வயதும், அனுபவமும் ஒருவரை பக்குவப்படுத்திவிடும் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்தி நடிகை சுஷ்மிதா சென்.
" நீண்ட நாட்களாக, நீங்கள் அமைதியாக இருப்பதன் காரணத்தை தெரிந்து கொள்ளலாமா?"
"அமைதியாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்யவில்லை. பேசுவதற்கான நேரம் இல்லை என்பது தான் உண்மை. அடுத்தடுத்த படங்களுக்கான வேலைகளில் மும்முரமாக இருப்பதால் அதில் பிசியாக இருக்கிறேன். எத்தனையோ வெற்றிகளையும், நிறைய தோல்விகளையும் சந்தித்து விட்டேன். என்னுடைய கேரக்டர்களில் முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிக்க ஒத்துக் கொள்கிறேன். என்னுடைய வாழ்க்கையை மறுசீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். அதனால் அமைதியாக வாழ்கிறேன்."
"மறுசீரமைப்பு என்பது உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலா... அல்லது சினிமாவிலா..?"
"தனிப்பட்ட வாழ்க்கையில் மறுசீரமைப்பு அவசியம் என உணர்கிறேன். 30 வயதை கடக்கும் பருவம் அருமையானது. அதை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய மகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நேரத்தில் என்னுடைய பெற்றோருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். ஏனென்றால், நான் தேர்ந்தெடுத்த தொழிலில், தனிப்பட்ட வாழ்க்கையில் எனது கருத்துக்கு ஆதரவாக இருந்து செயல்படுகின்றனர். இப்போது எனது மகள் வளர்ந்து விட்டதால் அவளுக்கான விருப்பம், தேவைகளில் கவனம் செலுத்துகிறேன். வெளிப்புற படப்பிடிப்புக்கு சென்றாலும், சீக்கிரமாக வீட்டுக்கு திரும்பி விடுகிறேன். அப்படி முடியாத பட்சத்தில் அவளிடம் அடிக்கடி போனில் பேசிக் கொள்கிறேன்."
"நடிகர் கமலுடன் மர்மயோகி படத்தில் நடிப்பதாக இருந்ததே... என்னாச்சு?"
"தற்போதைக்கு அந்தப் படத்திற்கான வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அவர் எப்போது அந்த படத்தை எடுத்தாலும் நான் நடிக்கத் தயார்."
" உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான கேள்விகளுக்கு நீங்கள் தெளிவாக பதில் அளிப்பதில்லையே... ஏன்?"
"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. எனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி கேள்வி எழுப்ப ஓர் எல்லை உண்டு. அதைத் தாண்டினால் பதில் கூற மாட்டேன்."
" பிரபல இயக்குனர் கரண் ஜோகர், `சினிமாவில் இருப்பவர்கள் டேட்டிங் செல்வதில் தப்பில்லை' என்கிறார். இதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா?"
"அப்படியெல்லாம் சினிமாத் துறையில் எல்லோரும் டேட்டிங் செல்ல மாட்டார்கள். மேலும் டேட்டிங் செல்வது அவரவர் தனிப்பட்ட விருப்பம். எனக்கு டேட்டிங் நண்பர்கள் யாரும் இல்லை."
" திருமணம் செய்யாமல் முப்பது வயதை கடந்து விட்டீர்களே... தனியாகவே வாழ்வது என்று முடிவெடுத்து விட்டீர்களா?"
"இந்த உலகில் நான் மட்டும் தனியாக வாழவில்லை. நான் யாரையும் சார்ந்திருக்கவில்லை. ஆனால் எனது பெற்றோர் மற்றும் மகளுடன் வசித்து வருகிறேன்.
"அப்படியென்றால் ஆண் துணை அவசியமில்லை என்கிறீர்களா?"
"அப்படி சொல்லவில்லை... என்னைப் பொறுத்தவரை ஆண்கள் முக்கியம் என்றே நினைக்கிறேன்."
"உங்களுடைய முன்னாள் காதலர்கள் மற்றும் நண்பர்களைப் பற்றி..?"
"என்னுடைய முன்னாள் காதலர்கள் அனைவருமே ஒரே மாதிரி இல்லை. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி. அப்படித் தான் நண்பர்களும்..."
"உங்கள் மகளுக்கு சுதந்திரம் கொடுக்கிறீர்களா... அல்லது மிகவும் கண்டிப்பாக நடந்து கொள்கிறீர்களா?"
"மனதளவில் நான் கண்டிப்பானவள். ஆனால் அவளிடம் சுதந்திரமாக நடந்து கொள்கிறேன். அந்த சுதந்திரத்தை எனது மகள் ரெனீ எல்லை மீறாமல் பார்த்துக் கொள்கிறேன். அவளுடன் நல்ல புரிதலை வைத்துள்ளேன்."
"பத்து வயதாகும் உங்களுடைய மகளின், நிறைவேறாத விருப்பம் ஏதாவது உண்டா?"
"இன்றைய பிள்ளைகள் மிகவும் புத்திசாலிகள், உடலளவிலும், மனதளவிலும் வேகமாக வளர்கிறார்கள். எனக்கு 18 வயதில் தெரிந்த விஷயங்களை எல்லாம், அவள் பத்து வயதிலேயே கூறுகிறாள். ஒருநாள் என்னிடம், `இன்றைக்கே... இப்போதே... அப்துல் கலாமை சந்திக்கவேண்டும்' என்று அடம்பிடித்தாள். அதெல்லாம் உடனே முடியாது, மேலும் அவர் முன்னாள் ஜனாதிபதி என்பதால் சந்திப்பது கஷ்டம் என்று கூறினேன். ஆனால் அவளோ கேட்கவில்லை. அவளை சமாதானப் படுத்துவது மிகவும் கஷ்டமாகிவிட்டது."
" சமீபத்தில் உங்களிடம் ஏற்பட்ட மாற்றம்..?"
"விளம்பரம் மற்றும் சினிமாவுக்குள் வந்தபோது, மக்களிடம் புகழ் பெற என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்தேன். ஆனால் தற்போது மிகவும் பக்குவப்பட்டுள்ளேன். அதேபோல் தொடக்கத்தில் நான் ரொம்ப அழகாக மாறுவதற்கு முயற்சி எடுத்தேன். ஆனால் தற்போது அந்த எண்ணமெல்லாம் இல்லை. பத்து வயதுள்ள மகளுக்கு ஒரு நல்ல தாயாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாக உள்ளது!"
- தமிழில் அபர்ணா , சிங்கப்பூர் .
Thursday, December 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment