Pages

Friday, October 23, 2009

ராணுவ அதிகாரி சுட்டுக் கொலை


இஸ்லாமாபாத்

பாகிஸ்தானில் ராணுவ அதிகாரி ஒருவரை அடையாளம் தெரியாத துப்பாக்கிக்காரர்கள் சுட்டுக் கொன்றதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தாக்குதலில் அந்த ராணுவ அதிகாரியின் கார் ஓட்டுநரும் கொல்லப்பட்டார். மற்றொரு ராணுவ வீரர் அதில் படுகாயம் அடைந்தார்.
தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று அத்தாக்குதல் நடந்துள்ளது. ராணுவ அதிகாரி பிரிகேடியர் மோனுதின் பயணம் செய்த ராணுவ வாகனத்தின் மீது துப்பாக்கிக் காரர்கள் சுட்டதில் அவர் கொல்லப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதாக போலிசார் கூறினார். அத் தாக்குதலில் அந்த ராணுவ வாகனம் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப் பட்டதாகவும் டயர்கள் பழுதடைந்ததாகவும் கண்ணாடிக் கதவுகள் உடைந்து சிதறியதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாதக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.
பாகிஸ்தானில் ராணுவத்தினருக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையில் கடும் சண்டை நடந்து வருகிறது.
ராணுவத்தினர் மேற்கொண்டு வரும் தாக்குதல்களுக்கு பதிலடியாக தீவிரவாதிகளும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ராணுவத் தளங்கள் மற்றும் அதிகாரிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
தென் வசிரிஸ்தான் பகுதியில் ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் நடந்து வரும் சண்டை தீவிரம் அடைந்துள்ளது.
இந்த சண்டையில் இதுவரை 170 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சண்டைக்குப் பயந்து ஏராளமானோர் அப்பகுதியிலிருந்து வெளியேறி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
இஸ்லாமாபாத்தில் அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் நடந்த தற்கொலைத் தாக்குலில் 6 பேர் கொல்லப்பட்டதையடுத்து அங்கு பள்ளிகளையும் பல்கலைக்கழகங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை வரை கல்வி நிலையங்கள் யாவும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment