Pages

Wednesday, December 2, 2009

மறக்க முடியுமா 8


எம்.ஜி.ஆருடைய மகத்தான வெற்றிப்படமான "எங்க வீட்டுப்பிள்ளை", 7 தியேட்டர்களில் வெள்ளி விழா கொண்டாடி வரலாறு படைத்தது. இந்தப்படம் 1965 பொங்கல் தினத்தன்று வெளிவந்தது. நாகி ரெட்டி _சக்ரபாணியின் "விஜயா கம்பைன்ஸ்" தயாரிப்பு.

இந்தப் படத்திற்கான வசனத்தை சக்தி கிருஷ்ணசாமி எழுதினார். பாடல்கள்: வாலி, ஆலங்குடி சோமு. இசை. விஸ்வநாதன்_ ராமமூர்த்தி. சாணக்யா டைரக்ட் செய்தார். ஸ்ரீதரின் "கல்யாணப்பரிசு" படத்தின் ஒளிப்பதிவாளர் வின்சென்ட், "எங்கவீட்டுப்பிள்ளை"யின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார்.

எம்.ஜி.ஆர். ஏற்கனவே "நாடோடி மன்னன்" படத்தில் இரட்டை வேடத்தில் அருமையாக நடித்திருந்தபோதிலும், சமூகப் படங்களில் அவர் மிகச்சிறப்பாக இரட்டை வேடங்களில் நடித்த படம் "எங்கவீட்டுப்பிள்ளை." ஒரு எம்.ஜி.ஆருக்கு ஜோடி சரோஜாதேவி. மற்றொரு எம்.ஜி.ஆருக்கு ஜோடி ரத்னா.

எம்.என்.நம்பியார், எஸ்.வி.ரங்காராவ், தங்கவேலு, நாகேஷ், பண்டரிபாய், எல்.விஜயலட்சுமி, மாதவி, பேபி ஷகிலா ஆகியோரும் இதில் நடித்தனர். ராமு, இளங்கோ என்ற இரு வேடங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார்.

ராமு, பணக்கார வீட்டுப்பிள்ளை. மிகவும் நல்லவன். அவனுடைய உறவினனான கஜேந்திரன் (எம்.என்.நம்பியார்) பேராசை பிடித்தவன். சொத்துக்களை சுருட்டிக் கொள்வதற்காக, ராமுவை வெளி உலகம் அறியாதவனாக, கோழையாக வளர்த்து, பல கொடுமைகளைச் செய்கிறான்.

ராமுவைப்போல் தோற்றம் கொண்ட இளங்கோ, மிகவும் நல்லவன். கஜேந்திரனிடம் இருந்து ராமுவை மீட்பதற்காக, மாளிகைக்குள் நுழைந்து ராமுவைப்போல் நடிக்கிறான்.

இதனால் ஏற்படும் திருப்பங்களையும், எதிர்பாராத நிகழ்ச்சிகளையும் சுவையாகப் பின்னி, இளங்கோவை சரோஜாதேவியும், ராமுவை ரத்னாவும் மணப்பது போல் படத்தை சுபமாக முடித்தி ருந்தனர்.

"நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்..." என்று தொடங்கும் வாலியின் பாடலைப்பாடிய படி, எம்.என். நம்பியாரை எம். ஜி.ஆர். சவுக்கால் விளாசும் கட்டம், ரசிகர்களிடம் பெரும் கைதட்டலைப் பெற்றது.

"குமரிப்பெண்ணின் உள்ளத்திலே", "நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்", "மலருக்குத் தென்றல் பகையானால்..." முதலான பாடல்களும் "ஹிட்" ஆயின.

சென்னையில் காசினோ, பிராட்வே, மேகலா ஆகிய 3 தியேட்டர்களிலும், மதுரை சென்ட்ரல், திருச்சி ஜ×பிடர், கோவை ராயல், தஞ்சையாகப்பா ஆகிய தியேட்டர்களிலும் இப்படம் 175 நாட்களுக்கு மேல் ஓடி, வெள்ளி விழா கொண்டாடியது.

திருச்சி ஜ×பிடரில் 236 நாட்களும், சென்னை காசினோவில் 211 நாட்களும் ஓடி, சாதனை படைத்தது. "எங்க வீட்டுப்பிள்ளை"யின் மூலக்கதை டி.வி.நாகராஜ× என்ற தெலுங்கு எழுத்தாளர் எழுதியதாகும். முதலில் தெலுங்குப்படம்தான் வெளிவந்தது. பிறகு, "எங்க வீட்டுப்பிள்ளை" மகத்தான வெற்றி பெற்றபின், இக்கதையை "ராம் அவுர் ஷியாம்" என்ற பெயரில் இந்தியில் எடுத்தனர். இந்தியில் கதாநாயகனாக நடித்தவர் திலீப்குமார்.

இந்திப்படமும் வெற்றி வாகை சூடியது. லாபத்தை திருப்பிக் கொடுத்தார். "எங்க வீட்டுப்பிள்ளை"யின் சென்னை நகர விநியோக உரிமையை எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் வாங்கி இருந்தது. படம் வெள்ளி விழாவைத் தாண்டி ஓடியதால், விநியோகஸ்தர்களுக்கு நிறைய லாபம் கிடைத்தது.

எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் அதிபரான எம்.ஜி.ஆர், தனக்கு அதிக லாபம் வந்ததால், ரூ.1 லட்சத்தை பட அதிபர்களுக்கு வழங்க முடிவு செய்தார். விஜயா கம்பைன்ஸ் அதிபர்களான நாகிரெட்டி_ சக்ரபாணி பெயரில் ரூ.1 லட்சத்துக்கு "செக்" அனுப்பி வைத்தார். அத்துடன், "நான் பேசிய தொகைக்கு மேல் லாபம் வந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த ஒரு லட்சம் ரூபாயை தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று ஒரு கடிதத்தையும் இணைத்திருந்தார்.

ஆனால் அந்தப் பணத்தை பட அதிபர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. செக்கை திருப்பி அனுப்பிவிட்டார்கள். "உங்கள் நல்ல உள்ளத்தை பாராட்டுகிறோம். எனினும், இந்தப் பணத்தை நாங்கள் ஏற்பதற்கு இல்லை. இந்தப் பணத்தை, உங்கள் விருப்பப்படி தர்மகாரியத்திற்கு பயன்படுத்துங்கள்" என்று கடிதம் அனுப்பினார்கள்.

No comments:

Post a Comment