"உலகின் மிகப்பெரிய வீடுகளின் உரிமையாளர்களாக இருப்பதில், அமெரிக்கர்களை ஆஸ்திரேலிய நாட்டவர்கள் முந்துகின்றனர்' என, ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில், காமன் வெல்த் செக்யூரிட்டீஸ் (காம்செக்) என்ற அமைப்பு வீடுகள் குறித்து ஆய்வு நடத்தியது. ஆய்வில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு: கடந்த பத்தாண்டுகளாக, ஆஸ்திரேலியாவில் வீடுகள், 10 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளன. கடந்த 2008-09ம் ஆண்டு நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் கட்டப்பட்ட ஒரு வீட்டின் பரப்பளவு 262.9 சதுர மீட்டர். அதை தொடர்ந்து குயின்ஸ்லாந்தில் கட்டப்பட்ட ஒரு வீட்டின் பரப்பளவு 253 சதுர மீட்டர்.
கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், அமெரிக்காவில் புதிதாக கட்டப்படும் வீடுகளின் சராசரி அளவு 212 சதுர மீட்டரில் இருந்து, 201.5 சதுர மீட்டராக குறைந்துள்ளது. பொருளாதார மந்த நிலை காரணமாக, கடந்த பத்தாண்டுகளில், முதல் முறையாக இப்போதுதான், அமெரிக்காவில் கட்டப்படும் வீடுகளின் அளவு குறைந்துள்ளது. இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், ஆஸ்திரேலிய நாட்டில் வீடுகளின் பரப்பளவு அதிகரிப்பு மட்டுமல்லாது, வீடுகளில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காம்செக்கை சேர்ந்த ஜேம்ஸ் க்ரெய்க் கூறியதாவது: ஆஸ்திரேலியாவில் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றால், இன்னும் புதிய வீடுகள் கட்டப்பட வேண்டும். மக்கள் தொகை அதிகரிப்பால் வீடுகளின் விலையும் அதிகரிக்கிறது. மேலும், பெரும்பாலான மக்கள், வீடுகளை பகிர்ந்து கொள்வதையே விரும்புகின்றனர். எனவே, வீடுகளின் அளவு தொடர்ந்து அதிகரித்தால், புதிய வீடுகளுக்கான தேவை குறையும். இவ்வாறு அவர் கூறினார்.
Wednesday, December 2, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment