வெற்றி பெற்றால் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே பதவி வகிக்கும் எம்.எல்.ஏ., பொறுப்பிற்கு, திராவிடக் கட்சிகள் 50 கோடி ரூபாய் செலவு செய்து, தேர்தலை சந்தித்துள்ளன.
வந்தவாசி, திருச்செந்தூர் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல், கடந்த மாதம் 23ம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்று முதலே, தொகுதி முழுவதும் தேர்தல் பணி சூடு பிடிக்கத் துவங்கியது. போட்டியிட்ட இரண்டு முக்கிய கட்சிகளும், ஒவ்வொரு கிளைக்கும் தேர்தல் அலுவலகம், சுவர் விளம்பரம் செய்ய முதற்கட்டமாக, தலா 5,000 ரூபாய் மற்றும் கட்சி பிரமுகர்களின் செலவிற்கு 5,000 ரூபாய் வழங்கப்பட்டது.மனு தாக்கலின்போது, தி.மு.க., - அ.தி.மு.க., இரு கட்சிகளும், 10 ஆயிரம் பேருக்கு குறைவில்லாமல் கூட்டத்தை கூட்டின. நூற்றுக்கணக்கான கார்கள் அணி வகுத்தன. மனு தாக்கலில் கலந்து கொண்டவர்களுக்கு தலா 100 ரூபாய், பிரியாணி பொட்டலங்கள், ஆண்களுக்கு, "குவார்ட்டர்' பாட்டில் வழங்கப்பட்டன.
கடந்த 5ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. மாநில மாநாட்டைப் போல் தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டம் நடத்தி, 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு வேட்டி, துண்டுகள், பிரியாணி பொட்டலங்கள் மற்றும் "குவார்ட்டர்' பாட்டில்கள் வழங்கி அசத்தினர்.எளிய முறையில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடத்திய அ.தி.மு.க.,வும், இளைஞர் பாசறை செயல் வீரர்கள் கூட்டம் என்ற பெயரில், 5,000க்கும் மேற்பட்டோருக்கு, பிரியாணி மற்றும் "குவார்ட்டர்' பாட்டில்களை வழங்கி ஈடு கட்டியது.அடுத்த கட்டமாக ஓட்டுப் பதிவுக்கு, இரண்டு நாட்களுக்கு முன் பணப் பட்டுவாடா நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், ஒரு வாரம் முன் கூட்டியே ஒவ்வொரு வாக்காளர் களுக்கும் 500 ரூபாய் பணம் மற்றும் வேட்டி சேலைகள் வீதம், தொகுதியிலுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் 80 சதவீதம் பேருக்கு ஒரு கட்சி தரப்பில் வழங்கப்பட்டது.
இன்னொரு கட்சியும் பணத்தை தண்ணீராக இறைக்க தயாரானது. ஆனால், போலீஸ் ரெய்டு, அதிகாரிகள் அதிரடிச் சோதனை காரணமாக அந்த கட்சிக்கு அந்த வாய்ப்பு கிடைக்க வில்லை. பண பட்டுவாடா அனைவருக்கும் கிடைக்காததால், கிராமங்கள்தோறும் குடுமிப்பிடி சண்டை நடந்தது. இதனால் கலக்கம் அடைந்து இரண்டாவது சுற்று பணப்பட்டுவாடா செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டனர்.இந்நிலையில், 17ம் தேதி காலை முதல் ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் தலா 200 ரூபாய் வீதம் வழங்கினர். அதேபோன்று மகளிர் குழுக்களுக்கு முதல் தவணையாக 2,000 ரூபாயும், இரண்டாம் தவணையாக 2,000 ரூபாய், எவர் சில்வர் தட்டு வழங்கினர்.
இந்நிலையில் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா பிரசாரத்தை முடித்து சென்றவுடன், வருகையை பதிவு செய்ததாக நினைத்த அக்கட்சியினர், அன்று மாலை முதலே தொகுதியிலிருந்து வெளியேறத் துவங்கினர்.மொத்தத்தில் வந்தவாசி, திருச்செந்தூர் இடைத் தேர்தலில் ஒவ்வொரு வாக்காளரும், குறைந்தபட்சம் 2,000 ரூபாய் வரை பெற்று பயனடைந்துள்ளனர். இவை மட்டுமின்றி சுவர் விளம்பரம், கட்சிக் கொடிகள், பேனர்கள், தோரணங்கள், கட் - அவுட் வைத்தல், தலைவர்களுக்கு கூட்டம் சேர்த்தல் என பல கோடி ரூபாய் திராவிட கட்சிகள் செலவு செய்துள்ளன.
டாஸ்மாக் மது பானங்கள் மட்டுமின்றி, புதுச்சேரி மற்றும் வெளி நாட்டு சரக்குகளும் சகட்டு மேனிக்கு தொகுதியில் வலம் வந்தன.ஒவ்வொரு வேட்பாளரும், தேர்தல் விதிமுறைப்படி அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை தேர்தல் செலவு செய்யலாம். ஆனால் ஒன்றரை ஆண்டு கால எம்.எல்.ஏ., பதவிக்காக, வந்தவாசி, திருச்செந்தூர் இடைத் தேர்தலில் திராவிடக் கட்சிகள் 50 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளன.
courtesy : DINAMALAR DAILY
Monday, December 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment