Pages

Wednesday, December 23, 2009

மறக்க முடியுமா 38

லண்டன் (பி.பி.சி.) ரேடியோவுக்கு அளித்த பேட்டியில், சினிமாவிலும், அரசியலிலும் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை எம்.ஜி.ஆர். கூறினார். 1974_ம் ஆண்டு, ரஷியத் தலைநகரான மாஸ்கோவில் நடந்த திரைப்பட விழாவில் கலந்து கொண்ட எம்.ஜி.ஆர்., அங்கிருந்து லண்டன் சென்றார். அங்கு ``பி.பி.சி." க்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

"என்னுடைய 2 வயதில் என் தந்தை இறந்துவிட்டார். என் தந்தையும், தந்தைக்கு உயிரூட்டிய அறிவைத் தந்த பாட்டனாரும் பெரும் லட்சாதிபதிகளாக இருந்தவர்கள். ஆனால்; கேரளத்தில் தந்தையின் சொத்துகள் குழந்தைகளுக்கு இல்லை என்ற காரணத்தால் நாங்கள் அனாதைகளாக ஆக்கப்பட்டோம். என் தாயின் அரவணைப்பில்தான் வளர வேண்டி இருந்தது.

என் தந்தை மாஜிஸ்திரேட்டாக இருந்தார். பிரின்சிபாலாகவும் இருந்தார். பிரின்சிபாலாக அவர் இலங்கையில் பணியாற்றும் போது, கண்டியிலே நான் பிறந்தேன். 2 வயதில் தந்தையை இழந்து அதற்கு பிறகு 4, 5 வயதில் தமிழ் நாட்டிற்கு வந்துவிட்டோம். என்னை வளர்த்த வேலு நாயர் என்பவர் போலீஸ் இலாகாவில் போலீஸ்காரராக பணியாற்றினார். அவரது ஆதரவில் நாங்கள் வளர வேண்டி இருந்தது.

முதன் முதலில் நான் எழுதப்படிக்க கற்றுக்கொண்ட மொழி தமிழ். நான் பார்த்துக்கொண்டு, பழகிக்கொண்டு இருக்கும் மக்கள் தமிழ் மக்கள். என் உடம்பிலே இத்தனை ஆண்டுகளாக குருதி பாய்ந்து கொண்டு இருக்கிறது, சூடு தணியாமல் இருக்கிறது, நான் வளர்ந்திருக்கிறேன், வாய்ப்பு பெற்றிருக்கிறேன் என்றால், அது தமிழ் கூறும் நல்லுலகம் தந்த வாய்ப்பாகும்.

ஆகவே, தமிழ் நாட்டுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் என்னை உந்தித் தள்ளிக்கொண்டிருக்கிறது. அதிகமாகக் கல்வி பெறுகின்ற வாய்ப்பு எனக்கு இல்லை. எனது 7_வது வயதில், நாடகக் கம்பெனியில் சேர்ந்துவிட்டேன். நாடகங்களில் நடித்து, பிறகு திரை உலகில் சேர்ந்தேன்.

தொடக்கத்தில் நான் காங்கிரசில் இருந்தேன். காங்கிரஸ் உறுப்பினராக இல்லாமல் ஊழியனாக இருந்தேன். 1933_ 34_ம் ஆண்டில் உறுப்பினரானேன். அதன்பிறகு அங்கே சில குறைபாடுகளை கண்டதால், நான் விலகி, அஞ்சாதவாசம் என்று சொல்வார்களே, அதுபோல எந்த அரசியல் தொடர்பும் இல்லாமல் இருந்து கொண்டிருந்தேன்.

ஆயினும் நான் மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகளில் பிடிப்பும், நம்பிக்கையும் கொண்டவன். தமிழகத்தில், அக்கொள்கைகள் அனைத்தையும் கொண்டிருந்த ஒரே தலைவராக அமரர் அண்ணாதான் இருந்தார்கள். அவருடைய புத்தகங்களை படித்தேன். அவருடைய நியாயமான கோரிக்கைகள்தான், தமிழகத்திற்கும், இந்திய துணை கண்டத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்ற காரணத்தால் தி.மு.கழகத்தில் சேர்ந்தேன்.

1972_ல் தி.மு.கழகத்தைவிட்டு வெளியேற்றப்பட்ட பிறகு, தொண்டர்களுடைய, மக்களுடைய வற்புறுத்தலின்படி அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்ற அமைப்பை உருவாக்கினேன். அதில் நான் முதல் தொண்டனாக இருக்கிறேன்." இவ்வாறு ``பி.பி.சி."க்கு அளித்த பேட்டியில் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டார்.

திரைப்படத்துறையிலும், அரசியலிலும் நண்பர்களாக இருந்த கருணாநிதியும், எம்.ஜி.ஆரும் பிற்காலத்தில் பிரிய நேரிட்ட போதிலும் தொடக்க காலத்தில், நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். கோவையில் ரூ.14 வாடகையில் ஒரு அறை எடுத்து தங்கியிருந்தார்கள். திரைப்படத்துறையில் முன்னேற, ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வது வழக்கம்.

சென்னையில் குடியேறிய பிறகு எம்.ஜி.ஆர். வீட்டுக்குச் சென்று, சத்யா அம்மையார் பரிமாற உணவு சாப்பிட்டிருக்கிறார் கருணாநிதி. அதேபோல் கருணாநிதி வீட்டுக்குச் சென்று, அவர் தாயார் அஞ்சுகம் அம்மையார் படைத்த உணவை உண்டு மகிழ்ந்தவர், எம்.ஜி.ஆர்.

1963 ஜனவரியில் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் மறைந்தபோது எம்.ஜி.ஆர். விடுத்த இரங்கல் செய்தியில் கூறியிருந்ததாவது:-

சகோதரர் மு.க. அவர்களின் அருமை அன்னையார் அவர்களோடு, பழகவும், அவர்களுடைய ஈடுகாட்ட இயலாத அன்புள்ளத்தை உணரவும் வாய்ப்பைப் பெற்றவன் நான்.

பார்த்தவுடனே, ``தம்பி வா!" என்று அழைப்பதிலேதான் எவ்வளவு பாசம். `சாப்பிடத்தான் வேண்டும்' என்று வற்புறுத்துவதிலேதான் எவ்வளவு அழுத்தமான தாய்மை உணர்ச்சி. உட்கார்ந்து பேச ஆரம்பித்தால், வீட்டு விஷயங்களிலேயிருந்து, தொழில், அரசியல் வரையிலே அளவளாவும் அன்னையைத் தவிர வேறு யாருக்குமே இராத_ அன்புள்ளம். இவைகளையெல்லாம், என்னாலேயே மறக்க முடியவில்லையே! சகோதரர் மு.க. எப்படித்தான் மறப்பாரோ?

இன்பத்தைப் பிரிந்தால், மறுபடி இன்பத்தை அடையலாம். நட்பைப் பிரிந்தால், பிறகு நட்புக் கிடைக்கலாம். வாழ்க்கைத் துணையைப் பிரிந்தால் கூட வேறொரு வாழ்க்கை துணையை பெறலாம். மக்கட்செல்வத்தை இழந்தாலும், மறுபடி பெற்று விடலாம். ஆனால், அன்னையைm, அன்புத்தாயை, உலகத்தை வளர்க்கும் தாய்மையைப் பிரிந்து விட்டால், மறுபடி நமக்கு யார் அன்னை? நினைத்தாலே நெஞ்சம் நடுங்குகிறது."

இவ்வாறு எம்.ஜி.ஆர். கூறியிருந்தார்.

எம்.ஜி.ஆரும், சிவாஜி கணேசனும் புகழின் உச்சத்தில் இருந்தபோது, ``யார் சிறந்த நடிகர்? யார் வசூல் சக்ரவர்த்தி?" என்று இருதரப்பு ரசிகர்களும் மோதிக் கொள்வது வழக்கம்.

ஆனால், எம்.ஜி.ஆரும், சிவாஜியும் ஒருவர் மீது ஒருவர் பாசமும், மரியாதையும் வைத்திருந்தார்கள். எம்.ஜி.ஆரை சிவாஜி ``அண்ணன்" என்றே அழைப்பார். சிவாஜியை எம்.ஜி.ஆர். ``தம்பி" என்று குறிப்பிடுவார். பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகளின்போது, எம்.ஜி.ஆர். வீட்டில் இருந்து சிவாஜி வீட்டுக்கு இனிப்பு போன்ற உணவுப் பண்டங்கள் போகும். அதேபோல் எம்.ஜி.ஆருக்கு சிவாஜி கணேசன் வீட்டில் இருந்து பொங்கல், பழங்கள் முதலியன போகும்.

எம்.ஜி.ஆர். ``டாக்டர்" பட்டம் பெற்றபோது, அவருக்கு திரை உலகத்தினர் பாராட்டு விழா நடத்தினர். அதில் சிவாஜிகணேசன் கலந்து கொண்டு பேசுகையில், இருவருக்கும் இடையே இருந்த பாசத்தைக் குறிப்பிட்டார். எம்.ஜி.ஆர். தமது ஏற்புரையில் கூறியதாவது:-

``தம்பி சிவாஜி பேசும்போது நாங்கள் இருவரும் ஒரு தாயின் கையால் உண்டு வளர்ந்தவர்கள்" என்றார். என் தாய் கையில் அவரும் சாப்பிட்டு இருக்கிறார். அவர் தாய் கையில் நானும் சாப்பிட்டு இருக்கிறேன்.

என் மறைந்த மனைவியின் (சதானந்தவதி) மரணத்தின் போது யார் யாரெல்லாமோ வந்தார்கள். எனக்கு அழத்தோன்றவில்லை. அப்போது என் வீட்டிற்கு சிவாஜி வந்தபோதுதான் என்னையும் மீறி அழுகை வந்தது. அஸ்திவாரம் வெடிக்கும் அளவு என்பார்களே, அந்த அளவு அழுதேன். அன்று இறுதி வரை இருந்த சிவாஜி என்றும் இருப்பார்.

எங்களுக்குள் பிளவு ஏற்படுத்துவதற்காக யார் யாரோ முயன்றார்கள். ``சிவாஜி மன்றத்தை எம்.ஜி.ஆர். மன்றம் தாக்கியது, எம்.ஜி.ஆர். மன்றம் ஒட்டிய போஸ்டர்களை சிவாஜி மன்றம் கிழித்தது" என்றெல்லாம் கூறினார்கள். ஆனால் ஆடு -மாடு ஏதாவது போஸ்டரை தின்றுவிட்டுப் போனால்கூட `சிவாஜி மன்றத்தார் கிழித்தார்கள்', `எம்.ஜி.ஆர். மன்றத்தார் கிழித்தார்கள்' என்று கூறினார்கள்.

அன்றிருந்த சூழ்நிலையில் அவரும் சிலவற்றை நம்பக்கூடிய நிலையும், நானும் சிலவற்றை நம்பக்கூடிய நிலையும் இருந்தது. தம்பி சிவாஜி பேசும்போது, ``பாழாய் போன அரசியல் நம்மைப் பிரித்துவிட்டதே" என்று சொன்னார். அண்ணன்_ தம்பி உறவைப் பிரிக்க முடியாது. எப்போதாவது ஒன்று சேருவோம். அது எதற்காக என்று எனக்குத் தெரியாது."

இவ்வாறு எம்.ஜி.ஆர். குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment