
1977 தேர்தலில் வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர், தமிழக முதல்_ அமைச்சராகப் பொறுப்பேற்றார். அவர் கடைசியாக நடித்த படம் "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்.
சிவாஜிகணேசனை வைத்து "திருவிளையாடல்", "சரஸ்வதி சபதம்", "தில்லானா மோகனாம்பாள்" முதலான வெற்றிப்படங்களை எடுத்து வந்த ஏ.பி.நாகராஜன், எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் தயாரிக்க விரும்பினார். அதற்கு எம்.ஜி.ஆர். சம்மதித்தார்.
"நவரத்தினம்" என்ற கதையை உருவாக்கினார், ஏ.பி.நாகராஜன். 9 பெண்களை எம்.ஜி.ஆர். சந்திப்பது போன்ற கதை. எம்.ஜி.ஆருடன் லதா கதாநாயகியாக நடித்தார். குன்னக்குடி வைத்தியநாதன் இசை அமைத்தார்.
எம்.ஜி.ஆருக்கு ஏற்றபடி இருக்கவேண்டும் என்று, ஏ.பி.நாகராஜன் மிக சிரமப்பட்டு கதையை உருவாக்கினார் என்றாலும், அது எம். ஜி.ஆர். ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. எனவே, எதிர்பார்த்த அளவுக்கு படம் பெரிய அளவில் ஓடவில்லை.
"இன்று போல் என்றும் வாழ்க", "மீனவ நண்பன்" ஆகிய படங்களும் 1977_ல் வெளிவந்தன. அகிலன் எழுதிய "கயல்விழி" என்ற வரலாற்று நாவலை பிரமாண்டமான படமாக "சோளீஸ்வரர் கம்பைன்ஸ்" நிறுவனம் தயாரித்தது. இதில் எம்.ஜி.ஆருடன் லதா, பத்மபிரியா ஆகியோர் நடித்தனர்.
படத்தை ப.நீலகண்டன் டைரக்ட் செய்தார். படம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. சில காட்சிகள் மட்டும்தான் பாக்கி. இந்நிலையில், 1977 ஜுன் மாதத்தில் தமிழக சட்டசபை தேர்தல் நடந்தது. அதில் அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதல்_ அமைச்சராக எம்.ஜி.ஆரை கட்சி எம்.எல். ஏ.க்கள் தேர்ந்தெடுத்தனர்.
"மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்" படத்தில் மீதியிருந்த காட்சிகளை இரவு_ பகலாக நடித்துக் கொடுத்துவிட்டு, 30_6_1977_ல் முதல்_அமைச்சராக பதவி ஏற்றார், எம்.ஜி.ஆர்.
அவர் முதல்_அமைச்சராகி 6 மாதங்களுக்குப் பின், 1978 பொங்கல் தினத்தன்று "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்" வெளிவந்தது. இது நூறு நாள் படமாக அமைந்தது.
"மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்"தான், எம்.ஜி.ஆர். நடித்த கடைசி படம். முதல்_ அமைச்சரான பிறகு அவர் படங்களில் நடிக்கவில்லை. எம்.ஜி.ஆரின் முதல் படமான "சதிலீலாவதி" 28_3_1936_ல் வெளிவந்தது. கடைசி படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் 14_1_1978_ல் வெளிவந்தது. இந்த 42 வருட காலத்தில் அவர் நடித்த மொத்த படங்கள் 136.
எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் இணைந்து நடித்தவர் ஜெயலலிதா. அவர் 28 படங்களில் நடித்தார். அதிகப் படங்களில் அவருடன் நடித்த மற்ற நடிகைகள்: சரோஜாதேவி 26; லதா 13; பானுமதி 10; பத்மினி 8; கே.ஆர். விஜயா 8; டி.ஆர்.ராஜகுமாரி 8; அஞ்சலிதேவி 5; மஞ்சுளா 5.
அதிக படங்களை டைரக்ட் செய்தவர்கள்:_
ப.நீலகண்டன் 17; எம்.ஏ.திருமுகம் 16; டி.ஆர்.ராமண்ணா 8; கே.சங்கர் 8. கிருஷ்ணன் பஞ்சு, ஏ.காசிலிங்கம், டி.ஆர்.ரகுநாத், பி.ஆர்.பந்துலு, சாணக்யா, எம்.கிருஷ்ணன் தலா 4 படங்களை டைரக்ட் செய்தனர்.
வில்லன்கள்
எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் நடித்த நடிகர்கள், வில்லன்கள்:_ எம்.என்.நம்பியார் 63; அசோகன் 57; பி.எஸ்.வீரப்பா 23; ஆர்.எஸ்.மனோகர் 23; எம்.ஆர். ராதா 20; நாகேஷ் 42; தேங்காய் சீனிவாசன் 26.
கதை_ வசனம்
அதிக படங்களுக்கு கதை_வசனம் எழுதியவர்கள்:_ சொர்ணம் 16; ஆர்.கே.சண்முகம் 15; ஆரூர்தாஸ் 14; மு.கருணாநிதி 10; கண்ணதாசன் 7; சக்தி கிருஷ்ணசாமி 6; ஸ்ரீதர் 3.
No comments:
Post a Comment