தற்போது காங்கிரஸ் கட்சியில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. மதுரையில் உறுப்பினர் சேர்க்கையிலும் கோஷ்டி கானமே கேட்கிறது. வாசன் கோஷ்டியில் முன்னாள் எம்.பி.ராம்பாபு, தெய்வநாயகம், ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் பொதுசெயலாளர் சொக்கலிங்கம் தீவிரம் காட்டுகின்றனர். தங்கபாலுக்கு கணபதி, டி.வி.ரமேஷ் போன்றோரும், ப.சிதம்பரத்திற்கு சைமன் பல்தேவ்சிங், பெரியசாமி போன்றோரும் ஆட்களை சேர்க்கின்றனர். இதுதவிர சுதர்சன நாச்சியப்பன், வசந்தகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி போன்றோருக்கும் சிறிய அளவில் ஆட்களை அணி சேர்க்கின்றனர். கிராமப்பகுதியில் வாசன் தரப்பில் தெற்கு மாவட்ட துணைத்தலைவர் பிரபாகரன் உள்பட நிர்வாகிகள் ஆட்களை சேர்க்கின்றனர். வடக்கு மாவட்டத்திலும் வாசன் கையே ஓங்கியுள்ளது. உறுப்பினராக நகர்ப்பகுதியை விட கிராமப்பகுதிகளில் ஆர்வமுடன் பலர் முன்வருவதாக நிர்வாகிகள் கூறுகின்றனர்.
தி.மு.க., வுக்கு உயிர்காக்கும் காப்பீட்டு திட்டம், இலவச "டிவி' திட்டம் அடித்தட்டு மக்களிடம் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உறுப்பினர் அட்டை இருந்தால் இதுபோன்றவற்றை எளிதில் பெறலாம் என பலர் கட்சியில் சேர ஆர்வம் காட்டுகின்றனர். இதேபோல காங்கிரசை பொறுத்தவரை நூறு நாள் வேலை திட்டம் கிராமத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு திட்டம் எனக்கூறி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ளனர். மற்ற தொகுதிகளைவிட உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடப்பட்டி பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை சேர்த்துள்ளனர். உறுப்பினர் சேர்க்கைக்கு ரூ.3 மட்டுமே கட்டணம். ஸ்டாம்ப் சைஸ் போட்டோ கேட்பதால் பலரிடம் அது இல்லை. அதற்கும் நிர்வாகிகளே ஏற்பாடு செய்துவிடுகின்றனர். இதில் வாசன் கோஷ்டியே முன்னிலையில் உள்ளது. மற்றவர்கள் ஏதோ பெயருக்கு ஆட்களை சேர்க்கின்றனர்.
No comments:
Post a Comment