Pages

Friday, December 4, 2009

நானும் இருக்கிறேன் - வை கோ

ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வேதாரண்யம் அருகே, பள்ளிக்கூட வேன் குளத்தில் மூழ்கி, பிஞ்சுக் குழந்தைகளும், ஆசிரியையும் பலியானார்கள் என்ற செய்தி, கேள்விப்பட்ட அனைவரையும் நடு நடுங்கச் செய்து உள்ளது. குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு எவ்விதத்திலும் ஆறுதல் சொல்ல முடியாது. அவர்களது துன்ப, துயரங்களில் தமிழ்நாட்டு மக்கள் அனைவருமே பங்கு எடுத்துக் கொண்டு உள்ளனர்.

பதினோரு குழந்தைகளைக்காப்பாற்றிய பின்னரும், மற்றொரு குழந்தையைக் காப்பாற்றுவதற்காகத் தன்னுயிர் ஈந்த ஆசிரியை சுகந்தி, வீரத்தாய் ஆகி இருக்கிறார். மனித நேயத்தின் சிகரமாக, மாந்தர்களுக் கெல்லாம் எடுத்துக் காட்டாகத் திகழ்கிறார். வேதாரண்யத்தில் மட்டுமே இந்த நிலை அல்ல. தமிழகம் முழுவதும் இதே கொடுமைதான்.

சென்னை நகர ஆட்டோக்களில், பிஞ்சுக் குழந்தைகள் ஒன்றுக்குமேல் ஒன்றாகத் திணிக்கப்பட்டுக் கொண்டு செல்லப்படுகின்ற காட்சிகளை நாள் தோறும் கண்டு மக்கள் குமுறுகிறார்கள்.

ஆட்டோக்களின் இரு புறமும், குழந்தைகளின் கால்கள் நீட்டிக் கொண்டு இருப்பது எவ்வளவு பெரிய ஆபத்து, சென்னை நகரின் அன்றாடக்காட்சிகளுள் ஒன்றான இதை, போக்குவரத்துக் காவல் துறையினர் எச்சரிப்பதாகத் தெரியவில்லை. ஒரு பெரும் விபரீதம் நேருவதற்கு முன்பு, காவல்துறை விழித்துக்கொள்ள வேண்டும். கம்பி வலை அடித்த வண்டிகளில் மட்டுமே, குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இரு சக்கரவாகன ஓட்டிகள் காதுகளில், கேட்பு ஒலிக்கருவிகளை மாட்டிக் கொண்டு சென்றாலே அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அவர்கள் மட்டும் அல்ல, சாலைகளில் நடந்து செல்கின்ற ஏராளமான இளம் பெண்கள் போனில் பேசிக் கொண்டே சாலையைக்கடப்பதோடு, ஒரு வழிப்பாதையில், சாலையின் நடுவே உள்ள தடுப்பில் நேராக வருகிற போது, வண்டி ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்து சரேலென வண்டியைத் திருப்புவதையும் பார்க்க முடிகிறது. எத்தனை நாளைக்கு இந்த அதிர்ச்சி நீடிக்கும் என்பது தெரிய வில்லை.

செல்போன் பேசிக்கொண்டே வண்டி ஓட்டியவர்கள், சாலையைக் கடந்தவர்கள் எத்தனை பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது?.

வேதாரண்யம் விபத்து எல்லோருக்கும் ஒரு எச்சரிக்கை. அடுத்து நிகழஇருக்கும் கொடூரங்களைத் தடுக்கின்ற வகையில், அரசின் கண்களைத் திறப்பதாக அமையட்டும். விபத்தில் உயிர்களை இழந்து வாடும் உற்றார் உறவினர்களுக்கு, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment