தெலுங்கானா மாநிலம் அமைக்கக்கோரி ஒரு தரப்பினரும் தெலுங்கானா கூடாது என்று மற்றொரு தரப்பினரும் ஆந்திராவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இரு தரப்பிலும் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு கலவரம் செய்வதால் போராட்டம் நீடித்தப்படி உள்ளது.
போராட்டக்காரர்கள் வாகனங்களை கல்வீசி தாக்குவதாலும், தீ வைப்பதாலும் ஆந்திராவில் இன்று 12-வது நாளாக பஸ்கள் ஓடவில்லை. பக்கத்து மாநிலங்களில் இருந்து ஆந்திரா செல்லும் பஸ்கள், லாரிகளும் ஓடவில்லை.
ரெயில்கள் மட்டும் பலத்தபாதுகாப்புடன் ஓடுகின்றன. வாகன முடக்கம் காரணமாக ஆந்திராவில் இருந்து சென்னை வரும் காய்கறிகள், பழவகைகள் வரத்து நின்று விட்டன.
தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து திருப்பதி, காளஹஸ்திக்கு ஏராளமான பஸ்கள் இயங்கி வந்தன. இன்று 12-வது நாளாக சுமார் 200 பஸ்கள் நிறுத்தப்பட்டன.
இதனால் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க விரும்பியபக்தர்கள் சென்னையில் இருந்து ரெயிலில் சென்று வந்தனர். திருப்பதி செல்வதற்கு எளிதாக இருந்தபோதும் திரும்பி வருவதற்குள் சென்னை பக்தர்கள் படாதபாடுபடுகிறார்கள்.
இந்த நிலையில் சித்தூர் மாவட்ட போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திருப்பதி மலை மீது செல்லும் பஸ்களை தடுத்து நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளனர். 2 நாட்களுக்கு இந்த போராட்டம் நடக்கும் என்று கூறியுள்ளனர்.
மலை அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு பஸ் ஓடாவிட்டால் கடும் பாதிப்பு ஏற்படும். எனவே மற்ற மாநிலங்களில் இருந்து 2 நாட்களுக்கு பக்தர்கள்யாரும் திருப்பதிக்கு வரவேண்டாம் என்று போராட்ட குழுவினர் எச்சரித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment