் சிவாஜி கேட்க, ``உன் அண்ணன் திருஞான சம்பந்தமூர்த்தி இறந்துவிட்டார்" என்று கூறினார், காக்கா ராதாகிருஷ்ணன்.

சிவாஜி பதறினார். உள்ளே சென்று தனியாக அழுதார். ஊருக்குப் போய்வர கம்பெனி நிர்வாகிகளிடம் அனுமதி கேட்டார். அவர்கள் அனுதாபம் தெரிவித்தார்களே தவிர, அனுமதி தரவில்லை.

சில காலத்துக்குப் பிறகு, சிவாஜியின் இன்னொரு அண்ணன் கனகசபாநாதனும் இறந்துபோனார். அப்போதும் சிவாஜி தன் வீட்டுக்குப் போக முடியவில்லை. முக்கிய வேடங்களில் அவர் நடித்து வந்ததால், ஒரு நாள் கூட விடுமுறை கொடுக்க நாடகக் கம்பெனி நிர்வாகிகள் மறுத்துவிட்டனர்.

No comments:

Post a Comment