
எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்ட எம்.ஜி.ஆர், யமனுடன் போராடி வெற்றி பெற்றார். எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட சம்பவம், சென்னை ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். வீட்டில் 1967 ஜனவரி 12_ந்தேதி நடந்தது.
அன்று மாலை 5 மணிக்கு ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். வீட்டுக்கு எம்.ஆர்.ராதா சென்றார். "பெற்றால்தான் பிள்ளையா" படத்தை தயாரித்த பட அதிபர் வாசுவும் உடன் சென்றார்.
"பெற்றால்தான் பிள்ளையா" படத்தை தயாரிப்பதற்கு, எம்.ஆர்.ராதா ரூ.1 லட்சம் பண உதவி செய்திருந்தார். படம் முடிந்ததும் அந்தப் பணத்தை வாங்கித் தருவதாக எம்.ஜி.ஆர். கூறியிருந்ததாகவும், அது சம்பந்தமாகப் பேசவே வாசுவுடன் எம்.ஆர்.ராதா அங்கு சென்றதாகவும் கூறப்பட்டது.
"எம்.ஜி.ஆரை, ராதாவும், வாசுவும் சந்தித்தார்கள். அப்போது தகராறு ஏற்பட்டது. எம்.ஆர்.ராதா தன் மடியில் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து, எம்.ஜி.ஆரை சுட்டார். எம்.ஜி.ஆர். குனிந்தார். குண்டு இடது புற காது அருகே கன்னத்தில் பாய்ந்தது.
உடனே ராதா துப்பாக்கியைத் தன் தலையில் வைத்து விசையை அழுத்தினார். குண்டு அவர் நெற்றியில் பாய்ந்தது" என்று போலீசார் தெரிவித்தனர். சுடப்பட்ட எம்.ஜி.ஆர். ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகப்பட்டார். முதல் சிகிச்சைக்குப் பிறகு, சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
எம்.ஆர்.ராதாவும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் நெற்றியில் பாய்ந்த குண்டு அகற்றப்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆர். கழுத்தில் பாய்ந்த குண்டு, மூன்று முக்கிய நரம்புகளுக்கு இடையே பதிந்திருந்தது. அதை அகற்றினால் நரம்புகளுக்குச் சேதம் ஏற்பட்டு, உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என்ற நிலை.
நெப்போலியன் உடலில் பாய்ந்த குண்டை வெளியே எடுக்க முடியாமல் அப்படியே வைத்துத் தையல் போட்டதாக வரலாறு உண்டு. நாளடைவில் அந்த உலோகம் கரைந்து, சதையோடு சேர்ந்துவிடும். எனவே மருத்துவர்கள் இந்த குண்டை அப்படியே விட்டு விட்டுத் தையல் போட்டனர்.
பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, பரங்கிமலைத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக எம்.ஜி.ஆர். போட்டியிட்ட நேரத்தில்தான் அவர் சுடப்பட்டார். தேர்தல் பிரசாரத்திற்குப் போகாமலேயே, ஆஸ்பத்திரியில் படுத்தபடி அவர் வெற்றி பெற்றார்.
சிகிச்சைக்குப் பின், எம்.ஜி.ஆரும், எம்.ஆர்.ராதாவும் குணம் அடைந்தார்கள். எம்.ஜி.ஆரை சுட்டதாக ராதா மீது சைதாப்பேட்டைக் கோர்ட்டில் வழக்கு நடந்தது. இந்த வழக்கில் 1967 மே மாதம் 22_ந்தேதி எம்.ஜி.ஆர். கோர்ட்டுக்கு வந்து சாட்சியம் அளித்தார். வழக்கில் ராதாவுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் இது 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
எம்.ஜி.ஆருக்கு அடிக்கடி தும்மல் வரும். ஒரு நாள் தும்மியபோது கழுத்தில் நரம்புகளுக்கு இடையே பதுங்கியிருந்த குண்டு மெல்ல நகர்ந்து, தொண்டைக்கு வந்துவிட்டது. தொண்டையின் மெல்லிய ஜவ்வுக்குள் குண்டு இருந்தது நன்றாகத் தெரிந்தது.

உடனே எம்.ஜி.ஆர். ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகப்பட்டார். ஆபரேஷன் மூலம் குண்டு அகற்றப்பட்டது. குண்டு வெளியேறிய பின், எம்.ஜி.ஆரின் குரல் வளம் பாதிக்கப்பட்டது. மெல்லிய குரலில் பேசினார்.
No comments:
Post a Comment