Thursday, December 24, 2009
மறக்க முடியுமா 39
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரீகன், தமிழக முதல்_ அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர், ஆந்திர முதல்_ அமைச்சராக இருந்த என்.டி.ராமராவ் ஆகிய மூவருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. மூவரும் திரைப்பட நடிகர்களாக இருந்து, ஆட்சிக்கு வந்தவர்கள்.
1911_ல் பிறந்த ரீகன், பள்ளியிலும், கல்லூரியிலும் படிக்கும் போது, சிறந்த கால்பந்து வீரராகத் திகழ்ந்தவர். கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றபின், அவருக்கு சினிமா வாய்ப்புகள் தேடிவந்தன. 1940_ல் "ஆல் அமெரிக்கன்" என்ற படம் உள்பட சில படங்களில் நடித்தார்.
திரை உலகில் அவர் முதல் இடத்தைப் பெற முடியவில்லையென்றாலும், வீரதீரச் செயல்கள் நிறைந்த படங்களில் நடித்துப் புகழ் பெற்றார். குதிரை சவாரி செய்வதில் நிபுணர். பல படங்களில் ராணுவ வீரராக _ தளபதியாக நடித்துள்ளார்.
இரண்டாவது உலகப் போரின்போது, அமெரிக்க விமானப்படை கேப்டனாகப் பணியாற்றினார். பிறகு டெலிவிஷனில் தோன்றியதுடன், ரேடியோவில் வர்ணனையாளராகப் பணியாற்றினார். 1962_ல் அரசியலில் ஆர்வம் கொண்டு, குடியரசு கட்சியில் சேர்ந்தார். பிறகு, கலிபோர்னியா மாநிலத்தின் கவர்னரானார்.
1980_ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டார். ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட அன்றைய ஜனாதிபதி ஜிம்மி கார்டரை பெரிய ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்து, வெற்றி பெற்றார்.
1984_ல் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு, மகத்தான வெற்றி பெற்றார். அப்போது அவருக்கு 73 வயது. இந்த வயதில் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதி பதவி வகித்தது அதுவே முதல் தடவை. 8 ஆண்டுகள் ஜனாதிபதியாக இருந்த ரீகன், 1989_ல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.
ரீகனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் அதிசயமான ஒற்றுமை ஒன்று உண்டு. எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்டபோது, கழுத்தில் குண்டுகள் பாய்ந்ததும் அவர் அதிசயமாக உயிர் தப்பினார். இதேபோல் துப்பாக்கியால் சுடப்பட்டு, உயிர் தப்பியவர் ரீகன்!
அவர் ஜனாதிபதியாக இருந்த சமயத்தில், 1981 மார்ச் 30_ந்தேதி ஒரு கூட்டத்தில் பேசிவிட்டு காரில் ஏறிச்சென்றபோது, அவரை நோக்கி ஹிங்லி என்ற 25 வயது வாலிபன் 6 முறை துப்பாக்கியால் சுட்டான்.
ரீகன் மார்பில் குண்டு பாய்ந்தது. அவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனார்கள். ரீகனின் இடது புற நுரையீரலில் குண்டு பாய்ந்திருந்தது. அதை அகற்ற 2 மணி நேரம் ஆபரேஷன் நடந்தது. மரணத்தின் விளிம்பு வரை சென்று விட்டு, ரீகன் உயிர் தப்பினார்.
துப்பாக்கியால் சுட்டவன் கைது செய்யப்பட்டான். அவனை விசாரித்தபோது, "நான் ஒரு நடிகையை காதலித்தேன். என் வீரத்தை அவள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஜனாதிபதியை சுட்டேன்" என்றான்.
"ஜனாதிபதியை சுடும்படி அவள் கூறினாளா?" என்று கேட்டதற்கு, "இல்லை. அவளும், நானும் இதுவரை சந்தித்ததே இல்லை" என்று பதிலளித்தான், ஹிங்லி!
ரீகனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் இன்னொரு ஒற்றுமை உண்டு. திரை உலகில் புகழ் பெற்ற நடிகையாக விளங்கிய வி.என்.ஜானகியை எம்.ஜி.ஆர். மணந்தார். ரீகனும் ஒரு நடிகையைத்தான் மணந்தார்! பெயர் நான்சி. இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள்.
ஆந்திராவின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய என்.டி.ராமராவ், 1982_ல் "தெலுங்கு தேசம்" என்ற கட்சியைத் தொடங்கி, குறுகிய காலத்தில் ஆட்சியைக் கைப்பற்றினார்.
எனினும், எம்.ஜி.ஆருக்கும், என்.டி.ஆருக்கும் சில முக்கிய வித்தியாசங்கள் உண்டு. என்.டி.ஆர். பல புராணப் படங்களில் கிருஷ்ணனாகவும், ராமராகவும் நடித்து ஆந்திர ரசிகர்களால் "தேவுடு" என்று அழைக்கப்பட்டவர்.
எம்.ஜி.ஆர். ஆரம்ப காலத்தில் ஒரு சில புராணப் படங்களில் நடித்துள்ளபோதிலும், பிற்காலத்தில் புராணப் படங்களில் நடிப்பதை தவிர்த்தவர். எம்.ஜி.ஆருக்கும், என்.டி.ராமராவுக்கும் இன்னொரு முக்கிய வித்தியாசம்.
எம்.ஜி.ஆர். உயிருள்ள வரை தமிழக முதல்_ அமைச்சராக இருந்தார். என்.டி.ராமராவ், அவருடைய மருமகன் சந்திரபாபு நாயுடுவிடமே பதவியை பறிகொடுத்தார். 1996 ஜனவரியில், அவர் மரணம் அடையும் போது, பதவியில் இல்லை.
ராமராவுக்கும், எம்.ஜி.ஆருக்கும் இன்னொரு பெரிய வித்தியாசம் உண்டு. என்.டி.ஆருக்கு ஏராளமான பிள்ளைகள். பேரன் பேத்திகளுக்கு கணக்கே இல்லை! ஆனால் எம்.ஜி.ஆருக்கு குழந்தைகள் இல்லை!
தனக்குக் குழந்தை இல்லை என்ற குறை, எம்.ஜி.ஆரின் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது. ஒரு சிலரிடம் மட்டும் அவர் மனம் விட்டுப் பேசுவார். அவர்களில், வசனகர்த்தா ஆரூர்தாஸ் ஒருவர். "அன்பே வா", "பெற்றால்தான் பிள்ளையா", "வேட்டைக்காரன்", "தாய் சொல்லைத் தட்டாதே" உள்பட எம்.ஜி.ஆர். நடித்த 14 படங்களுக்கு வசனம் எழுதியவர்.
எம்.ஜி.ஆர். தன்னிடம் கூறியதை, பின்னர் ஒரு கட்டுரையில் அவர் எழுதியுள்ளார். ஆரூர்தாஸ் குறிப்பிட்டிருப்பதாவது:-
"ஒரு நாள், ஒப்பனை அறையில், நாங்கள் தனித்திருந்த வேளையில் எம்.ஜி.ஆர். என்னிடம் சொன்னார்: "பசி பட்டினியின் எல்லையையே பார்த்தவன் நான்! அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளின் சிகரத்தைத் தொட்டிருக்கிறேன். இதெல்லாம் கடந்த காலத்தில். இப்போது, புகழின் உச்சியில் இருக்கிறேன். வசதிக்கு பஞ்சம் இல்லை. தினமும் என் வீட்டில் மூணு வேளையும் குறைஞ்சது அம்பது அறுபது இலைங்க விழுது. ஆனாலும் ரெண்டே ரெண்டு குறைங்களை மட்டும் என்னிக்குமே என்னால போக்கிக்கவே முடியாது.
முதலாவது, குழந்தை வாரிசு இல்லாத குறை! "
அப்போது நான் இடைமறித்து, "ஏன்? பெருந்தலைவர் காமராஜருக்குக் கூடத்தான் குழந்தைங்க _வாரிசு இல்லை. அதனால் ஒரு குறையும் இல்லையே" என்றேன்.
"அப்படி இல்லை. நீங்க சொல்றது சரி இல்லை. காமராஜருக்குக் கல்யாணமே ஆகாத காரணத்துனால குழந்தை இல்லை. ஆனா, எனக்கு ரெண்டு மூணு கல்யாணம் ஆகியும் ஒரு குழந்தைகூட பிறக்கலியே. `எந்த ஒரு புண்ணியவதியாவது என் குழந்தையை அவவயித்துல பத்து மாசம் சுமந்து பெத்து, என் கையிலே கொடுக்கமாட்டாளா அப்படிங்குற அந்த நிரந்தரமான ஏக்கம் என் நெஞ்சை விட்டு எப்பவுமே நீங்க மாட்டேங்குது.
ஜோதிடக் கலையில் நிபுணர்களான இரண்டு மூன்று பேர் ஒரே கருத்தைச் சொன்னார்கள். "இது பலதார ஜாதகம்! உங்கள் வாழ்க்கையில் பல பெண்கள் குறுக்கிடுவார்கள். அவர்களுக்கு வேண்டியதை எல்லாம் நீங்க குடுப்பீங்க. ஆனா அவங்க யாரும், உங்களுக்கு வேண்டிய ஒரு குழந்தையைக் கொடுக்கமாட்டாங்க. கொடுக்கவும் முடியாது" என்றார்கள்.
தன்னை குழந்தையை பாவிச்சிக்கும்படி `ஜானு' (வி.என்.ஜானகி) எனக்கு ஆறுதல் சொல்லிச்சு. குழந்தையைப் பெத்துக்குடுக்க வேண்டிய மனைவியை, குழந்தையா நினைச்சுக்க முடியுமா என்ன?
என் அண்ணனுக்கு அத்தனை குழந்தைகளைக் கொடுத்த கடவுளுக்கு எனக்கு ஒரே ஒரு குழந்தையைக்கூட குடுக்க மனசு வரலே பாத்திங்களா? என் உடம்புல ஓடுற அதே ரத்தந்தானே அவர் உடம்புலேயும் ஓடுது! பின்னே ஏன் இப்படி?
போகட்டும். நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்!
என்னுடைய இரண்டாவது குறை என்னன்னா, ஏதோ ஒரு அடிப்படைக் கல்வி அறிவு என்கிட்டே இருக்கு. அதுவும் நானா, ஆர்வத்துல கத்து வளர்த்துக்கிட்டது. அதைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லும்படியா பெரிசா ஒண்ணும் நான் படிச்சுத் தெரிஞ்சிக்கலே. அதுக்கு எனக்கு இளமையிலே வறுமையின் காரணமா வசதியும் வாய்ப்பும் இல்லாமல் போயிடுச்சி.
மத்தவங்க ஆங்கிலத்துலேயும், நல்ல தமிழ்லேயும் சரளமாகப் பேசி அரிய பெரிய கருத்துக்களை எடுத்துச் சொல்றதைக் கேக்கும் போதும், அண்ணா, கிருபானந்த வாரியார் இவங்களோட சொற்பொழிவைக் கேட்கும் போதும், என்னால அவங்களை மாதிரி பேச முடியலியேன்னு நினைத்து எனக்கு நானே வருத்தப்படுவேன்.
ஆனாலும் எப்படியோ பேசிச் சமாளித்து, மத்தவங்களைச் சந்தோஷப்படுத்திடுவேன். ஆயிரந்தான் இருந்தாலும், குறை குறைதானே! அதிலேயும் பூர்த்தி செய்ய முடியாத குறை!
அடுத்த பிறவின்னு ஒண்ணு இருந்தா, அதுலேயாவது, நான் பெரிய புள்ளைக்குட்டிக்காரனாகவும், சிறந்த கல்விமானாகவும் இருக்கணும்!"
இவ்வாறு எம்.ஜி.ஆர்.கூறியதாக ஆரூர்தாஸ் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment