Pages

Sunday, December 27, 2009

தமிழச்சி தங்கபாண்டியன் `மஞ்சணத்தி' நூல் வெளியீடு


கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் கடந்த 2 ஆண்டுகளாக பத்திரிகைகளில் வெளியிட்ட 70 கவிதைகளை தொகுத்து `மஞ்சணத்தி' என்ற பெயரில் கவிதை புத்தகம் தயாரித்துள்ளார். அந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாசரம் பள்ளி வளாகத்தில் உள்ள குமாரராஜா முத்தையா அரங்கத்தில் நடைபெற்றது.

விழாவில், துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி புத்தகத்தை வெளியிட்டார். அதை கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனின் தாயார் ராஜாமணி தங்கபாண்டியன் பெற்றுக்கொண்டார். விழாவில், துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் "
தமிழச்சி தங்கபாண்டியன் விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு என்ற கிராமத்தில் பிறந்து விருதுநகரில் பள்ளி படிப்பை முடித்து, மதுரையில் கல்லூரி படிப்பை முடித்து, சென்னை ராணிமேரி கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக 12 ஆண்டுகள் திறமையாக அவர் பணியாற்றியுள்ளார்.

கடந்த 2007-ம் ஆண்டு நெல்லையில் தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டை நடத்தினோம். அது முதல் மாநாடாகும். அந்த மாநாடு நடத்த முதல்-அமைச்சர் கருணாநிதி எனக்கு அனுமதி தந்தார். மாநாட்டு நிகழ்ச்சியை எப்படி அமைக்கலாம்?, கொடியேற்றுவது யார்?, கொடியேற்றும் பொறுப்பு ஒரு மகளிருக்கு கொடுக்க வேண்டும் என்றபோது, தங்கபாண்டியன் மகள் தமிழச்சியை கொடியேற்ற வைக்கலாமா என்று முதல்-அமைச்சர் கருணாநிதி என்னிடம் கேட்டார்.

நான் அப்போது கூறினேன், அவருக்கு கொடுக்கலாம். ஆனால், அவர் ஆசிரியராக வேலைபார்த்துக் கொண்டிருக்கிறாரே என்றேன். உடனே அவரிடம் போனில் பேசு என்று என்னிடம் அவர் உத்தரவிட்டார். உடனே, போனில் தமிழச்சி தங்கபாண்டியனிடம் பேசினேன். மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒப்புதல் தந்தார்.

அவருக்கு, மகாகவி பாரதி விருது உள்பட பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன. அவரின் கவிதைகளின் சில வரிகள் கல்லூரி பாடத்திட்டத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது. அவர் முதல் முதலாக கவிதை படிக்க காரணம் என்னவென்றால், உலகமே தந்தைதான் என்று எண்ணியிருந்த நேரத்தில், தந்தை தங்கபாண்டியன் திடீரென மறைந்துவிட்டார். அந்த சோகம் தாங்க முடியாமல் முதல் முதலாக கவிதையாக எழுதி வெளியிட்டார்.

தமிழச்சி தங்கபாண்டியன் தி.மு.க. மீது பற்று கொண்டவர். முதல்-அமைச்சர் கருணாநிதி மீதும் பற்றும், பாசமும் கொண்டவர். ஆங்கிலத்திலும், தமிழிலும் புலமை பெற்றவர். அவரது குடும்பமே கழக குடும்பம் ஆகும். தமிழச்சி தங்கபாண்டியன் அரசு பணியை விட்டார். அவர் தந்தை தங்கபாண்டியனும் அரசு பணியை ஒதுக்கிவிட்டுத்தான் அரசியலுக்கு வந்தார்.

தமிழச்சி தங்கபாண்டியன் வருங்காலத்தில் சிறப்பான அரசியலில் உச்சமான நிலைக்கு செல்வார். இசை, நாட்டியம், நாடகம் மற்றும் ஒளிக்காட்சி ஆகியவை மூலம் மஞ்சணத்தி கவிதை புத்தகம் விளக்கம் இங்கு காண்பிக்கப்பட்டது. இதுவரை இப்படி ஒரு புத்தக வெளியீட்டு விழாவை நான் கண்டு ரசித்தது இல்லை.

ஒரு ஆணின் வெற்றிக்கு பின் ஒரு பெண் இருக்கிறார் என்று சொல்வது உண்டு. ஆனால், தமிழச்சி தங்கபாண்டியன் என்ற பெண்ணுக்கு பின்னால் 2 ஆண்கள் துணை நிற்கிறார்கள். ஒன்று அவரது தந்தை மறைந்த தங்கபாண்டியன், மற்றொன்று அவருடைய வாழ்க்கை துணைவர். எனவே, அவரது கணவரை நான் பாராட்டுகிறேன்" என்று மு.க.ஸ்டாலின் பாராட்டி பேசினார்.

கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் " தமிழ்நாட்டில் இளைஞர்களுக்காக, மாணவர்களுக்காக, கிராமத்து பெண்களின் முன்னேற்றத்திற்காக, அவர்கள் சுயமரியாதையுடன் வாழவும் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய பணிகள் எண்ணில் அடங்காது. அவர் 60 மணி நேரம் நின்றுகொண்டே நலத்திட்ட உதவிகளை வழங்கியிருக்கிறார்.

அதுமட்டுமல்ல, அவரது கவனத்திற்கு வரும் ஏராளமான மக்களுக்கு குறிப்பாக ஏழை மாணவர்களுக்கு, அவர்களை படிக்கவைக்க பல உதவிகளை செய்து வருகிறார். ஒரு மாணவருக்கு டியூஷன் படிக்க ஏற்பாடு செய்தார். மற்றொரு மாணவருக்கு படிப்புக்கு நிதி வழங்கினார். அருந்ததி வகுப்பை சேர்ந்த பேராசிரியர் ஒருவருக்கு உரிய ஒதுக்கீட்டின்படி, பேராசிரியர் வேலைக்கு ஏற்பாடு செய்தார். மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உணர்ந்து உதவி செய்து வருகிறார். எதிர்கால தமிழகம் உங்கள் பின்னால் நடைபோடும் "என்றார் .

எழுத்தாளர் சிவசங்கரி " துணை முதல்-அமைச்சரிடம் தமிழ்நாட்டு மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். காரணம் அவர் மக்களுக்கு நிறைய தொண்டு ஆற்றிவருகிறார். தமிழ்நாடு இந்திய நாட்டில் முதல் மாநிலமாக அவர் ஆக்குவார் என்று நம்புகிறேன், அவரை பாராட்டுகிறேன். பல மாநில கவிஞர்களின் கருத்துகள் தமிழச்சி தங்கபாண்டியன் கவிதைகளில் காண முடிகிறது. இவருடைய கவிதையில் கிராமிய சிந்தனை மேலோங்கி நிற்கிறது" என்றார் .

ர்.

விழாவில், கவிஞர்கள் வசந்த சூர்யா, கல்யாண்ஜி, பேராசிரியர் எச்.எஸ்.சிவபிரகாஷ், நாவலாசிரியர் கே.ஆர்.மீரா உள்பட பலர் வாழ்த்தி பேசினார்கள். முன்னதாக நரசிம்மாச்சாரி, வசந்த லட்சுமி குழுவினரின் நாட்டியம், கவிஞர் ரவி சுப்பிரமணியன் பாடல், ஒளிப்பதிவாளர் செழியன் காட்சி அமைப்பு மற்றும் 3-ம் அரங்க நிகழ்ச்சி ஆகியவை தமிழச்சியின் கவிதை பற்றி நேரடி விளக்கம் காண்பிக்கப்பட்டது.

தொடக்கத்தில், உயிர்மெய் பதிப்பகம் சார்பில் கவிஞர் மனுஷ்ய புத்திரன் வரவேற்றார். விழாவில், துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி சாந்தா ஸ்டாலின், மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன், அமைச்சர் தங்கம் தென்னரசு, நடிகர் சிவகுமார், கவிஞர்கள் வாலி, அப்துல் ரகுமான், சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் திருவாசகம், பாதிரியார் வின்சென்ட் சின்னதுரை, சினிமா இயக்குனர்கள் வசந்த், பாலு மகேந்திரா, புலவர் இந்திராகுமாரி, நக்கீரன் கோபால், மு.க.தமிழரசு, திருச்சி சிவா எம்.பி., வசந்தி ஸ்டான்லி எம்.பி., ஆயிரம்விளக்கு உசேன் மற்றும் அய்யப்ப மாதவன், கர்ணா பிரசாத் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை நடிகை சொர்ணமால்யா தொகுத்து வழங்கினார்.

1 comment: