தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் ஹைதர்அலி தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் `திடீரென' அத்வானி, உமாபாரதி உருவபொம்மையை எரித்தார்கள். சிலர் போலீஸ் தடுப்பையும் மீறி அண்ணாசாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழ் மாநில முஸ்லிம் லீக் சார்பில், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் தலைமை தாங்கினார்.
இஸ்லாமிய ஜனநாயக கட்சி சார்பில், அதன் மாநில தலைவர் அ.அக்ரம்கான் தலைமையில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை சார்பில் சென்னை மெமோரியல் ஹால் முன்பு நேற்று மாலை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு பொது செயலாளர் மேலை நாசர் தலைமை தாங்கினார். தலைவர் எம்.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி முன்னிலை வகித்தார். இதில், 10 சிறுவர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சேப்பாக்கத்தில் விருந்தினர் மாளிகை முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சுமார் 600 பெண்கள் உள்பட 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்ட தலைவர் நிஜாமுதீன் தலைமை தாங்கினார்.
அகில இந்திய இமாம் கவுன்சில் சார்பில் மாவட்ட உலமாக்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய இமாம் கவுன்சில் மாநில தலைவர் அப்துல் காதர் முனீரீ தலைமை தாங்கினார்.
பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு அமைப்பின் தலைவர் எஸ்.எம்.பாக்கர் தலைமை தாங்கினார். துணை தலைவர் முகமது முனீர், மாவட்ட தலைவர் அனிபா, யூனூஸ் , வடசென்னை மாவட்ட செயலாளா யூசுப்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், முஸ்லிம் பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானார் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் `திடீரென' பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் வீட்டை முற்றுகையிட முயன்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை உருவானது. இதைத்தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினர். ஆனால், அவர்கள் கலைந்து செல்லவில்லை. தள்ளு முல்லில் சிலருக்கு அடியும் விழுந்தது .இதைத் தொடர்ந்து போலீசார் 500 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
முஸ்லிம்கள் போராட்டத்தை முன்னிட்டு ப.சிதம்பரம் வீடு இருந்த நுங்கம்பாக்கம் பைகிராப்ட்ஸ் சாலையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதே போல், சைதாப்பேட்டையில் இந்திய ஜனநாயக முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட சென்ற 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
No comments:
Post a Comment