இலங்கையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கம் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
ஜனவரி மாதம் இலங்கையில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளரான
திரு சிவாஜிலிங்கம் சனிக்கிழமையன்று லண்டனிலிருந்து துபாய் வழியாக சென்னை விமான நிலையம் வந்திறங்கினார்.
இந்திய மத்திய அரசின் ஆணையை அடுத்து அவருக்கு இந்தியாவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக, சென்னை விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் கூறியதாக சிவாஜிலிங்கம் பிபிசி செய்தியிடம் தெரிவித்துள்ளார்.
“எந்தக் காரணங்களும் தெரிவிக்கப் படவில்லை. தேர்தலில் போட்டியிடுவது காரணமாக இருக்கலாம் என நான் சந்தேகப்படுறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஒரே தமிழர் இவர்.
இந்தத் தகவலை விமான நிலைய குடியேற்றப் பிரிவு வட்டாரங்களும் உறுதி செய்துள்ளதாக பிபிசி செய்தி கூறியது.
சென்னையிலிருந்து துபாய்க்கு திருப்பி அனுப்பப்பட்ட சிவாஜிலிங்கம், அங்கிருந்து கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
தஞ்சாவூரில் இடம்பெற்ற ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டுக்காகவும், தனது மருத்துவ சிகிச்சைக்காகவும் அவர் இந்தியா சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொலைபேசி மூலமாக மாநாட்டில் பேசியதாக சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக விளக்கம் கேட்டு அதிகாரபூர்வ கடிதம் அனுப்ப இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் ராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த சரத் கொஹன்ககே என்பவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா, இலங்கை இரு நாட்டுக் குடியுரிமைகளையும் வைத்துள்ள சரத் பொன்சேகா, அமெரிக்காவுக்கே விசுவாசம் உடையவராக இருப்பார்.
அவருக்கு தேர்தலில் போட்டியிடும் தகுதி உள்ளதா என்பது கேள்விக்குறி என அந்த எதிர்க்கட்சி உறுப்பினர் கூறியுள்ளார்.
இந்நிலையில் சரத் பொன்சேகா கிளிநோச்சி உட்பட தமிழர் பகுதிகளில் பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.
Tuesday, December 29, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment