Pages

Sunday, December 20, 2009

பஞ்சாப் பெண்கள் வெளிநாட்டிருக்கு ஓட்டம்

வெளிநாடு செல்ல எளிதாக விசா பெறுவதற்காக ஏஜென்ட்கள் தரும் ஐடியாவின்படி பஞ்சாப் பெண்கள் போலியாக திருமணம் செய்கின்றனர். இந்த போலி திருமண பிசினஸில் பல கோடி புழங்குகிறது. இங்கிலாந்து உட்பட ஐரோப்பிய நாடுகளில் வேலைக்காக நிரந்தரமாக குடியேற பெண்கள் விரும்பினால் விசா பெறுவதில் சிக்கலான நடைமுறைகள் உள்ளன. ஆனால், ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த ஒருவர், இந்தியப் பெண்ணை திருமணம் செய்து கொண்டால் அந்தப் பெண்ணுக்கு விசா கிடைப்பது சுலபம். எனினும், அந்தப் பெண் தெளிவான ஆங்கிலம் பேச வேண்டும். சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறையில் அதை வெளிநாடுகள் சோதிக்கின்றன. அதில் தேர்வு பெறுவது அவசியம். ஆங்கிலம் தெரிவதைப் பயன்படுத்தி, வெளிநாடு போக விரும்பும் பஞ்சாப் பெண்களிடம் டிராவல் ஏஜென்ட்கள் அமோக வசூலில் ஈடுபடுகின்றனர்.

வெளிநாடுகளில் போலி திருமணத்துக்கென சிலர் உதவுகின்றனர். அப்படி உதவும் 'மணமகன்' குடியுரிமை சட்டப்படி, தனது இந்திய 'மனைவி'க்கான விசா செலவை ஏற்பார். 'மணமகனின்' போட்டோவை வைத்து இந்தியாவில் பக்கா 'போலி' திருமண ஆல்பத்தை தயாரிப்பார்கள். இதில் திருமண மண்டப ஓனர்களும் கொள்ளை லாபம் பார்க்கின்றனர். திருமண நிகழ்ச்சிகள், விருந்தினர்கள், நண்பர்கள் என ஏற்பாடு செய்து ஆல்பம் தயாரிப்பார்கள். அதை பாஸ்போர்ட் அலுவலகத்தில் அந்தப் பெண் சமர்ப்பித்து விசா பெற்று வெளிநாடு செல்வார். அங்கு விமான நிலையத்தில் இறங்கியதும் விசாவுக்கு செலவிட்ட 'கணவருக்கு' பணத்தை செட்டில் செய்து விட்டு போலி மணமக்கள் 'என் வழி தனி வழி' என்று பிரிந்து விடுவார்கள்.
இதுபற்றி சண்டிகரின் ஏஜென்ட் ஒருவர் கூறுகையில், "போலி திருமணப் பதிவு சான்றிதழ்கள் ரூ.10,000 முதல் ரூ.20,000க்கு கிடைக்கின்றன. தவிர, போலி ஆல்பத்தை தயார் செய்தால் ஒரு பெண்ணை வெளிநாட்டில் செட்டில் செய்து விடலாம்" என்றார். இதேபோல, மேற்படிப்புக்கு செல்லும் மாணவராக நடித்தும் வெளிநாடுகளுக்கு மோசடியாக ஏஜென்ட்கள் விசா ஏற்பாடு செய்கின்றனர். இதுபற்றி குடியுரிமை அலுவலக ஆலோசகர் அருண் குமார் கூறுகையில், "போலி திருமணம், போலி மாணவர் விசா ஆகியவற்றை கண்டுபிடித்து தடை செய்கிறோம். எனினும், இதுபோன்ற மோசடியில் பலரை ஏஜென்ட்கள் சிக்க வைத்து பணம் சம்பாதிக்கின்றனர்" என்றார்.

No comments:

Post a Comment