கார்த்திகை தீபம் கடந்த 22ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினம் பஞ்ச மூர்த்திகள் காலை மற்றும் மாலையில் வீதி உலா வந்து அருள் பாலித்தனர்.விழாவின் முக்கிய திருவிழாவான நேற்று கார்த்திகை மஹா தீபத்திருவிழா நடந்தது. இதையொட்டி, நேற்று அதிகாலையில் ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தன.அதிகாலை 3.30 மணிக்கு கருவறையில், கற்பூர தீபமேற்றி, சிவாச்சாரியார்கள் வேதபாராயணம் ஓத, வேதமந்திரங்கள் முழங்க கற்பூர தீபத்தில் இருந்து ஒரு மடக்கில் நெய்த்திரியிட்ட விளக்கு ஏற்றப்பட்டு பின்னர் ஐந்து மடக்குகளில் ஏற்றப்பட்டது. அம்மன் சன்னிதி முன் ஐந்து மடக்கை விளக்கு ஏற்றப்பட்டு பரணி தீப பூஜை நடந்தது. அம்மன் சன்னிதியில் மடக்கை விளக்கு ஏற்றியவுடன் கோவிலில் பிற சன்னிதிகளில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு, கோவில் முழுவதும் தீப ஒளியாக காட்சியளித்தது.
பரணி தீப தரிசனத்தை காண நேற்று அதிகாலை 2.30 மணியில் இருந்து 3 மணி வரை பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்."அனேகன் ஏகன்' என்ற தத்துவத்தை விளக்கும் வகையில் மாலை 6 மணிக்கு, மஹாதீபம் ஏற்றப்படும் விழா நடந்தது.பஞ்சமூர்த்திகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தங்க கொடிமரத்தின் முன் எழுந்தருளினர். மாலை 5 மணிக்கு விநாயகர், 5.07க்கு வள்ளி தெய்வயானை சமேதரராய் முருகர், 5,15 மணிக்கு உண்ணாமுலையம்மன் சமேதரராய் அருணாசலேஸ்வரர், 5.30 மணிக்கு பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர், தங்க கொடி மரம் முன் எழுந்தருளி, அருள் பாலித்தனர்.பின் தீப தரிசன மண்டபத்தில் ஒன்றாக எழுந்தருளினர். மாலை 5.59 மணி அளவில், அர்த்தநாரீஸ்வரர் தங்க கொடி மரம் முன் எழுந்தருளி நடனமாடி, பஞ்ச மூர்த்திகளுக்கு காட்சியளித்தார்.
காலையில், சுவாமி சன்னிதியில் ஏற்றப்பட்ட ஐந்து அகல் விளக்குகளையும் உடன் கொண்டு வந்து, கொடி மரத்தின் முன் உள்ள அகண்டத்தில் ஒன்று சேர்த்தனர். பின்னர் பஞ்ச பூதங்களை குறிக்கும் விதத்தில், ஐந்து தீப்பந்தகள் ஏற்றப்பட்டு, மலைக்கு காண்பிக்கப்பட்டவுடன், 2,668 அடி உயரமுள்ள மலையில் மஹா தீபம் "அண்ணாமலையாருக்கு அரோஹரா' என விண்ணை முட்டும் கோஷங்களுக்கு இடையில் ஏற்றப்பட்டது. 20 லட்சம் பக்தர்கள் தீப விழாவில் குவிந்தனர்.
No comments:
Post a Comment