கடந்த 2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மெரீனா கடற்கரையை அழகு படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. நேப்பியர் பாலத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை காமராஜர் சாலையில் கிழக்குப்பக்கம் 3.1 கி.மீ. நீளத்திற்கு நடைபாதை கருங்கல் பலகை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
நடைபாதையின் ஓரத்தில் அழகிய, கண்ணை கவரும் தூண்கள், துருப்பிடிக்காத “ஸ்டீல்” பைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மெரீனா கடற்கரைக்கு வரும் பொது மக்கள் உட்கார்ந்து ஓய்வு எடுப்பதற்காகவும், கடற் கரையின் அழகை ரசிக்கவும் 14 இடங்களில் வண்ண வண்ண கருங்கற்கள், “கிரானைட்” கற்கள் கொண்டு கடற்கரையை பார்த்த வண்ணம் உட்காரும் வகையில் நவீன இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
நடைபாதைக்கும்-கடற்கரை பயன்பாட்டு சாலைக்கும் இடையில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்காக 4 இடங்களில் நவீன பொது கழிபபிடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
கண்ணகி சிலை அருகே நவீன முறையில் நடைபாதையும், சுரங்கப்பாதையும், கடற்கரையை சுற்றிலும் கண்கவரும் வகையில் பறவை வடிவிலான மின் விளக்குகளும் ரூ.4 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. காந்தி சிலை அருகில் அழகிய நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இரவில் பொதுமக்கள் பார்த்து ரசிப்பதற்காக நீர் வீழ்ச்சிகளுக்கு இடையில் வண்ண விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. கடற் கரையைச்சுற்றி நவீன வசதிகளுடன் பஸ் நிறுத்தங்கள், வாகனங்களை நிறுத்துவதற்காக நவீன கார் நிறுத்தங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை நகர் முழுவதும் முக்கிய பகுதிகளில் பூங் காக்கள் கட்டி வரும் துணை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னை மெரீனா கடற்கரையை அழகு படுத்துவதிலும் பெரும் முனைப்பு காட்டினார்.
இதனால் இப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன. மேலும் அவ்வப்போது அதிகாலையில் “திடீ ரென்று” இந்த பணிகளை பார்வையிட்டு தீவிரப்படுத்தினார். அவரின் மின்னல் வேக நடவடிக்கையால் இந்த பணிகள் குறுகிய காலத்தில் முடிக்கப்பட்டுள்ளது.
நவீன முறையில் அழகு படுத்தப்பட்டுள்ள மெரீனா கடற்கரையின் திறப்பு விழா இன்று காலை, காந்தி சிலை அருகே நடந்தது. துணை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
முதல்-அமைச்சர் கருணாநிதி அழகுபடுத்தப்பட்ட மெரீனா கடற்கரையை காலை 10.20 மணிக்கு திறந்து வைத்தார்.
அங்கு மரக்கன்றும் நட்டார். பின்னர் அழகு படுத்தப்பட்ட கடற்கரையை பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சுரேஷ்ராஜன், பூங்கோதை, பரிதி இளம்வழுதி, ராமச்சந்திரன், மத்திய மந்திரி ஆ.ராசா, மேயர் மா.சுப்பிரமணியன், துணை மேயர் சத்யபாமா.
தலைமை செயலாளர் ஸ்ரீபதி, குடிநீர் வழங்கல் துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி, சட்டசபைசெயலாளர் செல்வராஜ், முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியன், மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், வி.எஸ். பாபு, முன்னாள் எம்.எல்.ஏ. சைதை கா.கிட்டு மற்றும் கவுன்சிலர்கள், கட்சி பிர முகர்கள் பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment