Pages

Sunday, December 20, 2009

இலங்கை முகாம்களில் தமிழ் பெண்கள் பலாத்காரம் ராணுவ வீரர்கள் அட்டூழியம்

இலங்கையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழ் பெண்களை ராணுவ வீரர்கள் பலாத்காரம் செய்ததாக முகாமில் 4 மாதங்கள் தங்கி இருந்த லண்டன் பெண் டாக்டர் கூறியுள்ளார்.இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ தாக்குதலால் இடம் பெயர்ந்த லட்சக்கணக்கான தமிழர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர் அந்த முகாம்களில் அடிப்படை வசதி கூட இல்லை. அங்கு தமிழர்கள் சித்ரவதை செய்யப்படுகிறார்கள் என்று புகார்கள் எழுந்தன. இந்தியாவின் தலையீட்டின்பேரில் முகாமில் தங்கி இருந்த தமிழர்கள் அவர்களது சொந்த ஊரில் மறுகுடியமர்த்தப்பட்டு வருகிறார்கள். ஜனவரி 10ம் தேதிக்குள் முகாமில் உள்ள தமிழர்கள் அனைவரும் அவர்களது ஊர்களுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று இலங்கை அரசு உறுதி அளித்துள்ளது.
இந்த நிலையில், முகாமில் 4 மாதம் தங்கியிருந்த லண்டன் பெண் டாக்டர் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறி உள்ளார். அவரது பெயர் வாணி குமார். 25 வயதான இவர் லண்டனில் டாக்டராக உள்ளார். விடுமுறையில் இலங்கை வந்தபோது, அவரையும் இலங்கை ராணுவ வீரர்கள் முகாமில் அடைத்து வைத்தனர். 4 மாதங்கள் முகாமில் இருந்த அவர் கடந்த செப்டம்பர் மாதம் வெளியேற்றப்பட்டார். லண்டன் திரும்பிய அவர் மருத்துவ பணியை மீண்டும் தொடர்ந்தார்.
இந்த நிலையில் லண்டனில் இருந்து வெளிவரும் 'அப்சர்வர்' நாளேட்டுக்கு டாக்டர் வாணி குமார் "முகாம்களில் இருக்கும் தமிழர்கள் சித்ரவதை செய்யப்படுகிறார்கள். நான் இருந்த முகாமில் தங்கியிருந்தவர்கள் ஒருவருக்கொருவர் பேசக் கூட தடை விதிக்கப்பட்டிருந்தது. முகாமை சுற்றி அமைக்கப்பட்டிருந்த வேலி அருகே யாரும் போகக்கூடாது. அங்கிருந்த பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானதை நானே பார்த்தேன். அதை யாரும் எதிர்த்து கேட்கவில்லை. எதிர்த்தால் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கு தெரியும்.
முகாமில் தங்கியிருந்தவர்களுக்கு சரியாக உணவு வழங்கப்படவில்லை. பெண்களை ராணுவத்தினர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு பதிலுக்கு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நல்ல உணவோ அல்லது பணமோ கொடுத்ததாக கேள்விப்பட்டேன்.
முகாமில் இருந்து லண்டன் திரும்பியதுமே இந்த கொடுமைகளை வெளியே சொல்லி இருப்பேன். ஆனால், அப்போது என் குடும்பத்தினர் பலர் முகாம்களில் இருந்தனர். இப்போது அவர்கள் முகாம்களில் இல்லை. எனவேதான் தமிழ் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை அம்பலபடுத்தி உள்ளேன்"இவ்வாறு கூறினார்.

இது பற்றி இலங்கை அரசின் பேரழிவு மேலாண்மை, மனித உரிமைகள் துறையின் முதன்மை செயலாளர் ராஜீவ விஜயசிங்கேயிடம் கேட்டதற்கு, "பாலியல் தொல்லை, பலாத்காரம் நடக்கவே இல்லை என்று சொல்ல மாட்டேன். முகாம்களில் பாலியல் தொல்லை என்று ஐ.நா அமைப்புகளிடம் இருந்து புகார்கள் வந்தது. ஆனால், அதை உறுதிபடுத்த முடியவில்லை. பெரும்பாலான புகார்கள் முகாமில் தங்கி உள்ள சக தமிழர்கள் மீதுதான் வந்தது. பெயர் குறிப்பிட்டு புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு தயாராகவே உள்ளது " என்றார்.

No comments:

Post a Comment