Pages

Friday, December 18, 2009

நீலகிரியில் புதிய குழப்பம்


நீலகிரி மாவட்டத்தில் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வழங்கப்படும் இலவச நிலம் மற்றும் வீடு கட்டும் திட்டங்களை செயல்படுத்தும் போதும், மண்வளத்துறை மற்றும் புவியியல் துறையின் அங்கீகாரம் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.



மலை மாவட்டமான நீலகிரியின் நில அமைப்பு பல்வேறு மாறுதல்களை கொண்டுள்ளதால், கட்டடம் கட்டுவதற்கான தரமுள்ள நிலங்களை தேர்வு செய்து, அதில் மட்டுமே கட்டுமானங்கள் அமைக்க அனுமதி வழங்கப்படுகிறது. இதன்படி, "மாஸ்டர் பிளான்' சட்டத்தின் கீழ் ஒரு குடியிருப்பு அமைக்க வனத்துறை, கணிமவளத்துறை, மண்வளத்துறை ஆகியவற்றின் தடையில்லாத சான்று பெற்ற பின், மாவட்ட நிர்வாகமோ அல்லது உள்ளாட்சி நிர்வாகமோ அனுமதி வழங்க வழிவகை செய்யப்பட்டது. இதில், ஏற்படும் தாமதத்தை தவிர்க்க சிறிய வீடுகட்டும் மக்களுக்காக அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளே இத்தகைய அனுமதிகளை பெற்று தந்து வந்தன. அதில், நடந்த பல்வேறு குளறுபடிகளால் தான் நில வகைகளில் உள்ள பிரிவுகளை பின்பற்றாமல், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மசினகுடி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாய நிலங்கள் அனைத்தும் கட்டடங்களாக மாறி வருகின்றன.


விதிமீறலால் விபரீதம்: "அரசாலும், புவியியல் துறையாலும் அறிவுருத்தப்பட்ட 33 டிகிரி சாய்வான நிலப்பகுதிகளில் கட்டடம் கட்டக்கூடாது,' என்ற எச்சரிக்கை காற்றில் பறக்கவிடப்பட்டு, சாய்வான பகுதிகளில் கட்டடங்கள் பெருகி உள்ளன. பல பகுதிகள் கடந்த நவம்பர் 7ம் தேதி முதல் பெய்த கனமழையில் தரைமட்டமாகின. உதாரணமாக, ஊட்டி லவ்டேல் சந்திப்பு, டைகர்ஹில், தலையாட்டிமந்து, நொண்டிமேடு உட்பட பல இடங்களில் ஏற்பட்ட கட்டட இடிபாடுகள் அனைத்தும் 33 டிகிரி சாய்வான நிலப்பகுதிகள் தான். இவை ஏற்கனவே அபாயகரமான பகுதிகளாக அறிவிக்கப்பட்டவை.


அரசு துறைகளின் தவறுகள்: அபாயகரமான பகுதிகளில், வீடுகளை கட்டட பணம் படைத்தவர்கள் மட்டும் விதிகளை மீறி முன்வருகின்றனர். இதே விதிமீறல்களில் அரசு துறைகளும் ஈடுபட்டு வருகின்றன என்பது அதிர்ச்சியான உண்மை. ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்காக மத்திய, மாநில அரசுகளின் சார்பில் தொகுப்பு வீடு கட்டும் திட்டம்; இலவச வீட்டு மனை திட்டம்; "ஸ்லெம் டெவலெப்மென்ட்' திட்டம் என பல்வேறு திட்டங்களின் கீழ் வீடுகள் கட்டித்தரப்படுகின்றன. கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கட்டடப்படும் வீடுகள் ஒரளவு மக்களுக்கு பயனளிப்பதாக உள்ளன. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் அரசால் கட்டி கொடுக்கப்பட்ட பல வீடுகள் அபாயகரமான இடங்கள் அரசு அதிகாரிகளின் அறிவுருத்தல்களின் பேரில் அமைக்கப்பட்டுள்ளது என்பது வியப்பளிப்பதாக உள்ளது.


திட்டங்களுக்காக மக்கள் "பலிகடா': மத்திய, மாநில அரசுகளால் ஒவ்வொரு நிதியாண்டின் போது அளிக்கப்பட்டும் வீடு கட்டும் திட்ட நிதிகள் குறிப்பிட்ட காலத்துக்குள் பயன்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில், அந்த நிதிகள் மீண்டும் அரசுக்கே திரும்ப போய்விடும். இந்த சூழ்நிலையில், பல கோடி ரூபாய் மதிப்பிலான குடியிருப்பு திட்டங்களை செயல் படுத்தினால், சில அதிகாரிகளுக்கும், சில ஒப்பந்ததாரர்களுக்கும் பெரும் தொகை "கமிஷனாக' கிடைக்கிறது. இதில், திட்டமும் நிறைவேற்றப்பட்டு, அவர்களும் பணம் படைத்தவர்களாக மாறிவிடுகின்றனர்.


இந்த சூழ்நிலையில், ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்து, அதில், வீடுகளை கட்டி அரசியல் வாதிகளின் முன்னிலையில் திறப்பு விழா கண்டால் போதும் என்ற குறிகோளுடன் கடந்த காலங்களில் பல அதிகாரிகள் செயல்பட்டதால், அரசின் தொகுப்பு குடியிருப்புகள் அபாயகரமான பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசால் கட்டப்பட்ட வழங்கப்பட்ட தொகுப்பு வீடுகள் அல்லது நகராட்சி நிர்வாகத்தின் வீடுகட்டும் கடனுதவி மூலம் அமைக்கப்படும் வீடுகள் அனைத்தும் எவ்வித முறையான அனுமதியின் பேரில் அமைக்கப்படவில்லை. பொதுமக்கள் வீடுகட்ட வேண்டுமெனில் வனத்துறை, கணிமவளத்துறை, மண்வளத்துறை ஆகியவற்றில் தடையில்லா சான்று பெற வேண்டும் என அறிவுருத்தும் அதிகாரிகள், ஏழை மக்களுக்கு வீடு அளிக்கும் இடங்களில் இத்தகைய ஆய்வுகள் நடப்பதில்லை.


அரசுகள் விழிக்குமா: மலை மாவட்டத்தில் எதிர்காலத்தில் ஏற்படும் பேரழிவுகளில் இருந்து மக்களை காக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. குறிப்பாக அரசால் மக்களுக்கு வழங்கப்படும் இலவச வீடுகள், நகராட்சிகளால் வழங்கப்படும் வீடுகட்ட கடனுதவிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் வழங்கப்படும் வீடுகள் ஆகியவை பாதுகாப்பான இடங்களில் மட்டுமே அமைக்கப்பட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். "உதவி கரம் நீட்டுகிறோம்' என்ற போர்வையில் அரசு துறைகளும், தனியார் நிறுவனங்களும் ஏதாவது ஒரு இடத்தில் வீடுகளை கட்டிக்கொடுத்து, "கமிஷனுக்காக' திட்டங்களை நிறைவேற்றுவதை தவிர்த்து, ஏழை மக்களின் எதிர்கால வாழ்வை கருத்தில் கொண்டு, பாதுகாப்பான இடங்களை தேர்வு செய்து, தொலை நோக்கு பார்வையில் இலவச குடியிருப்புகளை கட்டித் தந்தால் மட்டுமே பேரழிவு காலங்களில் விரயமாகும் ஏழை மக்களின் உயிர்பலிகளை தடுக்க முடியும்.

No comments:

Post a Comment