Wednesday, October 14, 2009
சீனர்களை மையமாகக் கொள்ளாதிருப்பது சிங்கப்பூரின் பலம்:பிரதமர் லீ
ஆசியாவின் வளர்ச்சியைப் பயன்படுத்தி முன்னேற சிங்கப்பூரின் நிலை வலுவாக உள்ளது என்றார் பிரதமர் லீ சியன் லூங்.
அதற்கான காரணங்களை விளக்கிய அவர், பிரெஞ்சு நிறுவனத்தின் தலைமை பொருளியல் வல்லுநர் கூறியதை மேற்கோள் காட்டினார்:
“ஷங்காய், ஹாங்காங் நகரங்கள் போட்டியாக வரலாம். ஆனால் அவை சீனர்களை மையமாகக் கொண்ட நகரங்கள். சிங்கப்பூர் அப்படியல்ல. இது சிங்கப்பூரின் பலம்.
“ஆசியாவில் சிங்கப்பூர் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாகத் திகழ்கிறது. ‘தெளிவான, ஒழுங்கான நிலையான விதிகளைக்’ கொண்ட நிதி மையமாக விளங்குகிறது.
“ஆசியாவின் முக்கிய நிதி மையம், ஏற்றுமதி மையம் என்ற இரு நிலைகளிலும் சிங்கப்பூர் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
“சிங்கப்பூர் பொருளியல் மந்தநிலையிலிருந்து துரித கதியில் மீண்டு வந்ததற்கு இதுவே முக்கிய காரணம்,” என்று அந்த பொருளியல் வல்லுநர் விவரித்ததாக பிரதமர் சொன்னார்.
இந்த வட்டாரத்தில் காலூன்ற பிரெஞ்சு நிறுவனங்கள் சிங்கப்பூரைத் தளமாகப் பயன்படுத்த இவையே காரணம் என்றார் பிரதமர் லீ.
சிங்கப்பூரை நாடும் ரஷ்ய வர்த்தகர்
இரு வாரங்களுக்கு முன்னர் ரஷ்யா - சிங்கப்பூர் வர்த்தக கருத்தரங்கிற்காக சிங்கப்பூர் வந்திருந்த ரஷ்ய வர்த்தகர் பற்றி பிரதமர் லீ குறிப்பிட்டார்.
குளியலறை பொருட்களைத் தயாரிக்கும் அவரது நிறுவனம் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் உள்ளது.
உலக நாடுகளில் இருந்து தயாரிப்புப் பொருட்களை வாங்கும் கொள்முதல் மையங்கள் லண்டன், ஷென்சென் நகரங்களில் உள்ளன.
இந்த இரு கொள்முதல் மையங்களையும் ஒன்றிணைத்து, உலகக் கொள்முதல் மையத்தை சிங்கப்பூரில் நிறுவ அவர் முடிவெடுத்துள்ளார்.
தமது குடும்பத்துடன் சிங்கப்பூரில் குடியேற அவர் முடிவு செய்துள்ளார் என்றார் திரு லீ.
ஜப்பான் நிறுவனங்களின் ஆர்வம்
பிரதமர் லீ ஜப்பான் பயணம் மேற்கொண்டிருந்தபோது, சிங்கப்பூரின் பொருளில் பற்றியும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் ஜப்பானிய வர்த்தகர்கள் பிரதமரிடம் வினவினர்.
இந்த வட்டாரத்தில், உதாரணமாக இந்தியாவில் வர்த்தகம் செய்ய விரும்பும் ஜப்பானிய நிறுவனங்கள் சிங்கப்பூரைத் தளமாகப் பயன்படுத்த விழைவதாகக் கூறின.
நீர்வள தொழில்நுட்பநிறுவனங்கள் போன்ற துறைகளைச் சார்ந்த வேறு பல நிறுவனங்கள் சிங்கப்பூருடன் இணைந்து உலகளாவிய திட்டங்களை மேற்கொள்ள விரும்பம் தெரிவித்தன என்றார் பிரதமர்.
ஜப்பானிய நிறுவனங்கள் மட்டுமின்றி, ‘ரோல்ஸ் ராய்ஸ்’, ‘அபட் லபோரட்டரீஸ்’, ‘த்ரீஎம்’ போன்ற பிரபல நிறுவனங்களும் சிங்கப்பூரைத் தளமாகக்கொள்ள விரும்புவதாக லீ கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment