Pages

Tuesday, December 29, 2009

கன்னட நடிகர் விஷ்ணு வரதன் மரணம்

கன்னட திரையுலகின் பிரபல நடிகர் விஷ்ணுவர்தன் (59) இன்று அதிகாலை திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். மைசூருக்கு குடும்பத்தோடு ஓய்வெடுக்க நடிகர் விஷ்ணுவர்தன் சென்றார். அங்கு கிங்ஸ் ஹோட்டலில் தங்கியிருந்தார். இன்று அதிகாலை திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். போகும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

விஷ்ணுவர்தனின் மனைவி பிரபல நடிகை பாரதி. குழந்தைகள் இல்லை. நடிகர் ராஜ்குமாருக்கு பிறகு ஏராளமான ரசிகர்களின் அபிமானத்தை பெற்றவர். விஷ்ணுவர்தனின் உடல் மைசூரிலிருந்து பெங்களூர் கொண்டு வரப்பட்டு ரசிகர்களின் அஞ்சலிக்காக பசவனகுடி நேஷனல் கல்லூரி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவர்தன் உடலுக்கு கன்னட திரையுலகின் நடிகர், நடிகைகள், ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க பெங்களூர் நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாலை இறுதிச்சடங்கு நடக்கிறது.

இவரது மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று நடக்க இருந்த சட்டப்பேரவை மற்றும் சபாநாயகர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, நடிகை சுகாசினி, பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உள்பட ஏராளமான நடிகர், நடிகைகள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

1950ம் ஆண்டு பிறந்த விஷ்ணுவர்தன் கன்னடம், தமிழ், மலையாளம், இந்தி உள்பட ஏராளமான திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். விஷ்ணுவர்தன் கதாநாயகனாக அறிமுகமான முதல் கன்னட படம் நாகராவ். சிறந்த நடிகருக்காக 7 முறை மாநில அரசு விருதை வென்றவர்.

விஷ்ணுவர்தனின் இயற்பெயர் சம்பத்குமார். 197 படங்களில் நடித்துள்ளார். மழலைப் பட்டாளம், அலைகள் போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். விடுதலை, ஸ்ரீராகவேந்திரர் ஆகிய படத்தில் ரஜினியுடன் நடித்துள்ளார். பி.வாசு இயக்கத்தில் ஆப்தரக்ஷகா(சந்திரமுகி - 2) என்ற படத்தில் விஷ்ணுவர்த்தன் சமீபத்தில் நடித்து முடித்தார். இது அவரது 200வது படம். இப்படம் இன்னும் ரீலீசாகவில்லை.

No comments:

Post a Comment