இதனையொட்டி மேலூர் பஸ் ஸ்டாண்டில் நடந்த கூட்டத்தில் சாமி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். ம.தி.மு.க. நகர் செயலாளர் ஆர்.கே.ஆர். விஜயராகவன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் மிலிட்டரி ராமநாதன், மாவட்ட செயலாளர் தமிழ் செல்வன், மாநகர் செயலாளர் பூமிநாதன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் வைகோ பேசியதாவது:-
முல்லைப் பெரியாறு அணை தமிழகத்தின் 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக திகழ்கிறது. இந்த அணை வலுவிழந்து விட்டது. நீர்கசிவு ஏற்பட்டு உடையப்போகிறது என கேரள அரசு பொய் பிரசாரம் செய்து அங்கு புதிய அணை கட்ட முயற்சித்து வருகிறது. அவ்வாறு அங்கு புதிய அணை கட்டப்பட்டால் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் 5 மாவட்ட மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும்.
தமிழகத்திற்கு துரோகம் செய்ய கேரள அரசு முயற்சித்து வருகிறது. பெரியாறு அணை கட்டு வதற்கு பலர் தியாகம் செய்துள்ளனர்.
தற்போது புதிய அணை கட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அணை கட்டும் பகுதியில் உள்ள 100 டன் எடை கொண்ட பாறைகளை வெடி வைத்து தகர்க்கும் போது அவை பேபி அணையை பாதிக்கும். அதன் மூலம் பெரியாறு அணைக்கும் பாதிப்பு ஏற்படுத்தலாம் என்று கேரள அரசு திட்டமிடுகிறது.
பெரியாறு அணை பிரச்சினையில் மத்திய அரசும், தமிழக அரசும் தமிழக மக்களுக்கு துரோகம் செய்து விட்டன. சமீபத்தில் நடைபெற்ற விசாரணையின் போது காலையில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் திறமையாக வாதாடினார். ஆனால் பிற்பகலில் 5 நீதிபதிகள் பெஞ்ச் விசாரிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.
ஒரு புறம் கர்நாடகத்தால் நமக்கு பாதிப்பு, மறுபுறம் கேரளாவால் பாதிப்பு. ஆனால் மத்திய அரசு கூடுதல் மந்திரி பதவிகளை கொடுத்துள்ளதால் தமிழக அரசு கண்டு கொள்வதில்லை.
கேரள அரசின் இந்த செயலை கண்டித்து வருகிற 29-ந்தேதி கேரளாவிற்கு செல்லும் உணவு பொருட்களை தடுக்கும் போராட்டத்தை ம.தி.மு.க. நடத்த உள்ளது. இதற்காக ஆதுரவு தரக்கோரி தென்மாவட்டங்களில் பிரசாரயாத்திரை நடத்தி வருகிறோம்.
இந்த யாத்திரைக்கு விவசாயிகள் முழு ஆதுரவு தர வேண்டும். அனைவரும் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று கூட அவசியம் இல்லை. திருப்பூர் குமரன் போராடிய போது அவருடன் வெறும் 9 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். அது போன்று நாமும் எதிர்ப்பு தெரிவிப்போம். இந்த பிரச்சினையை விவசாயிகள் அடுத்தவர் களுக்கு முழுமையாக விளக்க வேண்டும். பெரியாறு அணையில் நமக்கு உள்ள உரிமையை மீட்க குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment