Pages

Wednesday, October 28, 2009

மாணவி ஆற்றில் மூழ்கி இறந்தார்

கோலாலம்பூர்

மலேசியாவில் கம்பார் ஆற்றுக்கு குறுக்கே புதிதாகக் கட்டப்பட்ட தொங்கு பாலம் ஒன்று சரிந்து விழுந்தபோது ஒரு மாணவி ஆற்றில் மூழ்கி இறந்தார்.
பேராக் மாநிலத்தில் பள்ளி முகாமில் பங்குகொண்ட மாணவர்கள் கம்பாருக்கு அருகில் உள்ள கோலா டிபாங் தேசியப் பள்ளிக் கூடத்திற்கு அந்தப் பாலத்தின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.
அந்த முகாமில் கலந்துகொண்ட மாணவர்களில் ஒரு பகுதியினர் பாலத்தைக் கடந்தபோது இந்த விபரீதம் ஏற்பட்டது.
பாலம் சரிந்து விழுந்தபோது அந்த பாலத்தைக் கடந்த 22 மாணவர்களும் ஆற்றில் விழுந்தனர். அவர்களில் பலர் தொங்கு பாலத்தின் கயிறுகளைப் பிடித்துக் கொண்டு உயிர் தப்பினர்.
சில மாணவர்களை ஓர் ஆசிரியரும் பள்ளிக்கூட காவலாளியும் ஆற்றிலிருந்து மீட்டனர்.
திங்கட்கிழமை இரவு மணி 10 மணிக்கு நிகழ்ந்த அந்தச் சம்பவத்தின் போது ஆற்றின் சுழற்சி கடுமையாக இருந்தது.
ஆற்று நீரில் மூழ்கி இறந்த மாணவியின் சடலத்தை நேற்று காலை மீட்புப் பணியாளர்கள் கண்டுபிடித்ததாக பேராக் போலிஸ் படைத் துணைத் தலைவர் சாக்காரியா யூசோப் கூறினார்.
இறந்த சிறுமி 11 வயது தீனா தேவி நாதன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
அந்த சிறுமியின் சடலம் கம்பார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக போலிசார் கூறினர்.
‘ஒரே மலேசியா முகாமில்’ பங்குகொள்ள கம்பார், பத்து காஜா பகுதிகளில் உள்ள 60 தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 300 மாணவர்கள் சென்றிருந்தனர்.
அந்த முகாமில் பங்குகொண்ட மாணவர்களின் பெயர்களை தெரிவிக்குமாறு கல்வித் துறையை போலிசார் கேட்டுக் கொண்டுள்ளனர். அந்த முகாமில் 23 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
விபத்தில் உயிர் தப்பிய 12 வயது முகம்மது அஜிட் டெங் மற்றும் மதிவாணன் உள்ளிட்ட சில மாணவர்கள் அந்த துயரச் சம்பவம் பற்றி விவரித்தனர்.
ஆற்றில் விழுந்த மாணவர்களில் 8 பேரைக் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்ததாக ஆசிரியர் முகம்மது சஃப்ரி அப்துல் ரபார் கூறினார். உலோகக் கம்பியைப் பிடித்துக் கொண்டு தொங்கிக்கொண்டிருந்த ஒரு மாணவரை தன்னால் காப்பாற்ற முடியவில்லை என்றும் ஆற்று நீரில் அந்த மாணவர் அடித்து செல்லப்பட்டதாகவும் அந்த ஆசிரியர் கூறினார். அந்த புதிய பாலம் இரண்டு வாரத்திற்கு முன்புதான் கட்டி முடிக்கப்பட்டதாக மலேசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் அந்த துயரச் சம்பவம் குறித்து நாடாளுமன்றம் விவாதிக்க வேண்டும் என்று கோரும் அவசரத் தீர்மானம் ஒன்றை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பித்துள்ளனர்.
“இரவு நேரத்தில் ஆற்றின் சுழற்சி கடுமையாக இருந்த நேரத்தில் ஏன் அந்த மாணவர்கள் ஆற்றைக் கடக்க அனுமதிக்கப்பட்டனர்? என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளதாக மலேசிய இணையப் பக்கத் தகவல் கூறியது.

No comments:

Post a Comment