புழலில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் முகாமில் இலவச டி.வி. வழங்கும் விழா நடந்தது. துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் முகாமில் உள்ள 446 குடும்பங்களுக்கும் தன் கையால் டி.வி.க்கள் வழங்கினார்.
முகாமில் உள்ளவர்களுக்கு கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் புகைப்படங்கள் எடுக்கும் பணியையும் அவர் பார்வையிட்டார்.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டத்தின் கீழ் ஒரு பெண்ணுக்கு ரூ.20 ஆயிரம், இளைஞர்களுக்கு ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்கள், மூளை வளர்ச்சி குன்றிய ஒரு குழந்தைக்கு மாதம் ரூ.500 வீதம் வாழ்நாள் முழுவதும் வழங்குவதற்கான உத்தரவு ஆகியவற்றையும் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
"இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு வந்து நீண்ட காலமாக வாழும் தமிழர்களின் நலனை பாதுகாக்க முதல்-அமைச்சர் கருணாநிதி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அவர்களுடைய அடிப்படை பிரச்சினைகளையும், வாழ்வாதாரத்தையும் மையமாக வைத்து அண்மையில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்தார்.
அந்த நிதியில் இருந்து தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்கள் வாழும் பகுதிகளில் பல பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இலவச டி.வி.க்கள் வழங்க ரூ. 4 கோடியே 54 லட்சத்து 49 ஆயிரம், கலைஞர் காப்பீடு திட்டத்தை செயல்டுத்த ரூ.1 கோடி, 1200 பெண்களுக்கு திருமண உதவி தொகை வழங்க ரூ.2 கோடியே 40 லட்சம், விளையாட்டு கருவிகள் வழங்க ரூ.4 லட்சம், ஒதுக்கப்பட்டு உள்ளது.
354 பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க ரூ. 8 லட்சத்து 7 ஆயிரமும், குடியிருப்புகள் பழுதுபார்க்கவும், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் ரூ.43 கோடியே 39 லட்சத்து ரூ.7 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ. 54 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் கான்கீரிட் வீடுகள் கட்டி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது மட்டும் அல்லாமல் அரசின் சார்பில் வழங்கப்படும் பல சலுகைகள் அவர்களுக்கு கிடைத்திட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
ஊனமுற்றவர்களுக்கு இலவச செயற்கை உறுப்பு உபகரணங்கள், 3 சக்கர வண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஈமசடங்குக்கான நிதி உதவி ரூ. 2 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. பண கொடை வழங்கும் போது முகாமில் ஆள் இல்லாமல் இருந்தாலும் திரும்பி வந்ததும் அவர்கள் அதை ஏற்றுகொள்ள வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
இந்த முகாமில் இருப்பவர் சில கோரிக்கைகளை வைத்தார்கள். டிரைவிங் லைசென்ஸ் யார் யாருக்கு வேண்டுமோ அவர்களுக்கு விதி முறைகளை தளர்த்தி வழங்குவதற்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த முகாமில் சாலை மின்வசதிகள், விளையாட்டு திடல், கழிவறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது.
கலைஞர் காப்பீட்டு திட்டம் நேற்று முதல் இதர பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. ரேஷன் கடை வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்கள். இதே போல் பல பகுதிகளில் இந்த பிரச்சினை உள்ளது. எந்தெந்த பகுதிகளில் ரேஷன்கடை தேவைபடுகிறதோ அந்த பகுதியில் அமைக்க முடிவெடுக்க பட்டுள்ளது.
இந்த பகுதியில் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டப்படும். புதிய குடியிருப்புகள் கட்டி கொடுக்க ரூ. 8 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
என்றைக்கும் தமிழர்களாக இருக்கும் உங்களுக்கு கலைஞர் அரசு துணை நிற்கும். பல மாவட்டங்களில் இந்த பணிகள் தொடங்கி விட்டன. மேலும் 20 நாட்களுக்குள் பணிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் "
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கே.பி.பி.சாமி, கலெக்டர் பழனிகுமார், மாவட்ட செயலாளர் இ.ஏ.பி.சிவாஜி, புழல் பஞ்சாயத்து தலைவி மகாதேவி அன்பழகன், திருநாவுக்கரசு, ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் 20 ஆண்டுகளாக பலர் தங்கி உள்ளனர். அவர்களில் இந்திராணி, யசோதா, செல்வி, வினிதா, கவுசல்யா ஆகியோர் கூறும்போது, புலம்பெயர்ந்து வந்த நாங்கள் இங்கு நிம்மதியாகவும், சந்தோச மாகவும் வாழ்கிறோம். இங்குள்ள தமிழர்களை போல எங்களை மதித்து சலுகைகள் வழங்கும் தமிழக அரசுக்கு நாங்கள் நன்றி கடன் பட்டுள்ளோம் என்றனர்.
Saturday, December 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment