Pages

Saturday, December 19, 2009

பீகாரை பிரிக்க கோரிக்கை ?

:பீகார் மாநிலத்தை பிரித்து சீமாஞ்சல் மாநிலத்தை உருவாக்க வேண்டும், என முன்னாள் மத்திய அமைச்சர் தஸ்லிமுதீன் கோரியுள்ளார்.ஆந்திராவை பிரித்து தெலுங் கானா மாநிலம் உருவாக்க மத்திய அரசு ஒப்பு கொண்டதையடுத்து, பல்வேறு மாநிலங்களில் புதிய மாநிலங்களை உருவாக்கும் கோரிக்கை வலுத்து வருகிறது. "உத்தர பிரதேசத்தை பிரித்து பூர்வாஞ்சல் மாநிலத்தை உருவாக்க வேண்டும்'என, அந்த மாநில முதல்வர் மாயாவதி,பிரதமர் மன்மோகன் சிங்கை வற்புறுத்தியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தை பிரித்து கூர்க்கா மாநிலம் உருவாக்கவும், அசாமை பிரித்து போடோ மாநிலம் உருவாக்கவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.


இதற்கிடையே பீகாரை பிரித்து சீமாஞ்சல் மாநிலத்தை உருவாக்க வேண்டும், என முன்னாள் மத்திய அமைச்சர் தஸ்லிமுதீன் கோரியுள்ளார்.பீகார் மாநிலத்தை பிரித்து, ஏற்கனவே ஜார்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டுள்ளது.புருனியாவை தலைநகராக கொண்டு பகல்பூர், அராரியா, கத்திஹார், கிஷன்கஞ்ச், சுபால், ககாரியா ஆகிய மாவட்டங்களை இணைத்து "சீமாஞ்சல்' என்ற பெயரில் புதிய மாநிலம் உருவாக்கப்பட வேண்டும், என தஸ்லிமுதீன் கோரியுள்ளார்.


"வங்கதேசம், நேபாளம், மேற்கு வங்கம் ஆகியவற்றை எல்லை பகுதிகளாக கொண்ட இந்த மாநிலம் உருவானால் அண்டை நாடுகளிலிருந்து மக்கள் ஊடுருவுவது தடுக்கப்படும்'என்கிறார் தஸ்லிமுதீன்.கடந்த 92ம் ஆண்டு முதலே சீமாஞ்சல் மாநிலம் உருவாக்க வேண்டும், என தஸ்லிமுதீன் கோரி வருகிறார். ராஷ்டிரிய ஜனதா தள கட்சியில் சேர்ந்த பின் இவர் இந்த கோரிக்கையை வற்புறுத்தாமல் இருந்தார். தற்போது அவர் ராஷ்டிரிய ஜனதா கட்சியிலிருந்து வெளியே வந்ததும் மீண்டும் இந்த கோரிக்கையை வற்புறுத்துகிறார். இதன் மூலம் இவர் செல்வாக்கு பெற முயற்சிப்பதாக எதிர்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment