கடந்த 2001ம் ஆண்டு ஆப்கன் மீது தாக்குதல் நடத்தி தலிபான் ஆட்சியை வீழ்த்திய அமெரிக்கா, கர்சாயை அதிபராக்கியது. இரண்டு முறை நடந்த தேர்தலில், கர்சாய் அதிபராக தேர்வு செய்யப் பட்டார். இருப்பினும் ஆப்கானிஸ் தான், அனைத்து விஷயங்களிலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சார்ந்துள்ளது. பாதுகாப்பு பணியில் 70 ஆயிரம் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் ஈடுபட்டுள்ளன; 35 ஆயிரம் நேட்டோ படைகளும் இந்த நாட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தலிபான் மற்றும் அல் - குவைதா பயங்கரவாதிகளின் அட்டகாசம் அதிகம் உள்ளதால், கூடுதலாக 30 ஆயிரம் படைகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது.
இது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ராபர்ட் ஜிப்ஸ் குறிப்பிடுகையில், "ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகள் 2011ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் சில இடங்களில் தங்கள் பணியை அந்நாட்டு தேசிய பாதுகாப்பு வீரர்களிடம் ஒப்படைத்து விட்டு, நிபந்தனையின் பேரில் வாபஸ் பெறத் துவங்குவர். இடையே உள்ள 18 முதல் 24 மாத காலத்தில் அமெரிக்க அதிகாரிகள், ஆப்கன் தேசிய பாதுகாப்பு வீரர்களுக்கு தேவையான பயிற்சியை அளிப்பர். அமெரிக்கப் படைகள் வாபசான பிறகு, தலிபான்கள் மீண்டும் தாக்குவதற்கு வாய்ப்பு உண்டு என்பதை ஏற்க முடியாது.
மக்களுக்கு தேவையானதை அளிப்பது தான் அரசின் வேலை. இதை செய்யாத ஆட்சியாளர்களை மக்கள் ஒதுக்கி தள்ளி விட்டு, அவர்களுக்கு தேவையானவர்களைத் தேர்ந்தெடுப்பர்.
ஊழலற்ற ஆட்சியை கர்சாய் இந்த முறை ஏற்படுத்தியே ஆக வேண்டும். இல்லாவிட்டால், ஊழலற்ற ஆட்சியை நடத்தும் திறனுடைய நபரை அதிபர் பதவியில் அமர்த்த வேண்டிய நிலை ஏற்படும். ஆப்கன் அரசு நிலையாக எங்களை சார்ந்திருப்பதை நாங்கள் விரும்பவில்லை. போதுமான நிதியுதவி, பாதுகாப்பு உதவி, பயிற்சி உள்ளிட்டவைகளை அளிக்க முடியும். தலிபான்கள் மீண்டும் தாக்குதல் நடத்தி ஆட்சியைப் பிடிக்காதபடி உதவ முடியும். ஆப்கானிஸ்தானுக்கு அளிக்கப்படும் உதவியில் பலரது உழைப்பு அடங்கியுள்ளது. ஏராளமான ராணுவத்தினர் குடும்பத்தைப் பிரிந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்க மக்களின் வரிப் பணம் ஆப்கானிஸ்தானின் மேம்பாட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. நண்பரின் பாக்கெட்டிலிருந்து எளிதாக எடுத்துக் கொடுக்கப்பட்ட பணமல்ல, இந்த நிதியுதவி. எனவே, இதை உணர்ந்து செயல்பட வேண்டுமென அதிபர் ஒபாமா, கர்சாயிடம் தெரியப்படுத்தியுள்ளார். இவ்வாறு ஜிப்ஸ் கூறினார். தவிரவும், ஆப்கன் குறித்த அமெரிக்க அதிபர் ஒபாமா பேசிய பேச்சை, நான்கு கோடி அமெரிக்கர்கள் நேரடியாக, "டிவி'யில் கேட்டனர் என்று கூறப்பட்டது.
No comments:
Post a Comment