Pages

Saturday, December 19, 2009

100 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு பத்திரிகை மீது கோத்தபயா வழக்கு

சரணடைந்த விடுதலைப் புலி தலைவர்களை கொலை செய்ய உத்தரவிட்டதாக, அவதூறாக செய்தி வெளியிட்ட பத்திரிகை மீது மான நஷ்ட வழக்கு தொடரப் போவதாகவும், சம்பந்தப்பட்ட பத்திரிகை நூறு கோடி ரூபாய் நஷ்ட ஈடாக தர வேண்டும் என்றும், இலங்கை பாதுகாப்பு செயலர் கோத்தபயா ராஜபக்ஷே நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.இலங்கையின் பிரபல பத்திரிகையான சண்டே லீடரில், ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவின் பேட்டி சமீபத்தில் வெளியாகி இருந்தது. இதில், ராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலி தலைவர் நடேசன் உள்ளிட்டோரை, கொலை செய்யும்படி இலங்கை பாதுகாப்பு செயலர் கோத்தபயா ராஜபக்ஷே உத்தரவிட்டதாக, பொன்சேகா தெரிவித்து இருந்தார்.


இது தொடர்பாக, கோத்தபயா சார்பில் அவரது வக்கீல் சனத் விஜேவர்த்தனா, சம்பந்தப்பட்ட பத்திரிகை அலுவலகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:சரணடைந்த புலி தலைவர்களை கொல்வதற்கு நான் உத்தரவிட்டதாக, தவறான செய்தி பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக, அந்த பத்திரிகை தனது அடுத்த வெளியீட்டில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த செய்தியையும் வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில், கோர்ட்டில் மான நஷ்ட வழக்கு தொடரப்படும். தவறான செய்தி வெளியிட்டதற்காக, எனக்கு 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக தர வேண்டும்.இவ்வாறு நோட்டீசில் கோத்தபயா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment