Pages

Monday, December 21, 2009

இறுதிக்கட்ட போரின்போது, குடும்பத்தினருடன் சரண் அடைந்த விடுதலைப்புலி தலைவர்கள் கொல்லப்பட்டது ஏன்?- விளக்கம் அளிக்கும்படி, இலங்கை அரசுக்கு ஐ.நா.சபை கடித

கடந்த மே மாதம் 18-ந் தேதி இலங்கை ராணுவத்துடன் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது, ஏராளமான விடுதலைப்புலிகளும் அப்பாவி தமிழர்களும் கொல்லப்பட்டனர்.

அதற்கு முந்தைய நாளில், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன், அமைதிச் செயலக தலைவர் ஜீவரத்தினம் புலித்தேவன், மூத்த தளபதி ரமேஷ் ஆகிய முக்கிய தலைவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இலங்கை ராணுவத்திடம் சரண் அடைவதற்காக வெள்ளைக்கொடி ஏந்திச் சென்றனர்.

சில வெளிநாட்டு பிரதிநிதிகளின் முயற்சியின் பேரில், இலங்கை அரசு அளித்த உறுதிமொழியின்படி சரண் அடைந்த அவர்களை, ராணுவத்தினர் கொடூரமாக சுட்டுக்கொன்றுவிட்டனர். சர்வதேச போர் விதிமுறைகளுக்கு மாறாக நடந்த இந்த படுகொலை குறித்து ஏற்கனவே பல மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இந்தநிலையில், இந்த போரை தலைமை தாங்கி நடத்திய இலங்கை அரசின் தலைமை ராணுவ தளபதி சரத்பொன்சேகா, இலங்கையில் நடைபெற இருக்கும் புதிய அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த தேர்தலில், தற்போதைய அதிபர் ராஜபக்சேவுக்கும் அவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் பொன்சேகா, இந்த விவகாரத்தில் இலங்கைக்கு எதிராக, சமீபத்தில் திடுக்கிடும் குற்றச்சாட்டை வெளியிட்டார்.

சரண் அடைந்த விடுதலைப்புலிகள் தலைவர்கள், அதிபர் ராஜபக்சேயின் சகோதரரும், இலங்கை ராணுவ செயலாளருமான கோதபய ராஜபக்சே உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொன்சேகா வெளியிட்ட குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டின் அடிப்படையில், விடுதலைப்புலிகள் இயக்க தலைவர்கள் கொல்லப்பட்டது குறித்து விளக்கம் அளிக்கும்படி இலங்கை அரசுக்கு ஐ.நா.சபை கடிதம் எழுதி உள்ளது. "இந்த குற்றச்சாட்டுகள் உண்மையா? உண்மை இல்லை என்றால், அதற்கான ஆதாரங்களை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்'' என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஐ.நா.சபையில் இடம் பெற்றுள்ள இலங்கை அரசின் நிரந்தர பிரதிநிதி மூலம் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. கொல்லப்பட்ட தலைவர்கள் பா.நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோரின் குடும்பத்தினர் தொடர்பாக இலங்கை அரசிடம் உள்ள விவரங்களை தெரிவிக்கும்படியும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டு இருப்பதாவது:-

"விடுதலைப்புலிகளை முற்றிலும் தோற்கடித்துவிட்டோம் என்று இலங்கை அரசு அறிவித்ததற்கு முந்தைய நாளான கடந்த மே 17-ந் தேதி அன்று நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகிய மூன்று பேரும் மற்ற மூத்த விடுதலைப்புலிகள் தலைவர்களும் வெள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள குறுகிய எல்லைக்குள் சுற்றி வளைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

மூன்று தலைவர்களும் இலங்கை ராணுவத்திடம் சரண் அடைவது எப்படி என்று, சில பிரதிநிதிகள் மூலம் உங்கள் அரசுடன் தொடர்பு கொண்டு பேசியதற்கு, வெள்ளைக் கொடியுடன் ராணுவ பகுதிக்கு வந்து சரண் அடையும்படி ராணுவ செயலாளரும், எம்.பி.யும், அதிபரின் மூத்த ஆலோசகர் பொறுப்பையும் வகிப்பவரிடம் (கோதபய ராஜபக்சே) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டு இருந்ததாகவும் தகவல் வெளியானது.

இந்த நேரத்தில் விடுதலைப்புலிகளுடன் முன்வரிசையில் எதிர்த்து நின்று போர் புரிந்த இலங்கை ராணுவத்தின் 58-வது படைப்பிரிவின் தளபதிக்கு, ராணுவ செயலாளரிடம் இருந்து டெலிபோனில் வந்த உத்தரவில் சரண் அடைகிறவர்களை சுட்டுத்தள்ளும்படி உத்தரவு வந்துள்ளது. பா.நடேசன் உள்பட மூன்று தலைவர்களும் வெள்ளைக் கொடிகளுடன் ராணுவ பகுதியை நோக்கி வந்தபோது ராணுவத்தினர் அவர்களை சுட்டுக்கொன்றுவிட்டதாக சரத் பொன்சேகா கூறி இருக்கிறார்.

அவர்களுடன் மூன்று தலைவர்களின் குடும்பத்தினரும் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அவர் கூறி இருக்கிறார். அந்த ராணுவ பிரிவுடன் தொடர்புள்ள சில பத்திரிகையாளர்களும் இந்த தகவல்களை உறுதி செய்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுகள் உண்மையா? இல்லையென்றால் அதற்கான ஆதாரங்களை தெரிவியுங்கள்''.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

விளக்கம் கேட்டு ஐ.நா.சபை கடிதம் அனுப்பி இருப்பதை இலங்கை அரசு உறுதி செய்தது. அந்த கடித விவரங்களை தீவிரமாக ஆய்வு செய்தபின் அதற்கு அனுப்ப வேண்டிய பதில் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று, இலங்கை அதிபரின் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

ஐ.நா.சபை கடிதம் வருவதற்கு முன்பே, இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதியான சரத் பொன்சேகா, தனது குற்றச்சாட்டை ஊடகங்கள் தவறாக புரிந்து கொண்டுவிட்டதாக மறுப்பு வெளியிட்டு இருந்தார்.

அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக அவர் குற்றச்சாட்டை கூறி இருந்தாலும், அந்த உத்தரவை நிறைவேற்றி 3 பேரையும் படுகொலை செய்த ராணுவத்தின் தளபதி என்ற முறையில் அவரும் குற்றவாளியாக நேரிடும் என்பதால் அவசரம் அவசரமாக தனது குற்றச்சாட்டைமறுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment