திருமண வாழ்க்கை பிரச்னையில் சிக்கியுள்ள கோல்ப் வீரர் டைகர் உட்சின் மனைவி விவாகரத்து கோரினால், அவருக்கு உட்ஸ் ரூ.1,300 கோடியை இழப்பீடாக தர வேண்டியிருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் நம்பர் 1 கோல்ப் வீரர் டைகர் உட்ஸ். கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த தடகள வீரர் என்ற பெயரை சமீபத்தில் பெற்றார். அவரது மனைவி எலின். 2 குழந்தைகள் உள்ளனர். டைகர் உட்சுக்கு ரச்செல் என்ற காதலி இருப்பது சமீபத்தில் தெரிய வந்தது. அடுத்தடுத்து, காதலிகள் எண்ணிக்கை அதிகரித்து 11 ஆக உயர்ந்தது. இதையடுத்து, அவரது மனைவி பிரிந்து சென்றார். எனினும், அவருடன் சேர்ந்து வாழ எதையும் இழக்க தயாராக இருப்பதாக உட்ஸ் அறிவித்தார். அத்துடன், தனது தவறுகளை ஒப்புக்கொண்டு பகிரங்க மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில், டைகர் உட்சின் மனைவி எலின் விவாகரத்து கோரி மனு செய்தால், அவருக்கு உட்ஸ் ரூ.1,300 கோடி இழப்பீடு தர வேண்டியிருக்கும் என்று லண்டனைச் சேர்ந்த மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் டைகர் உட்ஸ், கோல்ப் பந்தய வெற்றிகள், விளம்பர ஒப்பந்தங்களில் சுமார் ரூ.2,600 கோடி சம்பாதித்துள்ளார். அவரை எலின் திருமணம் செய்து கொண்டும் 5 ஆண்டுகளாகிறது. எனவே, திருமணம் ஆனது முதல் கணவரின் வருமானத்தில் மனைவிக்கு சமபங்கு உள்ளதாக விவாகரத்து வழக்கில் எலின் வாதாடலாம்.
அமெரிக்க சட்டப்படி அது ஏற்றுக் கொள்ளப்பட்டால், டைகர் உட்சின் 5 ஆண்டுகால வருமானமான ரூ.2,600 கோடியில் பாதி தொகையாக ரூ.1,300 கோடியை எலின் இழப்பீடாக பெற முடியும் என்று கலிபோர்னியாவைச் சேர்ந்த சட்ட நிறுவனம் தெரிவித்ததாக மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment