Pages

Tuesday, December 1, 2009

திருமணம் கட்டாய பதிவு கோர்ட் அதிரடி உத்தரவு ?

"அனைத்து திருமணங்களும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். உரிய நாளுக்குள் பதிவு செய்யாவிட்டால் அல்லது தவறான தகவல் அளித்தால் குற்ற வழக்கு தொடரப்படும்' என்று, பதிவுத் துறை தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் 24ம் தேதி முதல் இது அமலுக்கு வந்துள்ளது.
தமிழக அரசின் பதிவுத் துறை தலைவர் சிவக்குமார் வெளியிட்டுள்ள உத்தரவு:தமிழக அரசு இந்த ஆண்டு இயற்றிய திருமணங்கள் பதிவுச் சட்டப்படி, பல மதங்களைச் சேர்ந்த இந்திய குடிமக்கள், நவம்பர் 24ம் தேதி முதல், தமிழகத்தில் நடக்கும் அனைத்து திருமணங்களையும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். பல்வேறு மதச் சட்டங்களின் கீழ் திருமணம் பதிவு செய்திருந்தாலும், இந்தச் சட்டத்தின் மூன்றாவது பிரிவின் கீழும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.இந்த சட்டப்படி, பதிவுத் துறைத் தலைவர், தலைமை திருமணப் பதிவாளராகவும், மாவட்ட பதிவாளர்கள் அனைவரும் மாவட்ட திருமணப் பதிவாளர்களாகவும், சார்பதிவாளர்கள் அனைவரும் திருமணப் பதிவாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.திருமணப் பதிவுக்கான விண்ணப்பங்கள் இலவசமாக, அனைத்து பதிவு அலுவலகங்களிலும் வழங்கப்படும்.
கட்டாய திருமணப் பதிவுக்கான விவரங்கள் மற்றும் படிவங்கள், துறையின் இணையதளத்தில் (www.tnreginet.net) வெளியிடப்பட்டுள்ளன. இதிலிருந்து விவரங்களை அறிந்து, படிவங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.திருமணப் பதிவுக்கான படிவம் மற்றும் விண்ணப்பத்தில் எவ்வித அடித்தலோ அல்லது பிழைகளோ இன்றி பூர்த்தி செய்து, மணமக்கள், திருமணம் நடத்தி வைத்தவர் மற்றும் இரு சாட்சிகளின் கையெழுத்துடன், திருமணம் நடந்ததற்கான ஆதாரம், இருப்பிட மற்றும் வயது தொடர்பான ஆதார ஆவணங்களுடன், திருமணம் நடந்த 90 நாட்களுக்குள் 100 ரூபாய் கட்டணத்துடன் (90 நாட்களுக்கு மேலானால், 150 ரூபாய் கட்டணம்) திருமணம் நடந்த எல்லைக்கு உட்பட்ட சார்பதிவாளரிடம் அளிக்க வேண்டும். அல்லது அஞ்சல் வழி அனுப்ப வேண்டும்.
திருமணத்துக்கான சாட்சிகளின் முகவரி மற்றும் ஆள் அறிவதற்கான அடையாள சான்று நகல்கள் இணைக்க வேண்டும். விண்ணப்பமும், ஆதாரங்களும் முறையாக இருந்தால், சம்பந்தப்பட்ட திருமணப் பதிவாளர், மனுதாரருக்கு ஒப்புதல் அளிப்பார். உரிய வகையில் இல்லாத மனுக்கள், குறைகளை சரிசெய்து திரும்ப அளிக்குமாறு மனுதாரரிடம் திரும்ப அளிக்கப்படும்.மணமக்கள் அல்லது சாட்சிகளின் அடையாளங்கள் குறித்தும், அவர்கள் அளித்த தகவல்களின் உண்மைத்தன்மை குறித்தும் சந்தேகம் ஏற்பட்டால், மணமக்களுக்கு வாய்ப்பளித்து, விசாரணைக்குப் பின், திருமணப் பதிவாளர் திருப்தி அடையாவிட்டால், அத்தகைய திருமணப் பதிவுகள் அவரால் மறுக்கப்படும்.இந்த மறுப்பு உத்தரவு மீது, சம்பந்தப்பட்ட நபர்கள், உத்தரவு பெற்ற 30 நாட்களுக்குள் மாவட்ட பதிவாளரிடம் மேல்முறையீடு செய்யலாம்.
அந்த மேல்முறையீடு மீது மாவட்ட பதிவாளர் பிறப்பிக்கும் உத்தரவு திருப்தி இல்லையெனில், 30 நாட்களுக்குள் பதிவுத் துறைத் தலைவருக்கு மேல்முறையீடு செய்யலாம். பதிவுத் துறை தலைவரின் உத்தரவே இறுதியானது.திருமணங்கள் பதிவுச் சட்டம் அமலுக்கு வந்துள்ள நவம்பர் 24ம் தேதி முதல் நடக்கும் அனைத்து திருமணங்களும், எந்த ஜாதி மற்றும் மதமாயிருப்பினும், உரிய நாளில் பதிவு செய்யாவிட்டாலோ, தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிந்தாலோ, விதி மீறல் இருந்தாலோ, சம்பந்தப்பட்ட நபர் மீது குற்ற வழக்கு தொடரப்பட்டு, நிரூபிக்கப்பட்டால், அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு பதிவுத் துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment