Pages

Monday, December 28, 2009

அசல் ரூபாயில் உள்ள காந்தி படம் தான் போலி நோட்டு தயாரிப்பில் இடைஞ்சல்

போலி ரூபாய் நோட்டுகளில் காந்தியின் உருவப்படம் சரியாக அச்சிடப்படுவதில்லை. இதை வைத்து போலி ரூபாய் நோட்டுகளை எளிதில் கண்டறிகிறோம் என, தடயவியல் அதிகாரி தெரிவித்துள்ளார்.கோல்கட்டாவில் உள்ள மத்திய தடயவியல் துறை இயக்குனர் சி.என். பட்டாச்சாரியா கூறியதாவது:ஐந்து, பத்து, நூறு, ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் காந்தியடிகள் படம் அச்சிடப்படுகிறது. தற்போது நாடு முழுவதும் அண்டை நாட்டு விஷமிகள் செயலால் போலி ரூபாய் நோட்டு புழக்கத்தில் விடப்படுகிறது.


குறிப்பாக ஆயிரம், ஐநூறு, நூறு ரூபாய் நோட்டுகள் போலியாக அச்சிடப்படுகின்றன. இப்படி போலியாக அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படம் சரியாக அச்சடிக்கப் படுவதில்லை. அந்த படத்தில் காணப்படும் குறைபாடுகளை வைத்து போலி ரூபாய் நோட்டை கண்டறிகிறோம்.மேற்கு வங்கம் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் தற்போது போலி ரூபாய் நோட்டுகள் அதிகம் புழக்கத்தில் உள்ளன. போலி ரூபாய் அச்சடிப்பவர்கள் அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தி அசல் ரூபாய் நோட்டுகளை போன்று அச்சடிக்கின்றனர்.ஆனாலும், நிஜ நோட்டுகளில் உள்ள காந்தி படத்தின் இயல்பை இவர்களால் கொண்டு வர முடியவில்லை. இது, தடயவியல் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.


நாங்கள் மேற்கொண்ட பல போலி நோட்டுகளில் காந்தியின் உருவம் மாறியிருப்பதே, அடையாளம் காண முக்கிய காரணியாக அமைந்தது.இவ்வாறு பட்டாச்சாரியா கூறினார்.மற்றொரு தடயவியல் துறை அதிகாரி சந்தீப் பத்ரா குறிப்பிடுகையில், "436 போலி ரூபாய் நோட்டுகளை பரிசோதித்ததில் ஒரு போலி ரூபாய் நோட்டுக்கூட அசல் ரூபாய் நோட்டில் உள்ள காந்தி படத்துடன் ஒத்து போகவில்லை"என்றார்.

No comments:

Post a Comment