Thursday, October 22, 2009
முல்லைப் பெரியாறு: தமிழகத்தின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்
முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்கு கேரளம் நடத்தும் ஆய்வுப் பணிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை நிராகரித்தது.
முல்லைபெரியாறில் தற்போதுள்ள அணையில் 136 அடி வரை தண்ணீர் தேக்கிவைக்கப்படுகிறது. தமிழகத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கிவைக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அணை பலம் இழந்துவிட்டதால் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தற்போதுள்ள அணைக்கு அருகிலேயே புதிய அணையை கட்ட கேரளம் முடிவு செய்தது.
இதையொட்டி வனப் பகுதியில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள கடந்த அக்டோபர் 6-ம் தேதி, தேசிய உயிரினங்கள் வாரியத்தின் நிலைக் குழு கூட்டத்தில் கேரளத்துக்கு பச்சைக் கொடி காட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அனுமதியின் பேரில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணிகளை கேரளம் மேற்கொள்ளத் தொடங்கியது.
இந்நிலையில் இதை எதிர்த்து தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. தமிழகத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.பராசரண் ஆஜரானார்.
நீதிபதிகள் டி.கே.ஜெயின், எம்.கே.சர்மா மற்றும் ஆர்.எம்.லோதா ஆகியோரடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கேரள அரசு மேற்கொண்டுள்ள சர்வே பணிக்கு தடை விதிக்கக் கோரும் தமிழகத்தின் மனுவை நிராகரித்து அவர்கள் கூறியதாவது:
முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணி முடிவுறும் முன்பே அதை நிறுத்துவதற்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. அதற்கான காலம் வந்துவிடவில்லை.
தற்போது கேரளம் மேற்கொண்டுள்ள ஆய்வுப் பணி உடனடியாக முடியக்கூடிய பணி அல்ல. இது பல மாதங்களுக்கு நீடிக்கும். அதேபோல் தற்போதுள்ள அணைக்கு பதிலாக புதிய அணையும் "ரெடிமேடாக' உடனடியாக வந்துவிடப் போவதில்லை. இதுதொடர்பாக கேரள அமைச்சர் வெளியிட்ட அறிக்கையால் தமிழகம் கவலை அடைந்துள்ளது. அறிக்கை விடுவது தேவையற்றது மற்றும் பொறுப்பற்றதுமாகும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் இரு தரப்பு வாதம் தொடர்ந்து நடைபெற்றது. மனு மீதான விசாரணை வியாழக்கிழமை மீண்டும் நடைபெறுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
All the rivers should be joined . Then only the problem will be solved. For each and everything going to the court will not fetch any solution.Meeranairscotland
ReplyDelete