
தொலைபேசி நிறுவன சேவையில் குறைபாடு கூறி வழக்கு தொடர்ந்தவர் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ரூ.3,000 இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த சாய் நரசிம்மன் மயிலாப்பூரில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:
ரிலையன்ஸ் இன்போ காம் நிறுவனத்தில் மூன்று மாதத்திற்கு குறைந்த பட்சம் ரூ.1,800 செலுத்தும் திட்டத்தில் இணைந்தேன். 2003, மே மாதம் பில் தொகை செலுத்த அறிவுறுத்தினர். ஆனால், எனது எண்ணிற்கு மாற்றாக வேறு எண்ணை அனுப்பினர்.
2004ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி ரூ.26,000 செலுத்தும்படி கூறினர். சரியான பில் அனுப்பாமல் பணம் கேட்ட நிறுவன பில் தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தார். ‘‘தவறாக பில்லை நாங்கள் அனுப்பியிருந்தாலும், அவர் இதுவரை பில் தொகை எதுவும் கட்டவில்லை. மேலும், அவர் தொலைபேசி இணைப்பை வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்தியிருக்கிறார்’’ என ரிலையன்ஸ் நிறுவனத்தினர் அளித்த பதில் மனுவில் கூறப்பட்டிருந்தது. வழக்கை நுகர்வோர் நீதிமன்ற தலைவர், உறுப்பினர்கள் விசாரித்தனர். ‘‘தவறான பில் அனுப்பியிருந்தாலும் அதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்கவில்லை. எனவே சாய் நரசிம்மனின் புகார் மனுவை தள்ளுபடி செய்கிறோம். மேலும், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.3,000 தர வேண்டும்’’ என அவர்கள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment