குறிப்பாக, போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள சென்னை சாலைகளில் படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்குவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. படப்பிடிப்புகள் காரணமாக, சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்படுவதால் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களும் நெரிசலில் சிக்கும் அபாயமும் உள்ளது. வாகன ஓட்டிகள் கவனம் திசை திரும்புவதால் அவர்கள் விபத்தில் சிக்கும் சூழ்நிலையும் உருவாகிறது. திரை உலகினர் மகிழ்ச்சி மட்டுமே முக்கியம் என்பதால், இதையெல்லாம் கண்டுக் கொள்ளவேண்டியவர்களும் மவுனம் காக்கின்றனர். சென்னையில் படப்பிடிப்பு அதிகம் நடக்கும் பொது இடங்களில் கோயம்பேடு முக்கிய இடத்தை பிடித்துள் ளது. இங்குள்ள ஆம்னி பஸ் நிலையம், மார்க்கெட்டை "ரவுண்டடித்து' சினிமா படப்பிடிப்புகள் அதிகளவில் நடக்கின்றன.அத்தகைய நாட்களில் கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மார்க்கெட்டில் வியாபாரம் பாதிக்கப்படுவதால், வியாபாரிகளும் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகின்றனர்.
கோயம்பேடு பழ மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் சீனிவாசன் கூறியதாவது: மார்க்கெட்டில் வியாபாரம் நடக்கும் பகல் நேரத்தில் படப்பிடிப்புகள் நடத்துவதால் வியாபாரிகள், பொதுமக்களுக்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. மார்க்கெட் கூலித் தொழிலாளர்கள் மட்டுமின்றி பொது மக்களும் போட்டி போட்டுக்கொண்டு படப்பிடிப்பை வேடிக்கை பார்க்கின்றனர். அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு திருடர்கள் அவர்களிடம் கைவரிசை காட்டி செல்கின்றனர். வெளியாட்கள் படப்பிடிப்பை பார்ப்பதற்காக மார்க்கெட்டினுள் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் டூவீலர்கள் அதிகளவில் திருடுபோகின்றன. சினிமா மட்டுமின்றி "டிவி' சீரியல்களும் இப்போது மார்க்கெட்டில், படம் பிடிக்கப்படுகின்றன. ஒருவர் காய்கறி வாங்குவதுபோல் காட்சியை ஒரு நாள் முழுவதும் படமாக்கி அன்றைய வியாபாரத்தையும் முடக்கிவிடுகின்றனர். கிராபிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு தொழிற்நுட்பங்கள் உள்ளநிலையில் அதையெல்லாம்விட்டுவிட்டு பொது இடத்தில் சினிமா படப்பிடிப்பு நடத்துவது கண்டிக்கதக்கது.
பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்க செயலர் மூக்கையா கூறியதாவது: கடந்த சில நாட்களுக்கு முன் மார்க்கெட்டில் சினிமா படப்பிடிப்பு நடந்தது. வியாபார நேரத்தில் படப்பிடிப்பு நடந்ததால் பூக்கள் விற்காமல் அன்றைய தினம் பல லட்சம் ரூபாய் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதுபோல, நடந்த பல படப்பிடிப்புகளால் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. படப்பிடிப்பு குழுவினர் வியாபாரிகளையும், பொதுமக்களையும் அத்தகைய நேரத்தில் மார்க்கெட்டினுள் அனுமதிப்பதில்லை. கடையில் இருக்கும் வியாபாரிகளையும் "பீல்டு' எனக்கூறி கடையைவிட்டு வெளியேறுமாறு வலுக்கட்டாயமாக தள்ளிவிடுகின்றனர்.மார்க்கெட் காலியாக இருக்கும் இரவு நேரங்களில் அவர்கள் படப்பிடிப்பை நடத்திக்கொள்ளலாம். ஆனால், கடையில் சரக்கு இருக்கும்போதே அதையும் காட்சிகளில் வைத்து அவர்கள் செலவை குறைப்பதற்காக பகல் நேரங்களில் படப்பிடிப்பை நடத்தி எங்கள் வருமானத்திற்கு வேட்டு வைத்து செல்கின்றனர். இது குறித்து படக்குழுவினரிடம் கேட்கும்போது, மார்க்கெட் நிர்வாக குழு அதிகாரிகள் அனுமதியுடன், சி.எம்.டி.ஏ.,விற்கு பணம் கட்டிவிட்டுதான் நாங்கள் படப்பிடிப்பு நடத்துகிறோம். இன்று காட்சியை முடிக்காவிட்டால் பணச் செலவு அதிகமாகிவிடும்' என்கின்றனர்.
இதே போன்று, படப்பிடிப்புகள் நடத்தினால் வியாபாரிகள் கடையை மூடிவிட்டுதான் செல்லவேண்டும். இனிமேலாவது மார்க்கெட்டில் படப்பிடிப்புகள் நடத்துவதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கக்கூடாது.
வாகன ஓட்டிகள் அவதி : சென்னை பை-பாஸ் சாலையில் தொடர்ந்து நடந்து வரும் சினிமா படப் பிடிப்பால், போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், நுழைவு வரி செலுத்தி பயணித்த வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.தாம்பரம் இரும்புலியூர்-மாதவரம் பை-பாஸ் சந்திப்பு இடையில் சென்னை பை-பாஸ் சாலை உள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள் சென்னை நகருக்குள் நுழையாமல் எண்ணூர் மற்றும் சென்னை துறைமுகங்களை அடைவதற்கும், ஆந்திர மாநிலம் செல்வதற்கும் வசதியாக இச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.இச்சாலையில் அனகாபுத்தூர், போரூர் ஆகிய இடங்களில் பிரமாண்ட மேம்பாலங்கள் கட்டப்பட்டு மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை நான்கு வழி சாலை அமைக்கப் பட்டுள்ளது. மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம் சந்திப்புகளில் மேம்பாலங்கள் கட்டி, நான்கு வழி சாலையாக மாற்றும் பணி கடந்த 2004ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடந்து வருகிறது.
இச்சாலையில், பணிகள் முழுவதும் முடியாத நிலையில் சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டு வருகிறது. வானகரம் அருகே சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு நெடுஞ்சாலைத்துறை மூலம் இச்சாலையில் பயணிக்கும் வாகனங்களிடம் நுழைவுவரி வசூல் செய்யும் பணியும் ஜரூராக நடந்து வருகிறது. சாலை பணிகள் முழுவதும் முடியாத நிலையில், நுழைவுவரி வசூலிப்பது வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இச்சாலையில், சினிமா படப்பிடிப்பும் தற்போது நடந்து வருகிறது.பல நாட்களாக நடந்து வரும் படப்பிடிப்பு காரணமாக சென்னை பை-பாஸ் சாலையில் நொளம்பூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள் ளது.
சினிமா படப்பிடிப்பு குழுவினர் மூலம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ள தனியார் செக்யூரிட்டி ஊழியர்கள் அவ்வழியாக வரும் வாகனங்களை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.மேலும், வாகனங்கள் திரும்பி செல்லும் எதிர்புறச்சாலையும் படப்பிடிப்பு குழுவினரால் தடுப்புகள் வைக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளதால், ஒரே சாலையில் வாகனங்கள் பயணிக்க வேண்டியுள்ளது. அவ்வாறு செல்லும் போது, எதிரில் வரும் வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது. நுழைவுவரி செலுத்தி சென்னை பை-பாஸ் சாலையில் பயணித்த வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். திருப்பி அனுப்பப்பட்ட வாகனங்கள், சில கிலோ மீட்டர் தூரம் கடக்க வேண்டிய இடத்தை பல கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்றி சென்று கடந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.
No comments:
Post a Comment