ஜார்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி மதுகோடா ஊழல் செய்து ரூ.4 ஆயிரம் கோடி சொத்து சேர்த்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அமலாக்க பிரிவு, வருமான வரித்துறை மாநில லஞ்ச ஒழிப்பு துறை ஆகியவை விசாரணை நடத்தின.
மாநில லஞ்சஒழிப்பு துறை அவரை விசாரணைக்கு வரும்படி 2 முறை அழைத்தது. ஆனால் அவர் ஆஜர் ஆகவில்லை. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை நேற்று திடீரென கைது செய்தனர்.
பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து ராஞ்சியில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மதுகோடா ஊழலுக்கு அவருடன் மந்திரியாக இருந்த கமலேஷ்குமார் சிங்கும் உடந்தையாக இருந்தது தெரிந்தது. இதையடுத்து அவரையும் லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர். இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.
ஹீசைனாபாத் என்ற இடத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்தபோது அவரை கைது செய்தனர். அவர் தற்போது சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரத்துக்கு கிளம்பியபோது அவரை கைது செய்தனர்.
கமலேஷ்குமார் சிங்குக்கும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர் ஆஜர் ஆகவில்லை. எனவேதான் அவரையும் கைது செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை டைரக்டர் ரியாஷ் அகமது தெரிவித்தார்.
மதுகோடா, கமலேஷ் குமார் சிங் இருவர் மீதும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
லஞ்சஒழிப்பு துறை மதுகோடா, கமலேஷ்குமார் சிங் ஆகிய இருவர் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த ஜூலை மாதம் 2-ந்தேதி வழக்குப்பதிவு செய்தது. இவர்களுடன் மேலும் 2 முன்னாள் மந்திரிகள் பாலுபிரதாப்சிங், பந்யதிர்சி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவர்களும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுகோடா மனைவி கீதா தற்போது ஜெகநாத்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்காக மதுகோடா பிரசாரம் செய்து வந்தார். இந்த நிலையில்தான் அவரை கைது செய்து விட்டனர்.
அவரை கைது செய்தபோது கீதா தொகுதியில் பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அவர் பிரசாரத்தை ரத்து செய்து விட்டு உடனே கட்சி தொண்டர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்.
பின்னர் நிருபர்களிடம் இதுபற்றி கூறிய கீதா, எங்களுக்கு நீதிமன்றங்கள் மீது முழு நம்பிக்கை உள்ளது. எனது கணவர் குற்றமற்றவர் என்பதை விரைவில் நிரூபித்து வெளியே வருவார். எங்கள் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கணவர் கைதால் தேர்தலில் எந்த பாதிப்பும் வராது. 6 தொகுதி களிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றார்.
மதுகோடா ஊழலுக்கு பல அதிகாரிகள் உடந்தையாக இருந்ததை அமலாக்க பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர்.
ஜார்கண்ட் மாநில அரசுப்பதிவு செயலாளர் மற்றும் கீழ்நிலை செயலாளர் பதவிகளில் இருக்கும் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உடந்தையாக இருந்து உள்ளனர். அவர்களிடம் அமலாக்க பிரிவு அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர். அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tuesday, December 1, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment