Pages

Tuesday, December 29, 2009

கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற ஈரான் நாட்டு பெண்கள் கைது

சென்னை சிட்டி சென்டரில், கள்ளநோட்டை மாற்ற முயன்ற, ஈரான் நாட்டு பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 23 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


சென்னை மயிலாப்பூர் சிட்டி சென்டரில், "லைப் ஸ்டைல்' கடை உள்ளது. இக்கடைக்கு நேற்று முன்தினம் மாலை இரு வெளிநாட்டு பெண்கள் துணி வாங்க வந்தனர். கடையில், 4,000 ரூபாய்க்கு துணிமணிகளை வாங்கிய அப்பெண்கள், அதற்காக, 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்துள்ளனர். அந்த நோட்டுகளை கடைக்காரர்கள் ஆய்வு செய்தபோது, அவை கள்ளநோட்டுகளாக இருக்கும் என சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, "லைப் ஸ்டைல்' மேலாளர் பிலால், மயிலாப்பூர் போலீசில் புகார் செய்தார். மயிலாப்பூர் போலீசார், இரு பெண்களையும், போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அவர்கள் ஈரானைச் சேர்ந்த, ஹசன் அப்தாகியின் மனைவி அஷ்ரப் மொர்தாசாவி(62), அலிரிசாநாகதியின் மனைவி சலோமி அப்தாகி(29) எனத் தெரிந்தது. அஷ்ரப் மொர்தாசாவி, 2008ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதியிட்ட, ஈரான் பாஸ்போர்ட்டும், சலோமி அப்தாகி, கடந்த ஜூன் 25ம் தேதியிட்ட ஈரான் நாட்டு பாஸ்போர்ட்டும் வைத்திருந்தனர். அஷ்ரப் மொர்தாசாவியிடமிருந்து, 23 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை அனைத்தும் 500 ரூபாய் நோட்டுகள்.


சென்னை மனப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மிஷன் பாபுஜி ஆசிரமத்தில், தியானப் பயிற்சி மேற்கொள்ள வந்திருப்பதாக ஈரான் பெண்கள் தெரிவித்தனர். இதற்காக, கடந்த 3ம் தேதி சென்னை வந்த அவர்கள், ஆசிரமத்திலேயே தங்கியுள்ளனர். இதையடுத்து, ஆசிரமத்தில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு கள்ள நோட்டுகள் எதுவும் இல்லை. கைப்பற்றப்பட்ட நோட்டுகளை ஈரான் மத்திய வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கும், "நூர் மணி எக்சேஞ்சர்' மூலமாகப் பெற்றதாக ஈரான் பெண்கள் தெரிவித்தனர். விசாரணையின் முடிவில், கள்ளநோட்டுகளை வைத்திருந்த மற்றும் மாற்ற முயன்றதாக அஷ்ரப் மொர்தாசாவி கைது செய்யப்பட்டார். அவர் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். மற்றொரு பெண்ணிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட கள்ள நோட்டுகளை ஆய்வு செய்ய ரிசர்வ் வங்கி, நாசிக்கில் உள்ள இந்திய செக்யூரிட்டி பிரஸ் ஆகியவற்றிற்கு போலீசார் அனுப்பவுள்ளனர்.


தொடரும் கள்ள நோட்டு வழக்குகள்: சென்னையில் தி.நகர், ஐஸ்ஹவுஸ் உட்பட கடந்த மூன்று மாதங்களில் கள்ளநோட்டை மாற்ற முயன்ற வழக்கில், 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான, வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. கள்ள நோட்டு கும்பலின் முக்கிய குற்றவாளியான மனருல் ஷேக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் ஜார்க்கண்டில் கைது செய்தனர். அவருக்கு சர்வதேச தொடர்பு இருக்கும் என போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், ஈரானைச் சேர்ந்த பெண் கள்ளநோட்டு வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ( PHOTO COURTESY : DINAMALAR DAILY )

No comments:

Post a Comment