Pages

Wednesday, December 2, 2009

வாண வேடிக்கை ?

ஆய்வுக்கு புலப்படாத எண்ணற்ற நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றில் பல, சூரியனைக் காட்டிலும் பல நூறு மடங்கு பெரியவை. எரிந்து கொண்டிருக்கும் இந்த நட்சத்திரங்களில் இருந்து ஏராளமான வெப்பம், ஒளி, சக்தி வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பல கோடி ஆண்டுகளாக உள்ள இந்த நட்சத்திரங்கள், ஒரு கட்டத்தில் தங்கள் சக்தியை இழந்து, வெடித்துச் சிதறுகின்றன.


இதுபோன்ற, இறக்கும் நிலையில் உள்ள நட்சத்திரம் ஒன்று, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில், "ஹெர்செல்ஸ்' என்ற விண்வெளி தொலைநோக்கி ஒன்றை, லண்டனில் உள்ள ராயல் விண்வெளி ஆய்வுமையம் விண்ணில் செலுத்தியது.அண்டவெளியில் உள்ள நட்சத்திரங்கள் குறித்து, நிறமாலை ஆய்வுக் கருவி (ஸ்பெக்ட்ரோஸ்கோபிக்) உதவியுடன், இந்த விண்வெளி தொலைநோக்கி ஆய்வு செய்தது. அதில், இறக்கும் நிலையில் உள்ள நட்சத்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது."வி.ஒய்.,கேனிஸ் மேஜோரிஸ்' என்ற பெயர் கொண்ட அந்த நட்சத்திரம் வித்தியாசமானதாகவும், சூரியனை விட 30 முதல் 40 மடங்கு பெரியதாகவும் உள்ளது. பூமியில் இருந்து, நான்கு ஆயிரத்து 500 ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த நட்சத்திரம் எரிந்து கொண்டிருக்கிறது."வி.ஒய்.,கேனிஸ் மேஜோரிஸ்' நட்சத்திரத்தில் இருந்து அணுக்களும், மூலக்கூறுகளும் சுழற்றி, வெளியே வீசி எறியப்படுவது தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த நட்சத்திரம், இயல்பு அளவை விட அதிகமாக ஒளி வீசும் "சூப்பர்நோவா' நிலையை அடைந்துள்ளது.


எனவே, எந்த நேரத்திலும் அந்த நட்சத்திரம் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நட்சத்திர கூட்டத்தில், கடந்த 200 ஆண்டுகளாக"வி.ஒய்.,கேனிஸ் மேஜோரிஸ்' நட்சத்திரம் உள்ளதை, விண்வெளி ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். இறக்கும் நிலையில் உள்ள இந்த நட்சத்திரம், தற்போது உட்கருவில் உள்ள எரிபொருளை மிக வேகமாக எரித்து வருகிறது. இதனால் இது சிவப்பு நிறத்தில் மிகப் பெரிய ஒரு ராட்சஷன் போல் காணப்படுகிறது."ஹெர்செல்ஸ்' தொலைநோக்கியில் நிறமாலை கருவியுடன் இணைக்கப்பட்டுள்ள "பேக்ஸ் அண்டு ஸ்பியர்' என்ற கருவி உதவியுடன் ஆய்வு செய்ததில் "வி.ஒய்.,கேனிஸ் மேஜோரிஸ்' நட்சத்திரத்தைச் சுற்றி கடல் அலை போல் மேகக்கூட்டம் திரண்டு காணப்படுகிறது.


மேலும், நட்சத்திரத்தின் வெடிப்பில் இருந்து வெளிப்படும் ஒளியின் அலை நீளத்தை நிறமாலை கருவி கொண்டு, இறந்து வரும் நட்சத்திரத்தில் ஒளி தோன்றுவதற்கான ரசாயனம் என்ன என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. "வி.ஒய்.,கேனிஸ் மேஜோரிஸ்' நட்சத்திரத்திற்கு அருகில் ஏராளமான கார்பன் மோனாக்சைடு மற்றும் நீர் உள்ளது.இங்கிலாந்தில் உள்ள கார்டிப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மேட் கிரிப்பின், பால்வெளி மண்டலம் சுருள் வடிவில் காணப்படுவதற்கான கொள்கைகள் குறித்து பல விஷயங்களை கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"இங்குள்ள கார்பன்மோனாக்சைடு வாயு அடுக்குகளின் வெப்பநிலையுடன், வி.ஒய்.,கேனிஸ் மேஜோரிஸ்' நட்சத்திரத்திற்கு அருகில் உள்ள கார்பன் மோனாக்சைடு வாயு அடுக்குகளின் வெப்பநிலை, அடர்த்தி, இங்கிருந்து உள்ள தொலைவு உள்ளிட்டவைகள் ஒப்பிடப்பட்டுள்ளன.


இந்த ஆய்விலிருந்து, அங்குள்ள வாயு அடுக்குகளில் நீர் அதிகமாக இருக்கிறது. இது, அங்குள்ள வாயுக்களில் இயற்பியல் மற்றும் ரசாயன மாற்றங்கள் அதிகளவில் நடந்து வருவதை காட்டுகிறது.மேலும், மேகம் போன்று காணப்படும் வாயு மற்றும் தூசிக் கூட்டத்தின் ஒரு முனையில் தான், இந்த வி.ஒய்.,கேனிஸ் மேஜோரிஸ்' நட்சத்திரம் அமைந்திருப்பது தெரிய வந்துள்ளது' என்றார்.வி.ஒய்.,கேனிஸ் மேஜோரிஸ்' நட்சத்திரம் அதன் எடையை இழந்து வருவதுடன் அதன் மேல் பகுதி விரிவடைந்து வருகிறது. இதனால் இந்த நட்சத்திரம் இறக்கும் நிலையில் உள்ளது என்பது, இந்த ஆய்வு மூலம் தெரிய வருகிறது.பிரம்மாண்ட நட்சத்திரம் வெடித்துச் சிதறுவதால், விண்வெளியில் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விக்கு, இதுபோன்று ஏராளமான நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறியிருக்கின்றன. அதுபோன்ற நேரங்களில் எந்த பாதிப்பும் இல்லை. எனவே, இப்போதும் இருக்காது என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment