சென்னை பெருங்குடி பஸ் நிலையம் அருகே யு.ஜி., மெடிக்கல்ஸ் உள்ளது. இக்கடைக்கு நேற்று முன்தினம் மாலை, வடமாநில வாலிபர் ஒருவர் மருந்து வாங்க வந்தார். மருந்து வாங்கிய அவர், 1,000 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். வாலிபர் கொடுத்த நோட்டு கள்ள நோட்டாக இருக்கும் என சந்தேகித்த மருந்துக் கடை உரிமையாளர் ஜெயவர்மன்(33), துரைப்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.மருந்து கடைக்கு விரைந்து வந்த போலீசார், மேற்குவங்கம் மால்டா மாவட்டம் கோபயாலியைச் சேர்ந்த முகமது நாசரின் மகன் பைசூர்தீனை (20) மடக்கிப் பிடித்தனர். அவர் வைத்திருந்தது கள்ள நோட்டு தான் என்பதை ஊர்ஜிதம் செய்ததும், போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஏழு 1,000 ரூபாய் கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. தொடர் விசாரணையில், பெருங்குடியில் ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கியிருப்பதாக வாலிபர் தெரிவித்தார்.
இதன்பேரில், பெருங்குடி அண்ணாநகர் முதல் தெருவில் உள்ள பழனி என்பவரது வீட்டில் போலீசார் சோதனையிட்டனர். அந்த வீட்டில் தங்கியிருந்த மால்டா மாவட்டம் ஹரீஸ் சந்திராவூரைச் சேர்ந்த அபுல்காசனின் மகன் செரிப் உல் ஹக்(24), அல்தா ஹசேனின் மகன் மசூர்உல்(23) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.பைசூர்தீன், செரிப் உல் ஹக், மசூர் உல் உட்பட நான்கு பேர், கடந்த 14ம் தேதி கொத்தானர் எனக்கூறி பெருங்குடி வீட்டில் குடியேறியுள்ளனர். அந்த வீட்டில் இருந்த பெட்டியிலிருந்து 103 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. மூவரிடமிருந்து ஒரு லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. வீட்டில் தங்கியிருந்த மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.கடந்த சில நாட்களில் சென்னையில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட முயற்சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.
திருவல்லிக்கேணியில் சில தினங்களுக்கு முன் ஓட்டலில் கள்ள நோட்டை கொடுக்க முயன்ற மால்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஷாஜகான்(35), சசீனாஉல்(31) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.கடந்த மாதம் தி.நகரில் கடையில் கள்ளநோட்டை புழக்கத்தில் விட முயன்ற மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர். அவர்களும் மேற்கு வங்கம் மால்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அதேபோல நேற்று முன்தினம் மதுரையில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட முயன்ற மேற்கு வங்கத்தை சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கும்பலின் கை வரிசை அதிகரித்து வருவதையடுத்து, போலீசார் உஷார் அடைந்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் பின்னணியில் உள்ள கும்பலை கூண்டோடு பிடிப்பதற்காக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் மேற்கு வங்கம் விரைந்துள்ளனர். இந்த படையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக அதிகாரி, சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் அலுவலக அதிகாரியும் இடம் பெற்றுள்ளனர்.
வட மாநிலத்தவர்கள் மீதுதொடர் கண்காணிப்பு அவசியம்:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், பல கட்டட கான்ட்ராக்டர்களிடம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டட தொழிலாளிகள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் பலர் மேற்குவங்கம், பீகார், ஒரிசா உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். மேலும், சென்னை ஓட்டல்களிலும் வட மாநிலத்தவர் அதிகளவில் பணிபுரிகின்றனர். கள்ள நோட்டு கும்பலுடன் தொடர்புள்ள பலர், "ஊழியர்கள்' என்ற போர்வையில் சென்னையில் ஊடுருவியிருப்பதாக தெரிகிறது. இந்த கும்பல், உண்மையான ஊழியர்களை தங்கள் வலையில் வீழ்த்தி, அவர்கள் மூலம் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதாகவும் தெரிய வந்துள்ளது.எனவே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள வட மாநிலத்தவர்கள் மீது, போலீசார் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறும்போது, "வெளி மாநிலங்களிலிருந்து சென்னைக்கு வந்து பணிபுரிபவர்கள் எண்ணிக்கை அதிகமாகத் தான் உள்ளது. ஆனால், அவர்களை எப்படி கண்காணிப்பது என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்" என்றார்.
No comments:
Post a Comment